Friday, January 15, 2016

நீதிமானாக இருந்தால் மட்டும் போதாது!

நீதிமான், வல்லமை உள்ளவனாகவும் இருக்க வேண்டுமாம்!
எனது பாட்டனாரிடம் பலர் வருவார்கள்; திருமணப் பேச்சுக்கு ஆதரவு கேட்பவர்கள்; மணவிலக்கைக் கோருபவர்கள்; சேர்த்து வைக்க வேண்டுபவர்கள்; எல்லைப் பிரச்சனை, பங்குப் பிரச்சனை; இவை அல்லாமல் மற்ற பல பிரச்சனைகள்; மத்தியட்சம் செய்து வைப்பதில் சமர்த்தர்; அப்போது சொல்லுவார், "மத்தியட்சம் செய்பவர் நீதிமானாக இருந்தால் மட்டும் போதாது; வல்லமை உள்ளவராகவும் இருக்க வேண்டும்; எங்கும் நீதியை நிலை நாட்ட, வல்லமைதான் பயன் படுத்தப் படுகிறது; வலுவற்ற ஆட்சியால் நீதியை நிறுத்த முடியாது" என்று கூறியவர், நான் இப்போது வலுவிழந்து விட்டேன்; கேட்பவர் கேட்கட்டும், கேளாதவர் போகட்டும்; ஆனால் ஒன்று, ஒரு ஊருக்கு ஒரு சண்டியன் வேண்டும்; சண்டியன் தான் சமாதானம் செய்து வைப்பான்; நீதி வழங்குவான்; முற்காலத்தில் குழுமங்களின் தலைவனாக சண்டியன் ஒருவனே இருந்தான்; அவனே அரசன்; அவன் கப்பம் வாங்கினான்; காவல் காத்தான்; அவர்களைத்தான் அழகிகளும் விரும்புவார்கள்" என்றார்;
இதை இப்போது நினைக்கிறேன், "வீரனுக்கே பேரழகி உரியவள்" என்ற சங்க சான்றோர் வார்த்தை என் காதுகளில் ஒலிக்கிறது;
பிற்காலத்தில் எங்கள் ஊரில் சில சண்டியர்கள் இருந்தார்கள்; இவர்களைப் பார்த்தால் கோமாளிகளைப் பார்ப்பதுபோல இருக்கும்; மிடாக் குடியர்கள்; சண்டித்தனம் எல்லாம் கள்ளுக் கொட்டிலடியில்தான்; அவர்கள் போலீஸைக் கண்டு உபசரிப்பதைப் பார்த்தால் பெரும் கண்றாவி; சண்டியன்கள் என்றால் இப்படித்தான் காக்கா பிடிக்க வேண்டுமா!
அந்தக் காலத்தில், மணியக்காரருக்குத்தான், போலீஸ் அதிகாரங்களும் இருந்தன; இவர் இட்டதுதான் சட்டம்; எதிர் பேச்சிருக்கக் கூடாது; சாதி ஒழுங்குக் கட்டுப்பாடும் அவர் கையில்தான்; நீதி செய்வதிலும் சாதிப் பாகுபாடுகள்;
(நன்றி; தில்லைசிவனின் “அந்தக்காலத்துக் கதைகள்”)

**

No comments:

Post a Comment