அப்ரடைட்டி Aphordite:
(afre’dide)
பெண் கடவுளான “அப்ரடைட்டி” ஒரு
பேரழகி; இவள் பிறப்பே வித்தியாசமானது; பொங்கிவந்த கடல் நுரையில் பிறந்தவள்;
பேரழகியாக, முழுப் பெண்ணாகவே கடல் அலையில் பிறந்து வந்தவள்; எனவே இவள்தான்
காதலுக்கு கடவுள் ஆவாள்; சிட்டுக்குருவி,
புறா, வாத்து இவைகளின் மீது இவளுக்கு கொள்ளை ஆசையாம்!
இவளைத் திருமணம் செய்தவன் ஹிபிஸ்டஸ் (Hephaestus) என்னும் கடவுள்; இவனோ
நெருப்புக்குக் கடவுள்! என்னதான் காதலுக்கு இவள் கடவுளாக இருந்தாலும், இவள்
கணவனுடன் இவள் அவ்வளவு பிரியமாக இல்லையாம்! இவளுக்கோ, ஏரிஸ் (Ares) மீது காதலாம்! (காதல் தேவதையே
குழப்பமானவள்தான் போலும்!)
அப்ரடைட்டியும் அவளின் மகன் ஈரோஸ் (Eros) என்ற குட்டிக் கடவுளும்தான் மக்களின் காதல் கடவுளாக
விளங்கி வருகின்றனராம்; மக்கள் காதல் கொள்வதற்கு இவர்களே காரணமாம்! ஈரோஸ் கையில்
தான் காதலின் சின்னமான வில்லும் அம்பும் (மன்மத அம்பு) இருக்கிறதாம்! இந்த அப்ரடைட்டி கடவுள், காதலுக்குகாக சண்டையை
ஏற்படுத்துவாளாம்! சண்டை என்றால் சின்ன சண்டை இல்லை, பெரிய போர்களையே
உண்டாக்குவாளாம்! ஈரிஸ் (Eris) என்ற தேவதைதான் அந்த சண்டையை நிறுத்தி சமாதானம்
ஆக்குவாளாம்!
ஒருநாள், ஈரிஸ் என்ற தேவதை ஒரு “தங்க ஆப்பிள்” பழத்தை உருவாக்குகிறாள்; அந்த
ஆப்பிள் பழத்தில், ஒரு வாசகத்தை எழுதுகிறாள், “யார் பேரழகியோ அவர்களுக்கு இந்த
ஆப்பிள்” என்று; பின்னர், அந்த ஆப்பிள் பழத்தை தூக்கி எறிகிறாள்! யாருக்குக்
கிடைக்கும் பார்க்கலாம் என நினைக்கிறாள்! அந்த ஆப்பிள் பறந்து சென்று, பெண்
கடவுள்களான ஏதெனா, ஹெரா, அப்ரடைட்டி ஆகியோர் முன்னர் விழுகிறது; அந்த மூன்று பெண்
கடவுள்களும், இந்த ஆப்பிள் என்னை நோக்கித்தான் விழுந்தது என்றும் எனவே நானே பேரழகி
என்று மூவருமே நினைக்கிறார்கள்; இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் நடக்க
ஆரம்பிக்கிறது; முடிவில், இதை ஒரு போட்டியாக வைத்துக் கொள்வோம் என்றும் யார்
பேரழகி என்று அதில் முடிவெடுக்கலாம் என்று ஒப்புக் கொள்கிறார்கள்!
