குடிகாரச் சின்னத்தம்பி
நான் சிறுவயதில் பார்த்த
ஒரு சம்பவத்தை விவரிக்கிறேன். எங்கள் கிராம வாழ்க்கையும் அதில் வாழ்ந்த மக்களின் பழக்க
வழக்கங்களும் என் நண்பர்களுக்கு வியப்பாக இருக்கிறது.
"எனக்கு அப்ப அஞ்சு, ஆறு வயது இருக்கும். 'குடிகாரச் சின்னத்தம்பி'
என்று தான் அவனுக்குப் பேர்; எங்களுக்குப் பயம்.
வீட்டிலே சோறு தீத்தும் போதுகூட 'குடிகாரச் சின்னதம்பி'
என்று சொல்லித்தான் தீத்துவார்கள்."
"ஒழுங்கையின் எத்தத்தில்
அவன் வரும் போதே நாங்கள் உள்ளே ஓடி விடுவோம். குடித்துவிட்டு ஆடிக் கொண்டே வருவான்.
வேட்டி அவிழ்ந்து விடும். வேட்டியை ஒரு கையால் இழுத்தபடியே வருவான் சின்னத்தம்பி."
"சும்மா வரமாட்டான்.
உரத்த குரலில் திட்டிக் கொண்டுதான் வருவான். அவனுடைய 'மூடைப்' பொறுத்தது. ஒரு நாளைக்கு முன்வீட்டு முருகேசுவைப்
பேசுவான். இந்த வேலிக்கும் அந்த வேலிக்குமாக 'உலாஞ்சி உலாஞ்சி'
தான் வருவான். இன்னொரு நாளைக்கு
நடராசாவை திட்டியபடியே வருவான். ஒரு நாளைக்கு அவன் பெண்சாதி; மற்றோரு நாளைக்கு அவன் தாயார். இப்படி."
எங்கள் ஊர் பெண்டுகள்
எல்லாம் அவன் இன்றைக்கு ஆரை வைகிறான் என்று வேலி வழியாலும் பொட்டு வழியாலும் காது கொடுத்துக்
கேட்டுக் கொண்டிருப்பார்கள். மற்ற வீட்டு ரகசியங்களை அவன் கொட்டக் கொட்டக் கேட்டுக்
கொண்டிருப்பதில் அவர்களுக்கு ஆர்வம்."
எங்கள் வீடு அவன் வீட்டுக்குப்
பக்கத்தில்தான். ஆனால் அவன் வீட்டுப் படலை அடுத்த ஒழுங்கை வழியாகத்தான் இருக்கும்.
அம்மா அவன் மனைவியை 'ராசக்கா' என்று தான் கூப்பிடுவாள். எங்கள் வீட்டுக் குந்தில் ஏறி நின்று பார்த்தால்
அவர்கள் வீட்டுக் கூரை தெரியும்."
"எங்கள் வீட்டுக்கு
ஒரு பாட்டு வாத்தியார் வருவார். அவர், அக்காவுக்கு
பாட்டு சொல்லிக் கொடுப்பார். ஹார்மோனியம் வாசித்தபடியே அக்கா அவர் சொல்லிக் கொடுப்பதைத்
திருப்பிப் பாடுவாள். அக்காவுக்கு அப்ப பதினாறு, பதினேழு வயதிருக்கும்."
"கனக சபா... பதி.....
தரி.....சனம்....."
ஒருநாள்,
"கண்டால்..... கலி.... தீ.....ரும்.... ஆ....."
"அக்கா இந்தப் பாட்டை
பாடுகிறாள். என் தகப்பனார் மரக் கட்டிலில் சப்பணம் கட்டிக் கொண்டு இருந்து ரசிக்கிறார்."
"மூன்று வீடு தள்ளி 'கனகசபாபதி, கனகசபாபதி' என்று ஒரு
இளம் பொடியன் சைக்கிளுக்குப் பின்னால் உமலைக் கட்டியபடி அடிக்கடி
அந்தப் பக்கம் ஓடிக் கொண்டிருப்பதுதான் அவன் வேலை",
"ஒருநாள் இந்தக்
குடிகாரன், வழக்கம்போல வேட்டியை இழுத்தபடி போறான். சத்தம்
போட்டுக் கத்தியபடியே. எல்லாப் பெண்டுகளும் தங்கள், தங்கள் வேலைகளை
விட்டுவிட்டு, காது கொடுத்துக் கேட்டபடியே இருக்கிறார்கள். அன்றைக்கு எங்களுடைய முறைபோலும்.
குடிகாரன் சொல்கிறான்.
