Wednesday, November 23, 2016

ஹெர்மிஸ் கடவுளும், நாரதனும்

ஹெர்மிஸ் (Hermes: he:mi:z)
கிரேக்க இதிகாசத்தில் இந்த கடவுளுக்கு தூதுக் கடவுள் என்று பெயர் (Messenger God); கிரேக்க தலைமைக் கடவுளான ஜீயஸ் (Zeus: zju:s or zoos) கடவுளின் மகன்களில் ஒருவர்; ஜீயஸ்-க்கும் அவரின் ஒரு மனைவியான ‘மையா’ (Maia) என்ற பெண் கடவுளுக்கும் பிறந்தவனே இந்த ஹெர்மிஸ் கடவுள்;

இளமையான கடவுள் இந்த ஹெர்மிஸ்; புத்திசாலியும்கூட! பறக்கும் தொப்பி அணிந்திருப்பான்; கால்கள் இரண்டிலும் பறக்கும் செருப்பை அணிந்திருப்பான்; நினைத்த இடத்திற்கு நொடியில் பறந்து சென்று விடுவான்; இவன் புத்திசாலி என்பதால், புத்திசாலி திருடர்களின் கடவுள் என்றும் கூறுவர்; இவனே தலைமைத் திருடன் என்றும் சொல்வர்; இவன் பிறந்ததிலிருந்தே திருடும் பழக்கம் உள்ளவனாம்! இவன் குகையில் பிறந்தான்; இவன் பிறந்த சிறிது நேரத்திற்கெல்லாம், இவனே இவனுக்கு ஒரு விளையாட்டுப் பொம்மையைச் செய்து கொண்டானாம்! ஒரு ஆமையின் ஓட்டை எடுத்து, அதில் ஓட்டை போட்டு அதில் கம்பிகளைக் கட்டி, வீணை போன்ற ஒரு இசையை உருவாக்கி கொண்டானாம்! இசையை முதலில் கண்டுபிடித்தவனும் இவனே! பொதுவாக, தாய் தான், தன் குழந்தைக்கு பாட்டுப்பாடி தூங்க வைப்பாள்! ஆனால் இவனோ, இவன் உருவாக்கிய அந்த லைர் என்னும் இசைக் கருவியைக் கொண்டு, இசைத்து, அவனின் தாயைத் தூங்க வைப்பானாம்!

அவர் பிறந்த குகையை விட்டு வெளியே வந்து, உலகத்தை சுற்றிப் பார்க்க நினைக்கிறான்! இவனின் பறக்கும் திறமையைக் கொண்டு பறந்து இந்த உலகைச் சுற்றி வருகிறான்! அப்படி உலகைச் சுற்றச் செல்லும்போதெல்லாம், தாளாட்டுப்பாடி, அவனின் தாயைத் தூங்க வைத்துவிட்டு செல்வானாம்; திரும்பி வரும்வரை அவனின் தாய் தூங்கிக் கொண்டிருப்பாளாம்! இவன் வெளியே சென்று உலகைச் சுற்றி வந்தது, அவனின் தாய்க்கு தெரியவே தெரியாதாம்!

அப்போலோ கடவுள் பசுமாடுகள் வைத்திருந்தானாம்; இந்த மாடுகளைப் பார்த்தவுடன், இந்த ஹெர்மிஸ் அவைகளின் மீது ஆசை கொண்டு, அவைகளைத் திருடிக் கொண்டு செல்ல திட்டமிட்டிருக்கிறான்; அந்த பசுக்களின் வால் பகுதியில் ஒரு பெரிய செடியை கட்டி விட்டானாம்; அந்த மாடுகள் நடந்து இவனுடன் வரும்போது, அந்த மாட்டின் கால்தடத்தை, அந்த செடி தரையில் புரண்டு வருவதால் அழித்து விடுமாம்! மாடு எந்தப் பக்கம் போனது என்று யாருக்கும் தெரியாதாம்! புத்திசாலி திருட்டுக் கடவுளின் யோசனை இது!

