உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவது சாணக்கியம்;
ஒன்றைச் சொல்லி இன்னொன்றைச் செய்வது ராஜதந்திரம்;
கலர் கலர் தேர்தல்-1933
பச்சை, மஞ்சள், சிவப்புப்
பெட்டிகளுக்கு வாக்குச் சீட்டு போட்ட காலம்; 1933ம் ஆண்டு
என்ற நினைவு; சரவணை நாகேசுவரி வித்தியாசாலையில் மூன்றாம்தரம்
படிக்கிறேன்; என்னுடன் ஒத்த வயதினரும், மூப்பானவர்களும் சிறு குழந்தைகளுமான பலர், கூட்டங்
கூட்டமாக பச்சை, மஞ்சள், சிவப்புக்
கொடிகளைப் பிடித்துக் கொண்டு, வீட்டுக்கு வீடாகப் போய்
வருகிறார்கள்; வீடுகள் தெருக்களில் இல்லை; அங்கொன்றும் இங்கொன்றுமாக பல வரகு மேடுகளில் இருந்தன;
பச்சைப் பெட்டிக்கு ஜே! மஞ்சள் பெட்டிக்கு ஜே!
சிவப்பு பெட்டிக்கு ஜே! எங்கும் ஒரே "ஜே" கோஷம்! எல்லாரும், எல்லா
நிறங்களும், ஜே போட்டுக் கொண்டு கொடிகளைத் தாங்கியபடி வீடு வீடாகப் போய்
வருகிறார்கள்; வண்ணங்களில்
வேறுபாடு இருந்தாலும் வார்த்தைகளில் வேறுபாடில்லை; எல்லாருக்கும்
வெற்றிதான்; இவர் வாழ்க அவர் வாழ்க என்று இல்லை; வீழ்க, ஒழிக கோஷங்கள் அப்போது வழக்கத்துக்கு வரவும்
இல்லை; அண்ணனுக்கும், தம்பிக்கும்,
தகப்பனுக்கும், மகனுக்கும், மாமனுக்கும், மச்சானுக்கும் இடையே போட்டி; யார் யாரை வீழ்த்துவது, ஒழிப்பது? வெறும் வேடிக்கைபோலவே தோன்றிய தேர்தல்களம் சூடுபிடிக்கத் தொடங்கிய
போதெல்லாம் பெரிய மனிதர்களால் சமாதானம் செய்யப் பெற்றது;
"அடி, பிடி வேண்டாம்; பிச்சுப்
பிடுங்கல் வேண்டாம்; வெல்லப் போவது யாரானாலும், உறுப்பினராவது எம்மவர்தானே! நாடாண்டதும் கர்ணனே! காடாண்டதும் அதே கர்ணனே
தானே!" என்று புண்ணியவான்களால் சொல்லிக் கொடுக்கப் பட்டது; சிவப்பு பெட்டிக்கு ஜே! பச்சைப் பெட்டிக்கு ஜே! மஞ்சள் பெட்டிக்கு ஜே!
சில அபேட்சகர்களின் (வேட்பாளர்களின்) வளவுகளில்
கடலையும் தேனீரும்! அடுத்த அபேட்சகர் வடையும் பாயசமும்! மற்றொரு அபேட்சகர்
வீட்டில் தண்ணீர் பந்தல்! வாக்காளப் பொதுமக்களுக்கு வேட்டைதானே! யாரும் நிறங்களில்
பேதங்கண்டு புறந்தள்ளியதாக இல்லை; எல்லாரும் கலந்து கொள்ளும் ஒரு வேட்டைத்
திருவிழாதான்!
