Saturday, January 2, 2016

படிக்கிறது திருவாசகம், இடிக்கிறது சிவன்கோயில்

காளமேகப் புலவர்
திருக்குடந்தையில் பிறந்து வளர்ந்த வடமானாகிய பிராணன் ஒருவன், ஸ்ரீரங்கத்தில் பெருமாள் கோயில் சுயம்பாகியாகிப் பரிசாரகம் செய்து கொண்டிருக்கையில், திருவானைக்காவில் உள்ள சம்புகேஸ்வரர் கோயில் தாசி ஒருத்தி மோகனாங்கி என்னும் பெயருடையவள், அதிக அழகும் ஆடல் பாடல்களிலே திறமையும் உடையவளாய் இருந்ததினால், அவன் அவளுடைய மோக வலையில் சிக்கித் தனக்கு அவள் இணங்கும் பொருட்டு, பெருமாள் பிரசாதம் முதலானவைகளை அவளுக்குக் கொண்டுபோய் கொடுத்து அவளோடு சம்பந்தப்படிருந்தான்.
அப்படி இருக்கும் அளவில், மார்கழி மாசத்தில் சம்புகேஸ்வரர் சந்நிதியில், மோகனாங்கிக்குத் திருவெம்பாவை பாடும் முறை வந்தபொழுது, "உன்கையில் பிள்ளை" என்னும் பாடலைப் பாடுகையில் அதில் "என் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க" என்ற தொடரை அவள் வாயினால் சொல்லித் தலைகுனிந்து கொண்டதைப் பார்த்து அவளுடனே கூடவிருந்த மற்றைய தாசிகள் எல்லாம் புன்சிரிப்புக் கொண்டு, தங்களுக்குளே இவள் சிவன் கோயில் தாசியாய் இருந்தும், பெருமாள் கோயில் சுயம்பாகியுடனே சம்மந்தப்பட்டிருக்கிறாளே! இஃதென்ன! "படிக்கிறது திருவாசகம், இடிக்கிறது சிவன்கோயில்" என்பதாக வாயினால் பேசுகிறதொன்று, நடக்கிறது வேறொன்றாய் இருக்கிறதே என்று அவளைப் பரிகாசம் பண்ணினார்கள். அது அவளுக்கு மார்பிலே தைத்து முதுகிலே உருவினது போல வருத்தத்தை விளைவித்ததனால், அன்றிரவு அந்த வைஷ்ணவன் வரும் தருணத்திலே தெருக்கதவைச் சாத்தி உள்ளே வரவேண்டாம் என்று தடுக்க, அவன் வாயிலுக்கு வெளியே நின்றபடி என்ன நிமித்தத்தால் இன்றைக்கு என்னைத் தடை செய்கிறாளென, மோகனாங்கி,  "நீ விஷ்ணு அடியான், நான் சிவடியாள், ஆகையால் உன் சம்பந்தம் எனக்கு தகாதென கூறினாள், அவன், அந்தாமரையன்னமே நின்னையானகன்றுற்றுவனே"  என்றபடி உன்னை நான் ஒரு பொழுதாயினும் விட்டுப் பிரிந்து சகிப்பேனோ? சகிக்க மாட்டேனாதலால், உன் தலை வாயிலிலேயே  நான்று கொண்டு (தூக்குமாட்டி) என் பிராணனை விட்டு விடுகிறேன் என்றான்.
இவளோ, இஃதேது பழிவந்து சேர்ந்துவிடுமோ என்று நினைத்து, நல்லது நான் வேண்டுமென்பது உனக்கு ஆவசியகமாயிருந்தால், (நான் தான் உனக்கு வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால்) நீ தீட்சை பண்ணிக் கொண்டு சைவன் ஆனால் உன் இஷ்டம்படி நடக்கிறேன் என்று சொல்கிறாள்.
அவன் காமப் பேய் கொண்டவனாகையால், "பெண்கள்பால் வைத்த நேயம் பிழைப்பரோ சிறியோர் பெற்றால்" என்ற விதமாய் அவளின் உறவைக் கைவிட மாட்டாமல், நீ சொன்னவன்னம் சைவ சமயத்தை அனுசரிக்கிறேன் என்று ஸ்ரீரங்கத்தை விட்டுச் சம்புகேசுரத்திற்கு வந்து சிவதீட்சை பண்ணிக் கொண்டு, அகிலாண்டவல்லி கோயில் பரிசாரசனாகி, தனக்கு அவ்விடத்தில் வரும்படிகளில் அவளுக்குக் கொடுத்து, மீந்ததைத் தன் ஜீவனத்துக்கு வைத்து அனுபவித்து கொண்டு வந்தான்.
