ஜீயஸ் தலைமைக் கடவுள் (Zeus: zju:s or zoos)
கிரேக்க இதிகாசத்தில், ஜீயஸ் கடவுள்தான், மற்ற எல்லாக்
கடவுள்களுக்கு எல்லாம் தலைமைக் கடவுள்; இவரே மூத்தவர்; இவருடன் கூடப் பிறந்த இளைய சகோதர்கள்
இருவர்; ஹேடஸ் (Hades), மற்றும் பொசிடான் (Poseidon); இந்த மொத்த பிரபஞ்சத்தையும் இந்த மூன்று சகோதரர்களும்
பங்கு பிரித்து ஆட்சி செய்து வருகிறார்கள்; ஹேடஸ்-க்கு பாதாள உலகத்தைக் கொடுத்து விட்டார்;
மற்றொரு சகோதரரான பொசிடானுக்கு கடல் உலகைக் கொடுத்து விடுகிறார்; ஜீயஸ் கடவுள்
மட்டும் ஆகாயத்தையும், பூமியையும் வைத்துக் கொள்கிறார்; ஜீயஸ் கடவுள் தான்
மழைக்கும் கடவுள்; மின்னல், இடி இவைகளுக்கும் இவரே கடவுள்; இவர் கையில் எப்போதும்
மின்னல் போன்ற ஒரு ஆயுதத்தை வைத்திருப்பார்;
ஜீயஸ் கடவுளே, எல்லாக் கடவுள்களுக்கும் தலைமைக்
கடவுள் என்றாலும், மற்ற அதிகாரங்கள் இவரின் கையில் இல்லையாம்! மற்ற விஷயங்களை
இவரின் மற்ற மகன்களும், மூன்று மகள்களும் தீர்மானிப்பார்களாம்! கடவுள் பிரச்சனை
என்றாலும், மனிதன் பிரச்சனை என்றாலும், இந்த மற்ற கடவுள்கள்தான்
தீர்மானிப்பர்! அவர்கள் எடுத்த முடிவை
ஜீயஸ் கடவுள் மாற்றிவிட முடியாதாம்!
ஜீயஸ் கடவுள் புத்திசாலிக் கடவுள் என்றாலும், சில
நேரங்களில் சுதப்பி விடுவாராம்! இவர்தான், மனிதர்களுக்கு சட்டங்களையும்,
நீதியையும் வழங்குவாராம்! இவரே மனிதர்களுக்கு நல்ல குணங்களையும் நல்ல பழக்க
வழக்கங்களையும் கொடுத்தவராம்!
ஜீயஸ் கடவுள் ஊர் சுற்றுவதில் மன்னனாம்! சில
நேரங்களில் மாறுவேடத்திலும் ஊர், உலகத்தைச் சுற்றி வருவாராம்! (சிவபெருமானை
ஞாபகப்படுத்துகிறதோ!); ஒருநாள், இவரும் இவரின் மகனான ஹெர்மிஸ் (நாரதன் போன்ற) பறந்து செல்லும்
தூது செல்லும் கடவுளான இவனுடன் இருவரும் ஊர் சுற்றிவரப் புறப்படுகிறார்கள்; அப்போது
இருவருமே மாறு வேடத்தில் மனிதர்களைப் போன்று உருவம் எடுத்துச் செல்கின்றனர்; ஒரு
ஊரில் இறங்கி, அங்குள்ள மக்களிடம், பசிக்கு சாப்பாடு கேட்டு நிற்கின்றனர்; இரவில்
தங்குவதற்கு ஏதாவது இடம் இருக்கிறதா என்றும் விசாரிக்கின்றனர்; யாரும் இவர்கள்
இருவரையும் சட்டை செய்யவில்லை; எல்லோருமே விரட்டி அடிக்கிறார்கள்! ஒரு வயதான
கணவனும் மனைவியும் இருக்கும் வீட்டுக்கு வருகிறார்கள்; ஆனால் அந்த வயதான
முதியவர்கள் மிக மிக ஏழைகள்; ஆனால் இவர்கள் இருவர் மீதும் இரக்கம் கொண்டு,
அவர்களுக்கு உணவு, நீர், கொடுத்து, இரவில் அவர்கள் வீட்டில் தங்குவதற்கும் இடம்
கொடுக்கிறார்கள்;
மறுநாள் காலையில் எழுந்தவுடன், ஜீயஸ் கடவுளும், அவர்
மகன் ஹெர்மிஸ் கடவுளும் தங்களின் மாறுவேடத்தை கலைத்துவிட்டு, கடவுள் உருவத்தில்
வெளிப்படுகிறார்கள்; அந்த ஊரில் பெரிய வெள்ளம் வரும்படி ஏற்பாடு செய்கிறார்
கடவுள்; அந்த ஊரில் உள்ள எல்லா வீடுகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன;
ஆனால், கடவுளுக்கு உதவிய இந்த முதியவர் வீடு மட்டும் சேதம் இல்லாமல் அப்படியே
இருக்கிறது; முதியவர்களைப் பார்த்து “உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள்” என்று ஜீயஸ்
கடவுள் கேட்கிறார்; ஆனால் அவர்கள் எதையும் கேட்கவில்லை; “நாங்கள் இப்படியே
வாழ்ந்து கொள்கிறோம், ஆனால், கணவன் மனைவியாகிய நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில்
இறந்துவிட வேண்டும் என்பதே எங்கள் ஆசை” என்று கேட்கின்றனர்; கடவுளும் அப்படியே
செய்வதாக சொல்லிச் செல்கிறார்;
அவர்கள் இருவரும் ஒரு கோயிலில் ஆண் பூஜாரியாகவும்
பெண் பூஜாரியாகவும் வேலை பார்க்கிறார்கள்; ஒரே நாளில் இறக்கிறார்கள்; அப்படியே அந்த
கோயிலில் உள்ள ஒரு மரமாக இருவரும் ஆளுக்கு ஒரு கிளையாக விரிந்து பரந்து
வளர்கிறார்கள்;
**
No comments:
Post a Comment