நான் ஒரு கைவண்டில் வைத்திருந்தேன்; எனது அக்காவின்
கைவண்ணத்தால் பச்சை, சிவப்பு, மஞ்சள்
நிற ஓலைகளைக் கொண்டு இழைக்கப்பெற்ற சில்லுகள்; நாரினால்
வளையம்; பூவரசம் தடி அச்சுக் குத்தி; பனைமட்டைத்
துலா; வண்ணப் பாய்தடுக்கு பலகை; இது
ஒரு அழகு வண்டில்; அதன் துலா மட்டையில் மூன்று நிறக்
கொடிகளையும் கட்டிக் கொண்டு வீடுவீடாய் நானும் போனேன்;
என்னை ஒருவர் கேட்டார், "உனது பாட்டன் எந்தப்
பெட்டிக்கு போடுவார்? முதலில் பச்சை என்று சொல்லி
வாய்மூடாமலேயே மஞ்சள் பெட்டிக்கு ஜே என்றேன்; கேட்டவர்
சொன்னார், "உன் பாட்டன், அவரின்
பச்சைப் பெட்டி மகனுக்குத்தான் போடுவார்" என்றார்; மற்றவர்,
"இல்லையில்லை, மஞ்சள் பெட்டி
மருமகனுக்குத்தான் போடுவார்" என்றார்; எனக்கு எந்தக்
கவலையும் இல்லை; சிவப்பு பெட்டிக்கு ஜே! என்றேன்;
இது வேலணைக் கிராம சங்கத்துக்கு நடந்த
பொதுத்தேர்தல்; வயது
வந்து, "தலைவரிப்பணம்" கட்டிய ஒவ்வொரு குடிமகனும் வாக்களிக்கலாம்; இதற்குமுன், எல்லாருக்கும் வாக்களிக்கும் உரிமை
இல்லை; படிப்பும், பணவசதியும் படைத்த
சிலருக்கு மட்டுமே வாக்குரிமை இருந்தது; இவர்கள் மணியகாரர்
தலைமையில் கூடும் கூட்டத்தில் தங்கள் இரு கைகளையும் உயர்த்திக் காட்டுவதன் மூலம் (இதுபோன்ற தேர்தல் இல்லாமல்) தமது உறுப்பினர்களை தெரிவு செய்வர்; இவ்வாறாக
கரம்பனிலிருந்து அல்லைப்பிட்டி வரை உள்ள வேலணைக் கிராம சபைக்கு, இருபது உறுப்பினர்கள் வரை தெரிவு பெற்றிருப்பர்; இவர்களின்
அக்கிராசனர் மணியகாரரே!
அந்தக் காலத்தில் மணியகாரரின் வீடே தீவுப்பகுதியின்
நிர்வாக மையம்; பிறப்பு
இறப்பு பதிவு, திருமணப் பதிவு, சுகாதார
மருத்துவப் பிரிவு, கொடி கொட்டை வழங்கற்பகுதி, பயிர்ப்பாதுகாப்பு, மராமத்து, நீதிநிர்வாகம்,
என்று இன்னோரன்ன அலுவல்களுடன், கிராம சபை
தலைமையும் சேர, அவரின் பேச்சுக்கு மறு பேச்சில்லை; சட்டங்கள் செய்வதும் அமுல்படுத்துவதுமான அதிகாரங்கள் ஒரே இடத்தில்
குவிந்திருப்பதை மாற்றக் கருதிய அரசாங்கம், கிராம சபைகளை நிறுவும் முகமாக நடைபெற்ற
தேர்தல்தான் இது;
தேர்தல் வந்ததுதான் வந்தது, சமூகங்களிடையே அசூசையும்
அவநம்பிக்கையும் ஒருவரையொருர் நம்பும் தன்மையும் ஒழிந்தது; சந்தேகம்
வலுத்தது; எந்தப் புற்றில் எந்தப் பாம்போ யார் கண்டார்!