இந்தப் போட்டிக்கு யாரை நீதிபதியாக நியமிப்பது என யோசித்து, மனிதர்களில்
ஒருவரான “இளவரசன் பாரிஸ்” என்பவனைத் தேர்ந்தெடுக்கின்றனர்; மூவருமே அவனை
சந்திக்கின்றனர்;
ஹெரா சொல்கிறாள், “இளவரசனே! என்னை நீ பேரழகியாகத் தேர்ந்தெடுத்தால், நான்
உன்னை இந்த உலகத்துக்கே மன்னன் ஆக்குவேன்”
என்கிறாள்;
ஏதெனா சொல்கிறாள், “இளவரசனே! என்னை நீ பேரழகியாகத் தேர்ந்தெடுத்தால், உன்னை
யாரும் ஜெயிக்க முடியாத மிகப் பெரிய வீரனாக ஆக்குவேன்” என்கிறாள்;
அவனுக்கு இரண்டு பேர்கள் சொல்வதிலும் இஷ்டமில்லாமல் இருக்கிறான்;
அப்ரரைட்டி சொல்கிறாள், “நீ என்னைப் பேரழகி என்று முடிவு செய்தால், இந்த
பிரபஞ்சத்திலேயே மிக அழகியை உனக்கு பரிசாகக் கொடுப்பேன்” என்கிறாள்;
இந்த அப்ரரைட்டி சொல்வதில், இவனுக்கு ஆசை ஏற்படுகிறது; ஒரு பேரழகியை மனைவியாக
அடையலாம் என்று முடிவு செய்கிறான்;
எனவே, இளவரசன் பாரிஸ், அப்ரடைட்டி-தான் பேரழகி என்று தீர்ப்பைச் சொல்லி
விடுகிறான்;
இதைத்தான், தங்க ஆப்பிளை தூக்கி எறிந்த ஈரிஸ் தேவதை எதிர்பார்க்கிறது;
பிரச்சனைக்கு இதுதான் வழி என நினைக்கிறது;
ஒப்புக் கொண்டபடி, உலகிலேயே மிகுந்த பேரழகியை இப்போது இளவரசன் பாரிஸூக்கு
அப்ரடைட்டி பெண் கடவுள் காண்பிக்க வேண்டும்; ஆனால் அந்த உலகப் பேரழகிக்கோ ஏற்கனவே
திருமணம் ஆகி விட்டது; அவள் பெயர் ஹெலன் (Helan); மெனிலயஸ் (Menelaus) என்ற மன்னரின் மனைவி அவள்; அந்த
மெனிலயஸ் மன்னனோ ஸ்பார்டா (Sparta) என்ற நாட்டுக்கு மன்னன்; அவன் மனைவிதான் ஹெலன் என்ற
பேரழகி; இவளே அந்த நாட்டு ராணி;
இப்படி இருக்கும்போது, அந்தப் பேரழகியை (திருமணமானவளை) எப்படி இளவரசன் பாரிஸ்
திருமணம் செய்ய முடியும்? பிரச்சனை இங்குதான் ஏற்படுகிறது;
இளவரசன் பாரிஸ், ஸ்பார்ட்டா நாட்டுக்குப் போகிறான்; அங்கு அந்த நாட்டு மன்னன்
மெனிலயஸைச் சந்திக்கிறான்; அவனுடன் நட்புக் கொள்கிறான்; அவன் அரண்மனையிலேயே தங்கி
இருக்கிறான்; ஒருநாள், ஸ்பார்ட்டா நாட்டு மன்னன் மெனிலியஸை, பக்கத்து நாட்டுக்கு
போருக்கு போகிறான்; அப்போது தன் நண்பன் இளவரசன் பாரிஸை, தன் அரண்மனையில் மனைவிக்கு
துணையாக இருக்குமாறும், அவன் போர் முடித்து வந்தவுடன், இளவரசனை அவனின் ஊருக்கு
பயணம் அனுப்புவதாகவும் சொல்லி விட்டு போருக்கு போய் விட்டான்; அவன் போர் முடித்து
திரும்ப வருவதற்குள், இளவரசன் பாரிஸ், மன்னன் மெனிலயஸையின் மனைவியான பேரழகி
ஹெலனுடன் பழகி, காதல் கொள்கிறான்; அவளைக் கூட்டிக் கொண்டு அந்த நாட்டை விட்டே தப்பித்து ஓடிவிடுகிறான்;
போர் முடிந்து வந்த மன்னன் மெனிலியஸ், தன் மனைவியைக் காணாது தவிக்கிறான்;
நண்பன் பாரிஸ்தான் இந்த துரோகத்தைச் செய்தான் என்று தெரிந்து, அவனை நாடு நாடாகத்
தேடுகிறான்; எங்கும் கிடைக்கவில்லை; ஒருவழியாக, பாரிஸ், ஹெலனுடன் டிராய் நகரில்
ஒளிந்து கொண்டு இருப்பதாக தூது கிடைக்கிறது; கிரேக்க நாட்டில் உள்ள மற்ற மன்னர்களை
எல்லாம் துணைக்கு அழைத்துக் கொண்டு டிராய் நாட்டின் மீது போர் தொடுக்கிறான்; அதுவே
ட்ரோஜான் போர் (Trojan War) என்று கிரேக்க இதிகாசங்களில் சிறப்பாக பேசிப்படுகிறது; சுமார் 10 வருடங்கள்
இந்தப் போர் நடக்கிறது; டிராய் நகரை அழித்து மனைவியை மீட்கிறான்;
**
No comments:
Post a Comment