Friday, January 15, 2016

தறுதலை வழக்கு

தறுதலை
இரண்டு உலகப் போர்களையும், 1914ம் ஆண்டு பஞ்சத்தையும் நேரில் அனுபவித்தவர் எனது பாட்டனார்; பனைமரத்தின் சோத்துப் பகுதியை, இடித்த மாவுப் பிட்டினையும், ஈச்சை மரத்தாணிச் சுவையினையும் சொல்லிச் சொல்லி மகிழ்வார்; ஆயிரம் பிறைகண்ட இவரின் வாழ்வில், கடைசி 20 வருடங்கள் எனது பிரதம பாதுகாவலராக இருந்தவர்;
காலந்தான் மாறிக் கொண்டு போகின்றதே தவிர, கருத்துக்களில் அதிக மாற்றம் இல்லை; இன்றுள்ள அதிகார வர்க்கம் தமக்கு வேண்டாதவர்கள் மேல், இல்லாததும் பொல்லாததும் சொல்லி, வழக்குகளைச் சோடித்துக் குற்றவாளி கூட்டில் நிறுத்துவது போல, அக்காலத்திலும் இருந்தது; ஊரில் உள்ள எல்லா மக்களும் தமக்கு அடங்கியவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் கிராமத் தலைமைக்காரன் முதல் பிரதேச மணியக்காரன் வரை உள்ளவர்களின் கருத்து; தமது பேச்சுக்கு எதிர்வாதம், இவர்கள் விரும்பாதது; ஏன் என்ற கேள்வி கேட்கக் கூடாது;
ஊரில் தனிப்பட்ட ஒருவர், செல்வாக்குடன் இருப்பதும் குழுக்களாக இயங்குவதும் பயங்கரவாதம். இது அதிகாரிகளுக்குப் பிடிப்பதில்லை; தனிநபர், செல்வாக்குள்ள ஒருவரை எப்படியும், வீழ்த்தித் தமது காலடிக்குகீழ் கொண்டு வரப் பார்ப்பார்; அல்லது வழக்குகளில் மாட்டிச் சீரழிவர்;
இந்த வகையான வழக்கொன்று எனது பாட்டனாரான 31 வயது இளைஞர் மேல் போடப் பட்டது;
ஒன்பது சகோதரர்களுக்குக் கடைக்குட்டித் தம்பி இவர்; நல்ல அழகன்; ஓரளவு கல்வியும், விவேகமும், தாய் தந்தை சகோதர சகோதரிகள் இவர்களின் செல்லப் பிள்ளை; இத்தகைய பரிவாரங்களுடன் ஊரில் உள்ள பல இளைஞர்கள் தோழமையும் உண்டு; இவர் கூட்டத்தில் எல்லா ஜாதியினரும் இருந்தனர்; யாழ்பாணத்தில் ஏனைய பகுதிகளில் உள்ளதைப் போல தீண்டாமை எங்கள் ஊரில் இருக்கவில்லை; எங்கள் ஊர் மக்கள் திருந்தி விட்டார்கள் என்று அர்த்தமில்லை; குறைந்த அளவில் உள்ள தீண்டாத மக்கள், பரந்த சொந்த நிலங்களில் சொந்த தொழில்களோடு வாழ்ந்ததே காரணம்;
என்ன இவன் சின்னத்தம்பி எங்களுடைய பிள்ளைகளையும் கெடுக்கிறானே என்று சாதிமான்கள் புலம்பல்;
காட்டில் வெளிகளில் புல்லுச் செருக்குதல், எருப் பொறுக்குதல், விறகு தரித்தல், போன்ற செயல்களும், அரசு அதிகாரியான மணியகாரரின் கட்டுப்பாட்டினை மீறிச் செய்ய முடியாது;
தறுதலை வழக்கு;
தறுதலை வழக்கு என்றால், அதன் முதல் குற்றச்சாட்டு, 30 வயதுக்கு மேற்பட்டும் மணம் முடிக்காமல் இருப்பது; இரண்டாவது குற்றச்சாட்டு, ஒருவர் தொழில் துறையின்றி இருப்பது; மூன்றாவது குற்றச்சாட்டு, நிலபுலம் சொத்துக்கள் இல்லாமல் இருப்பது; இந்த மூன்றும் இல்லையென்றால், அக்காலத்தில், அவன் "தறுதலை" எனச் சொல்லி அவனை சிறைக்கு அனுப்பி விடுவர்; வேலையில்லை, மனைவியில்லை, சொத்தில்லை என்றால் சிறை என்றால், இப்போது சிறைக் கூடங்களில் நிலையை எண்ணிப் பார்க்கத் தோன்றவில்லையா?
அக்காலச் சட்டப்படி, என் பாட்டனார் தறுதலை; கோட்டானை (கோர்ட் ஆர்டர்) பிறபிக்கப் பெற்று கட்டளை அதிகாரியும் (அமீனா) வந்து செல்கிறார்; ஆனால் கூடவே நிற்கும் என் பாட்டன் சின்னத்தம்பியை யாரும் காட்டிக் கொடுக்கவில்லை;
இவரே, தானாகவே முன்வந்து கோர்ட் கட்டளையைப் பெற்று, தன் தந்தையிடம் செல்கிறார்; கப்பரிடம் காண்ப்பிக்கப் படுகிறது; அடுத்த சில தினங்களில் சத்திரியப் புலத்தில் 30 பரப்பு சின்னத்தம்பிக்கு முதுசொம் உறுதி முடிக்கப் பெற்றது; காத்திருந்த மச்சாள் சின்னாக்சிகையால் சோறு வாங்கித் தின்ற சின்னத்தம்பி அவள் கழுத்தில் கட்டிய மஞ்சள் கயிறு, கோர்ட் கட்டளைச் சட்டத்தை ஒன்றுமில்லாமல் செய்து விட்டது;
இதுவரை பிரம்மசாரியம் காத்த சின்னத்தம்பிக்கு ஒரு கால்-கட்டு; இதனால் அவரைச் சுற்றிவரும் நண்பர் கூட்டம் குறைந்துவிடும் என நம்பியவர்கள் ஏமாந்தார்கள்;
(நன்றி; தில்லைசிவனின் “அந்தக்காலத்துக் கதைகள்”)

**

No comments:

Post a Comment