Friday, November 11, 2016

மகரயாழ்

மகரம் (Delphinus):
வான மண்டலத்தில் பூமிக்கு வடதுருவத்தில் இருக்கும் நட்சத்திரக் கூட்டத்துக்கு மகரக் கூட்டம் என்று பெயர்; இதை கிரேக்க இதிகாசத்தில் Delphinus (டெல்பினஸ்) என்கிறார்கள்; அதன் பெயர் Dolphin டால்பின்; இந்திய ஜோதிட விஞ்ஞானத்தில் இதை மகரயாழ் என்கிறார்கள்; இது கடலில் வாழும் டால்பின் மீன்தான்; இதை மீன் என்றும் சொல்ல முடியாது; இது பாலூட்டி வகையைச் சேர்ந்தது; மனிதனுக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும்; ஏன், கடவுளுக்குக்கூட உதவி செய்தாக கிரேக்க புராண வரலாறு உண்டு;

கிரேக்க புராணம்:
குரோனஸ் (Cronus) தான் ஆதி கடவுள்; இவரின் மூன்று மகன்கள்; இவர்கள் Zeus, Poseidon, and Hades (ஜீயஸ், பொசிடான், ஹாடஸ்);  இந்த சகோதரர்கள் மூவரும் இந்தப் பிரபஞ்சத்தை பாகப் பிரிவினை செய்து கொள்கிறார்கள்; அதில், இந்த பிரபஞ்சத்தை மூன்றாகப் பிரித்து, அதில், ஜீயஸ் ஆகாயத்தையும் (Sky), பொசிடான் கடல் எல்லையையும் (Sea), ஹாடஸ் பாதாள உலகத்தையும் (Underworld) பிரித்துக் கொண்டு ஆட்சி செய்கிறார்கள்;

பொசிடானுக்கு கடல் கிடைக்கிறது; கடலுக்கு அடியில் மிகப் பிரமாண்டமான அரண்மனை மாளிகையை கட்டிக் கொள்கிறான் பொசிடான் கடவுள்; எல்லாம் இருந்தாலும் ஒரு மனைவி இல்லாதது வெறுமையாகத் தெரிகிறது; மனைவியை தேடித் திரிகிறான்; ஆம்பிடிரைட் (Amphitrite) என்னும் ஒரு அழகியைச் சந்திக்கிறான்; அவள் ஒரு தேவதை (nymph) நிம்ப்; அவளையே தனக்கு மனைவி ஆகும்படி கேட்கிறான்; ஆனால் அவள், அவனை விரும்பாததால், மற்ற தேவதைகளிடம் ஓடி ஒளிந்து கொள்கிறாள்; எத்தனையே தூதுகளை அனுப்பிப் பார்க்கிறான் பொசிடான் கடவுள்; பலிப்பதாக இல்லை; அவனும் விடுவதாக இல்லை; அவளைத் தேடித் திரிகிறான்; டால்பினைத் தூது அனுப்புகிறான்; அது அவளிடம் சென்று, அன்பாகப் பேசி அவள் மனதைக் கசிய வைத்து, கூட்டிக் கொண்டு வருகிறது; பொசிடானுக்கு மகிழ்ச்சி; அவளைத் திருமணம் செய்து கொண்டு வாழ்கிறான்; டான்பின் செய்த உதவிக்கு நன்றிக் கடனாக, அதற்கு ஆகாய மண்டலத்தில் ஒரு இடத்தை ஒதுக்கி நட்சத்திரமாக ஜொலிக்க வைக்கிறான்; இப்படித்தான் டால்பின் “மகரக் கூட்டமாக” வானில் ஜொலிக்கிறது;

கிரேக்கி இதிகாசத்தில் இன்னொரு கதையும் உண்டு:
அரியான் (Arion) என்ற மகாகவி வாழ்கிறார்; அவர் ஒருமுறை கப்பலில் கிரீஸ் நாட்டுக்கு வருகிறார்; இத்தாலியில் சிலர் இவர்மீது பொறாமை கொண்டு அவரைக் கொல்ல நினைக்கிறார்கள்; அவர் பாடல்களில் சேர்த்த பணத்தை களவாடி விடுகின்றனர்; கப்பலிலேயே அவரை கொல்வதற்கு கூட்டமாக வாள்களுடன் கூடி அவரைப் பிடித்துக் கொண்டனர்; அவர், “கடைசியாக ஒரு பாடல் பாடிக் கொள்ள அனுமதியுங்கள்” என்று கெஞ்சுகிறார்; சரி பாடிக் கொள்ளுங்கள் என்கின்றனர்; இவர், மிகச் சோகமான பாடல் ஒன்றைப் பாடுகிறார்; அது, இறந்தவர்களை நினைத்துப் பாடும் துக்கப் பாடல்; அந்த சோகப் பாடலைக் கேட்ட டால்பின் மீன்கள் அந்த கப்பலைச் சுற்றி கூடவே வருகின்றன; பாட்டு முடிந்தவுடன் கடவுளை நினைத்துக் கொண்டு அரியான் கவிஞர் கடலுக்குள் குதிக்கிறார்; அவர் குதித்தவுடன், டால்பின் மீன்கள் அவரைக் காப்பாற்றி தன் உடலில் சுமந்து கொண்டு கரை சேர்ந்து அவரை காப்பாற்றி விடுகின்றன; இசைக்கு கடவுள் அப்போலோ (Apollo); தனக்காக தன் கவிஞரைக் காப்பாற்றிய டால்பின் மீன்களை, அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இந்தப் பிரபஞ்சத்தில் வான மண்டலத்தில் அவைகளுக்கு ஒரு இடத்தைக் கொடுத்து சிறப்பிக்கிறான் அப்போலோ கடவுள்;

இந்த டால்பினைத்தான், இந்திய வானவியல் சாஸ்திரம் மகரயாழ் என்று பெயரிட்டுள்ளது;

**

No comments:

Post a Comment