அவநம்பிக்கையால் ஒருவர் மற்றவரை பகைமை உணர்வோடேயே பார்த்தார்;
பதவி, மக்களுக்கு சேவை செய்வதற்கன்றித் தமது பணப் பெருமை,
குலப்பெருமை என்பவற்றின் சிம்மாசனமானது;
உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவது
சாணக்கியம்; ஒன்றைச்
சொல்லி இன்னொன்றைச் செய்வது ராஜதந்திரம்; எரியிற நெருப்பில்
எண்ணெய் வார்ப்பது போன்று பகையாளிகளிடம் சிண்டு முடிதலும், மித்ர
பேதஞ் செய்தலும் தேர்தலோடு பிறந்த கலைகள்;
இவ்வண்ணமே நம்பிக்கை இன்மையில் கட்டி எழுப்பி, "வருகிறது, வருகிறது" என்ற வாக்களிப்பு நாளும் வந்தது; எனது பாடசாலையிலும் வெளி
வீதிகளிலும் சனக் கூட்டம்; வாக்களிக்கும் தகுதி பெற்றவர்கள்
மட்டும் வளவுக்குள்ளே; வெளியிலே நின்ற ஒரு கூட்டத்தில்
பரபரப்பு காணப் பட்டது; அக்கூட்டத்தில் பல இளைஞர்கள்;
வயது வந்தும், வாக்களிக்கும் தகுதி இருந்தும்,
வரிப்பணம் கட்டாததினால் வாக்குரிமை மறுக்கப் பட்டவர்களின் கொதிப்பு
எங்கும் கேட்டது; தமது ஜாதிக்காரனின் வெற்றியைத் தாமே
தீர்மானிக்க உள்ள துடிப்போடு உசாவினர்; விதானையாரின்
அறிவிப்பு இதற்கொரு வழிகாட்டுவதுபோல அமைந்தது; வரிப்பணம்
கட்டத் தவறியவர்களும், இப்போது வரிக் கட்டினால்
வாக்களிக்கும் தகுதி கிடைக்கும் என்று அறிவிப்பு செய்தார்; உடனே
ஒரு பெரிய வரிசை சேர்ந்தது; வரிப்பணம் ஒரு ரூபா; அதனுடன் தண்டப் பணமும் சேர்த்துக் கட்டவேண்டும்; விதானையாரிடம்
பல ரூபாக்கள் சேர்ந்தன; எல்லாம் அபேட்சகர் ஒருவரின் புதுச்
சட்டைப் பையில் இருந்தே சென்றதைக் காணக் கூடியதாக இருந்தது; வரிப்பணமும்
குற்றப் பணமும் வசூலாக வாக்காளர் பட்டியல் நீண்டது; பலர்
உள்ளே சென்று கொண்டிருந்தனர்;
சிறுக சிறுக நேரமும் போய்க் கொண்டிருந்தது; இப்போது நேரம் நண்பகலுக்கு
மேல்; சனக்கூட்டம் வீதியில் குறைவு; பாடசாலைக்கு
உள்ளே கூட்டம்; எல்லார் முகங்களிலும் படபடப்பும் கோபமும்
என்னவோ ஏதோவென்று நினைக்கின்ற வேளையில் களேபரம் மூண்டு விட்டது; பேரிரைச்சலுக்குள் அடிபிடி; ஏன் எதற்கென்று அறிய
அவகாசம் போதாது; வெளியே நின்றும் சில நல்லாயுதங்கள்
பாடசாலைக்குள் பறந்தன; சிலர் உள்ளே நின்றும் வெளியே வந்தனர்;
முகத்தில் பிரேதகளை, தோல்வி என்று சொல்லாமல்
சொல்லியது;
இவ்வேளையில் வேலி ஓரத்தில் நின்ற என்னை ஒரு
கிழட்டுக் கரம் பற்றியது; "வாடா" என்ற கையோடு அவருடன் சென்றேன்; "தேர்தல்,
சாதிச் சண்டையை மூட்டிவிட்டது" என்றார் என் பாட்டனார்;
(நன்றி: தில்லைச்சிவனின் "அந்தக் காலத்துக்
கதைகள்" என்ற தொகுப்பிலிருந்து ஒரு பகுதி இது)
**
No comments:
Post a Comment