Friday, January 15, 2016

தபுதாரன்கள் (widowers)

தபுதாரன்கள்
"அன்னை இறந்தால், அப்பன் சிற்றப்பன்"
அந்தக் காலத்தில் எம் தீவினர் பலர் தபுதாரன்களே; பெண்ணியில் நோய்களாலும், பிள்ளைப் பேறுகளின் போதும் மரணித்த பெண்கள் பலர்; இன்றுபோல் அன்று மருத்துவ வசதிகள் இருக்கவில்லை; ஒவ்வொரு பிள்ளைப் பேற்றின்போதும், தாய் மரண வாய்க்குப் போய் மீண்டுவருவது ஒரு அதிஷ்டமே; அவ்விதமே பெண்களின் மரண விகிதம் அதிகரித்ததால், பலர் "தபுதாரன்களாக" ஆவதும், மீண்டும் தார-தாம்பத்யம் கொள்வதும் சாதாரண நடைமுறை;
இவ்வாறு இல்லாமல் சில ராமன்களும் இருக்கத்தான் செய்தனர்; பல தசரதர்களுக்கு மத்தியில், தசரதர்களுடைய ராச்சிய பரிபாலனங்களுக்கு ஒத்தாசையாகப் பல மனைவியர் தேவைப்பட்டனர்; சம்பளம் கோராத, நம்பிக்கையுள்ள ஊழியர்கள் என்பதால் மனைவியர் பலர் இருப்பது வாழ்க்கைக்கு வசதி; சில மேட்டுக் குடியினர் "வைப்பாட்டிகள்" வைத்திருப்பதை கௌரவமாகவும், அப்படி வைப்பாட்டிகளை இல்லாதிருப்பது அகௌரவமாகவும் கருதிய காலம் அது;
பொருளாதார நலன்களில் மனைவிகளும் பிள்ளைகளும் உதவி புரிந்ததால், வசதி வாய்ப்புடன் வாழ்ந்த குடும்பங்கள் ஆங்காங்கே இருக்கவும் செய்தன; அக்கால விவசாய சமுதாயத்தில், ஆடுமாடுகள் மேய்த்தல், பராமரித்தல், வயல் வேலைகள் செய்தல், கறிப்பாட்டுக்கு கடலை போதல், குத்துதல், இடித்தல், சமைத்தல், என ஏகப்பட்ட வேலைகள், ஏழை எளியதுகளால் சம்பளம் கொடுத்து வேலை செய்விக்க முடியாது; அப்படியே முடிந்தாலும், முதலாளிகளுக்கு குடிமை-அடிமைகளாய் இருப்பவர்கள் சாதாரண மக்களுக்கு கூலிக்கு வேலை செய்ய முன் வர மாட்டார்கள்; இந்த சூழலில் ஆணும் பெண்ணும் பிள்ளைகளும் வேலை செய்தால்தான் குடும்ப வண்டியைச் சீராக ஓட்ட முடியும் என்ற நிலையில் ஒருவன் பல பெண்களை மணம் முடிக்க வேண்டிய அவசியமாகவும் இருந்தது; பலபிள்ளைகள் பெற்ற குடி பாழ் போகாது என்றும் சொல்வர்;
மனைவி இறந்தபின், கணவன் மறுமணம் செய்வதுபோல, கணவன் இறந்தபின் மனைவியும் மறுமணம் செய்து கொள்வதுண்டு: இதனை ஆட்சேபிப்பவர் இல்லை; அண்ணன் இறந்து போனால், அண்ணன் பெண்டில் தம்பியையும், தம்பி இறந்து போனால், தம்பி பெண்டில் அண்ணனையும் மணம் முடிப்பது சாதாரண வழக்கம்தான்; இவ்வழக்கம் மேட்டுக் குடியினரைவிட, சாதாரண மக்களிடம் அதிகமாகவே இருந்தது;
"தந்தை இறந்தால், தாய் சிற்றன்னை"என்று சொல்லாமல், "அன்னை இறந்தால், அப்பன் சிற்றப்பன்" என்கிறார்கள்;

ஒருத்தி ஒருவனுக்கு மனைவியாகவோ அல்லது வைப்பாட்டியாகவோ இருப்பதுண்டு: ஆனால் "பரத்தை" பற்றிய உலகப் பொதுக்கருத்துக்கு அமைவான வரலாறு எம்மூரில் இருக்கவில்லை; ஒருத்தி ஒருவனுக்கு உரியவள்; ஒருவன் சிலருக்கு உரியவன்; இதுதான் நிலை;
(நன்றி; தில்லைசிவனின் “அந்தக்காலத்துக் கதைகள்”) 

No comments:

Post a Comment