"அது ஆரடி கனகசபாபதி? இது என்ன கூத்து? இதைக் கேட்பாரில்லையா?"
"அதற்குபிறகு, அக்கா அந்தப் பாட்டைப் பாடுவதையே நிறுத்தி விட்டாள். என் தகப்பனார் அப்படி
உத்தரவு போட்டு விட்டார். கொஞ்ச நாள் பிறகு பாட்டுக்காரரையும் வேண்டாமென்று விட்டார்.".......
"என்ன இழவுக்கு இஞ்ச
குடிச்சுப் போட்டு வாறாய்?"
"ஏண்டி, உன்ரை கொப்பற்ற சீதனத்தில் குடிக்கிறேனா? இது அவன்.
"மூன்று நாள் பிள்ளைகளுக்கு
சாப்பாடில்லை. நாள் மாறி நாள் இப்பிடி வாறியே? உனக்கு கொஞ்சமாவது
அறிவிருக்கா?"
"எந்தப் பெண்ணும்
கேட்க வேண்டிய கேள்விதான்."
இப்ப அடி விழும் சத்தம்.
பிறகு ராசக்கா விளக்கு மாத்தைப் பிடுங்கி, 'ரப்பிலே'
செருகிவிட்டாள். இவனுக்கு அது எட்டவில்லை. எம்பி எம்பிப் பார்த்தான்.
"எடுத்துக் குடடி, எடுத்துக் குடடி."
"காலால் அவளை உதைக்கிறான்."
"மனிதனுடைய பொறுமைக்கும்
ஒரு எல்லை உண்டல்லவா? ராசக்கா அறைக்குள் புகுந்து கதவைப்
படார் என்று சாத்தும் சத்தம். கொஞ்சம் நேரம் அமைதி, ஊர் முழுக்க
மூச்சுவிடாமல் காதைக் கூர்மையாக்கி வைத்துக் கொண்டிருக்கிறது.
"அம்மா தான் முதலில்
பார்த்தாள். வீட்டுக் கூரை 'டங்' என்று
ஒரு கணம் ஆடியதை. 'ஐயோ, இஞ்சருங்கோ,
என்னென்டு போய் பாருங்கோ" என்று கத்தினாள் அம்மா.
"எல்லோரும் வேலியைப்
பாய்ந்தும், கிணத்தை தாண்டியும் வந்து விட்டார்கள். கதவு
பூட்டியிருக்கிறது. சின்னராசு தான் உலக்கையால் கதவை உடைத்து முதலில் உள்ளுக்கு போறான்.
பிறகு அம்மா..."
"நாக்கு வெளியே நீண்டுவிட்டது.
ராசக்கா முகட்டில் இருந்து ஒரு சேலையில் தொங்கிக் கொண்டிருந்தாள். எல்லோருமாகப் பிடித்து
கீழே இறக்கி தண்ணி தெளிக்கிறார்கள். ஒரு கணம் பிந்தியிருந்தால் மரணம் தான்."
சின்னத்தம்பிக்கு வெறி
முறிந்து விட்டது. தலையில் கைவத்தபடி ஒரு மூலையில் இருக்கிறான். பிள்ளைகள் கத்துகத்தென்று
கத்துகிறார்கள்.
கொக்குவில் சனம் எல்லாம்
வீட்டுக்குள்; விதானையாரும் வந்து விட்டார்.
"ஐயா, ஐயா! என்னைக் கொல்லுங்கோ! இந்தச் சனியனை இனி நான் தொட மாட்டேன். இது சத்தியம்"
என்று கத்துகிறான் சின்னத்தம்பி. பார்க்கப் பரிதாபமாகத்தான் இருக்கிறது.
"முதல் நாள், வேட்டியை கட்டியபடியே கீழே பார்த்தபடி வேலையிலிருந்து திரும்பினான் சின்னத்தம்பி.
இரண்டாம் நாளும் அப்படியே. மூன்றாம் நாளும் அதேதான்.
அம்மா சொன்னாள்,
"சின்னத்தம்பி திருந்திவிட்டான்" என்று.
நாலாம் நாள் வேட்டி அவிழ, அவிழ அவன் கத்திக் கொண்டே வாறான்.
"விதானையார் என்ன
எனக்குச் சொல்லுறது? அவள் என்ரை பெண்சாதி. அவர் ஆர், என்னைக் கேட்க?"
(நன்றி: எழுத்தாளர் அ.முத்துலிங்கம்
அவர்களின் திகடசக்கரம் கதைத் தொகுப்பில் "குங்கிலியக் கலய நாயனார்" கதையில்
ஒரு பகுதி இது).
No comments:
Post a Comment