Sunday, January 3, 2016

தோசை

தோசை பற்றிய வர்ணனை
பார்வதி என்றால் முதலில் நினைவுக்கு வருவது அவளுடைய தோசைதான். தோசை என்றால் 'காம்பஸ்' வைத்து வட்டம் அடித்தது போல இருக்கும். அந்த மணம் நாலு வீடு தள்ளி மணக்கும். ஆட்களை சுண்டி இழுக்கும்.
எங்கள் வீட்டிலிருந்து மூன்றாவது வீடுதான் பார்வதி வீடு. விடியற்காலை பல பலவென்று விடியும் போது கொழும்பு ரயில் வந்து சேரும். அதுதான் பார்வதி தோசை சுடும் மும்முரமான நேரம்.முதலில் தோசை மாவை அகப்பையில் எடுத்து தோசைக் கல்லில் ஊற்றுவாள். அதுவே ஒரு தனி அழகு. அது 'உஸ்' என்று சொல்லி வைத்தபடி அப்படியே வட்டமாக உருவெடுக்கும். கொஞ்சம் பொறுத்து தோசைக் கரண்டியால், அது பாதி காயும் போதே, கீழே கொடுத்து 'தெம்மி' மற்ற பக்கம் பிரட்டுவாள். அது படக்கென்று விழும். பிறகு அவதானித்து பொன்னிறமாக அது மாறும் போது எடுத்து ஓலைப் பெட்டியில் வைப்பாள்; அல்லது நீட்டிக் கொண்டிருக்கும் சில பேருடைய தட்டிலே போடுவாள்.
தோசை அப்ப ஆவி பறந்தபடி இருக்கும். எடுத்து நேராகப் பார்த்தால் ஊசி ஓட்டைகள் ஒரு நூறாவது பார்க்கலாம். எல்லா தோசையும் அதே மாதிரிதான் அச்சில் வார்த்தது போல வரும். அதிலே ஒரு 'விள்ளல்' எடுத்து வாயில் போட்டால் அது மெத்தென்று புளிப்பு கலந்த ஒரு ருசியாக மாறும்; தேவாமிர்தமாக இருக்கும். பார்த்துக் கொண்டிருக்கும் போதே கரைந்து விடும். சாதாரணமான தோசை மாவுக்கு இப்படி ஒரு மெதுமையையும், மணத்தையும், ருசியையும் சேர்ப்பதென்றால் அது ஒரு பரம ரகஸ்யம் தான். என்னுடைய அம்மாவும், மற்ற ஊர் பெண்டுகளும் அந்த ரகஸ்யத்தை அறிய எவ்வளவோ முயற்சித்தார்கள், ஆனால் பலிக்கவில்லை.
இந்த தோசையை அப்படியே சாப்பிடலாம். அதுக்குச் சேர்த்துக் கொள்ள ஒன்றுமே தேவையில்லைதான். ஆனால் பார்வதி அதற்கென்று ஒரு 'சம்பல்' செய்வாள். சம்பல் என்றால் சின்ன வெங்காயம், சிவப்பு செத்தல் மிளகாய், தேங்காய்ப்பூ, கொஞ்சம் உப்பு, ஒரு சொட்டுப் புளி என்று எல்லாம் போட்டு செய்ததுதான். இதற்கு கறிவேப்பிலையும் சேர்த்து ஒரு திவ்யமான மணம் வரும். சம்பலை கொஞ்சம் தொட்டு தோசையையும் விண்டு வாயில் போட்டால் அதுவே ஒரு தனி மயக்கம் தான்.
சம்பல் இடிக்கும்போது பார்வதி யாருடனும் கதைக்க மாட்டாள். 'நாணமாம்'. முணு முணுவென்று வாய்க்குள்ளே ஏதோ சொல்லுவாள்; மந்திரமோ என்னவோ......
(நன்றி; எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் "திகடசக்கரம்" என்று கதைத் தொகுப்பில் "பார்வதி" என்ற சிறு கதையில் ஒரு பகுதி இது)
 **

No comments:

Post a Comment