Saturday, January 2, 2016

அந்தப் பெயர் அந்த நாய்க்குப் பிடிக்கவில்லை...

அ.முத்துலிங்கம் அவர்களின் சிறுகதைத் தொகுப்பான வம்சவிருத்தி கதைகளில் "துரி" என்ற கதையில் ஒரு பகுதி இது.)

அந்த நாய்க்குட்டி பிறந்து ஆறு வாரங்களிலேயே எங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தது. கால்களைத் தூக்கி ஆண் நாய் என்று நிச்சயித்துக் கொண்டு என்ன பெயர் வைப்பது என்ற விசாரத்தில் மூழ்கினோம். பல பெயர்களை நிராகரித்த பின்பு, "துரியோதனன்" என்ற பெயரை நான்தான் முன்மொழிந்தேன். என் மகன் என்னை கீழ்கண்ணால் ஊடுருவிப் பார்த்தான். பேர்களை "வீட்டோ" பண்ணும் உரிமை அவனிடம் இருந்தது. "ஆ, துரி என்று கூப்பிடுவோம்" என்று இறுதியில் சொல்லிவிட்டான். பெயரும் அப்படியே நிலைத்து விட்டது.

லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து எங்களைப் பார்க்க அடிக்கடி வரும் நண்பர் ஒருவருக்கு அந்தப் பெயர் பிடிக்கவில்லை. "ஏன், வேறு பெயர் கிடைக்கவில்லையா?" என்று கேட்டார். நான், "இல்லை, முதலில் திருதராஷ்டிரன் என்று வைப்பதாகத்தான இருந்தோம், ஆனால் அந்தப் பெயரில் நாய்க்கு அவ்வளவாக சம்மதமில்லை. அதுதான் 'துரியோதனன்' என்று வைத்திருக்கிறோம். இந்தப் பெயர் அதற்கு நன்றாகப் பிடித்துக் கொண்டது' என்று சொல்லிவிட்டேன். பிறகு அந்த நண்பர் வாயே திறக்கவில்லை. 
 இடக்காக அவருக்கு பதில் கூறினாலும், துரியோதனன் என்று பெயர் வைத்ததற்கு  காரணம் இல்லாமல் இல்லை. மகாபாரதத்தில் சிறப்பாக பேசப்படும் நட்பு கிருஷ்ணன், அர்ஜூனன் நட்புதான். இதிலே என்ன அதிசயம்? உண்மையில், எங்கள் இதிகாசங்களில் கூறியபடி மிகச் சிறந்த நட்புக்கும், விசுவாசத்திற்கும், அன்புக்கும் இலக்கணம் துரியோதனன்தான். அர்ஜூனனுடன் துவந்த யுத்தம் தொடங்கு முன்பு "உன் குலத்தை உரைப்பாயாக" என்று சபை நடுவே கேட்டதும் தலைகுனிந்த கர்ணனை கட்டித் தழுவி அந்தக் கணமே அவனை அங்கதேசத்து அரசனாக அபிஷேகம் செய்த துரியோதனனை மறக்க முடியுமா? சொக்கட்டான் விளையாட்டின் உச்சக் கட்டத்தில் பானுமதி எழுந்ததும் அவள் முந்தானையை கர்ணன் பிடித்து இழுக்க, முத்துமாலை அறுந்து சிதறிவிழ, உள்ளே வந்த வணங்காமுடி மன்னன் துரியோதனன் முழங்காலில் இருந்து, "பொறுக்கவோ, கோக்கவோ" என்று கேட்ட அவனுடைய ஆழ்ந்த நட்பின் அடையாளமாக வைத்த பெயரல்லவா இது? இந்த வியாக்கியானம் எல்லாம், கழிவுநீர் கால்வாய் திருத்தும் லாஸ் ஏஞ்சல்ஸ் நண்பருக்கு விளங்கவா போகிறது என்று நானும் பேசாதிருந்துவிட்டேன்....."
(நன்றி: அ.முத்துலிங்கம் அவர்களின் சிறுகதைத் தொகுப்பான வம்சவிருத்தி கதைகளில் "துரி" என்ற கதையில் ஒரு பகுதி இது.)





No comments:

Post a Comment