அந்த நாளில் சம்புகேசுரத்தில் ஒரு சிவப் பிராமணன் தனக்கு, வித்தையில் பூரண பாண்டியத்தியம் உண்டாக வேண்டும் என வீம்புடன் திரிபுரை சக்கரம் ஸ்தாபித்து அதில் அத் தேவதைக்குரிய மந்திர பீஜாட்சரத்தைப் பிரணவ நமக சகிதமாக வரைந்து உருச் செபித்து நெடுநாளாக உபாசித்து கொண்டிருக்கிறான்.
ஒரு ராத்திரியில் நடுசாமத்தில் அகிலாண்ட நாயகி அழகான ஒரு சிறு பெண் போல வடிவெடுத்து வெள்ளை வஸ்திரம் உடுத்து வாய் நிறையத் தாம்பூலம் தரித்துக் கொண்டு உபாசகன் கண்ணுக்கெதிரே சென்று, "உன் வாயைத் திற என்று அந்த தாம்பூலத்தை அவன் வாயில் உழிழப் போகும் போது, அவன் நிர்ப்பாக்கியனாகையால், அவளை மகாதேவி என்று அறியாமல், "யாரடி நீ, எச்சில் தாம்பூலத்தை என் வாயிலே துப்ப வருகிறாய்! உனக்கு பைத்தியம் பிடித்திருக்கிறதா! அப்புறம் எட்ட நில்லடி!" என்று கடிந்து கொண்டான்.
அத்துடன் அவனை விட்டுவிட்டு, திரும்பி வருகையில், மோகனாங்கி அன்றைய ராத்திரியில் கோயிற்குட வரிசைக்கு வந்திருப்பதை அறிந்த அவள் மேல் மோகம் கொண்ட அந்த பரிசாரகன் அவளிடம், "நீ வீட்டுக்குப் போகும்போது என்னை வந்து அழைத்துப் போ; நானும் இன்று உன் வீட்டுக்கு சேர்ந்து போவோம்; அதுவரை நான் இந்த மண்டபத்தில் ஒரு மூலையில் படுத்திருக்கிறேன்" என்று கூறி அவள் வரும்வரை அந்த மண்டபத்தில் ஒரு மூலையில் படுத்திருக்கிறான்; மோகனாங்கி குடவரிசை முடிந்தபின்பு, இவனைத் தேடி, கிடைக்காமல், அவள் மட்டும் வீட்டுக்குப் போகிறாள். கோயிலில் இருந்தவர்கள் எல்லோரும் வெளியில் போய் விட்டார்கள்; கோயில் ஸ்தானிகர் முதலியவர்கள் கோயிலை காப்பிட்டு தங்கள் வீடுகளுக்கு சென்று விட்டார்கள்;
மோகனாங்கி எப்படியும் தன்னை வந்து எழுப்பி, அவள் வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போவாள் என்று ஆசையில் படுத்தவன், அப்படியே தூங்கிவிட்டான்.
இவன் கனவில் அந்த மோகனாங்கி வந்து விளையாடுகிறாள்; அதே நிலையில், சிறுமியாக வடிவெடுத்துள்ள வாயில் தாம்பூலத்துடன் வரும் அகிலாண்டநாயகி, தூங்கும் இவன் அருகில் வந்து, தன் வாயில் எச்சிலுடன் தாம்பூலத்தை அவன் வாயில் துப்பி "இதை தின்றுவிடு" என்றும் கூறினாள்.
மோகனாங்கி கனவில் இருக்கும் இவனோ, அது மோகனாங்கிதான் என்று நினைத்து, அவளின் எச்சில் தாம்பூலத்தை வாயில் ஏற்றுக் கொண்டு தின்று கனவில் மிதக்கிறான்.
இவன் பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியத்தினால், எச்சில் தாம்பூலத்தை மறுக்காமல் வாங்கியதினால், அகிலாண்ட நாயகி, அன்று முதல் அவனை, அளவில்லாமல் மழைபொழியும் காளமேகம் போல, தமிழில் "ஆசுகவி"  முதலாக சொல்லப்படும் நால்வகை கவிகளிலும் பாடும் சக்தியை கொடுத்தார். யாராவது ஒரு வார்த்தை சொன்னால் போதும், அதை முதலாக, அல்லது முடிவாக வைத்துக் கொண்டு உடனே கவி பாடுவிடும் திறமை இவருக்கு வந்துவிட்டது.
அகிலாண்டேஸ்வரியின் வரப்பிரதாசதத்தால் வந்த திறமை என்பதால், அது முதல் இவரை "காளமேகப் புலவன்" என்றே அழைத்தனர்.
**


No comments:

Post a Comment