அப்போலோ கடவுளுக்கு இது தெரியாது; யார் நம் பசுக்களைத் திருடிச் சென்று என்று விசாரணை நடத்துகிறான்; அதில், ஒரு பாலகன் இந்த வேலையைச் செய்திருக்கிறான் என்று கண்டுபிடித்து விட்டான்! அவனைப் பிடித்து விசாரணை செய்கிறான்! ஹெர்மிஸ் சிறுவன் ஒரு இனிமையான பாடலை இசைத்துப் பாடுகிறான்; அதில், அப்போலோ கடவுள் மெய் மறக்கிறான்! அந்தப் பசுக்களுக்கு ஈடாக இந்த இசைக் கருவியை அப்போலோ கடவுள் வாங்கிக் கொள்கிறான்; அதிலிருந்து அந்த இசைக்கருவி அப்போலோவிடம் சேர்ந்து விட்டது;

இவன் விண்ணில் பறந்து செல்லும் திறமை இவனின் தகப்பனான ஜீயஸ் கடவுளுக்குத் தெரியவருகிறது; அவசரச் செய்திகளை மற்ற கடவுள்களுக்கு அனுப்புவதற்கு, தன் மகனான இந்த ஹெர்மிஸை உபயோகித்துக் கொள்கிறார் தலைமைக் கடவுள் ஜீயஸ்;

இவனிடம் மற்றொரு கெட்ட பழக்கமும் இருந்தது; அநியாயத்துக்கு மிக அதிகமாகப் பொய் பேசுவான்; இவனை நம்பி ஒரு விஷயத்தையும் சொல்ல முடியாது; அதை மாற்றி பொய் சேர்த்துச் சொல்லி விடுவான்; ஆனால், இவன் வேகமாகப் பறந்து போகும் திறமை வைத்திருப்பதால், இவனை விட்டால் வேறு ஆள் கிடையாது செய்து சொல்லி அனுப்ப; எனவே இவனின் தந்தை சொல்லிவிடும் செய்தியை, இவன் பாணியில் மாற்றிச் சொல்லி விடுவான்!

இவன் உலகம் சுற்றுவதால், சுற்றுலாப் பயணிகளுக்கு இவனே கடவுள் ஆவான்; அதனால்தான், கிரேக்க நாடுகளில் உள்ள தெருக்களின் சாலை சந்திப்பில் இவனின் சிலையை வைத்திருப்பார்களாம்!

இவனை வைத்துத்தான் மரத்தான் உருவானதாம்; அந்தக் காலத்தில், ஒரு செய்தியை அனுப்ப ஒரு ஆளை நியமிப்பர்; அவன் ஓடி மற்றொரு நகருக்குச் செய்தியைத் தெரிவிப்பான்; அங்கிருப்பவன் ஓடி அடுத்து உள்ள நகருக்குச் செய்தியைத் தெரிவிப்பான்; அப்படி ஒரு மராத்தான் சண்டையில் வெற்றி பெற்றதை பெய்டிப்பிடிஸ் (Pheidippides) என்பவன் ஓடி செய்தி சொல்லி, மூர்ச்சை ஆகி இறந்தான்; அவன் நினைவாகத்தான் இப்போதும் மரத்தான் ஓட்டம் நடத்தப்படுகிறதாம்;
இந்த ஹெர்மிஸ் பறப்பதற்காக ஒரு மேஜிக் கொம்பு வைத்திருந்தான்; அதன் பெயர் காடுசியஸ் (Caduceus); இதற்கு இறக்கைகள் உண்டு; அந்த கொம்பை ஒரு பாம்பு சுற்றிக் கொண்டிருக்கும்; இப்போது உள்ள மருத்துவர்களின் இலச்சினையாக (சிம்பலாக) இந்த காடுசியஸ் உள்ளது; இது ஒரு கொம்பில் பாம்பு சுற்றிக் கொண்டிருப்பதுபோல செய்யப்பட்டிருக்கும்;

இது இந்திய இதிகாசத்தில், ஒரளவு நாரதனைக் குறிப்பதுபோல உள்ளது; அவனும் நினைத்த நேரத்தில் எந்தக் கடவுளையும் சென்று பார்ப்பான்; பொய் பேசுவான்; அல்லது உண்மையை மாற்றிப் பேசுவான்! கையில், இந்த ஹெர்மிஸ் வைத்திருப்பதைப் போன்ற ஒரு இசைக் கருவியும் வைத்திருப்பான்; இவனை கடவுள், தன் தூதுவனாகவே பயன்படுத்தி வந்தார் என்றே இந்திய இதிகாசங்கள் சொல்கிறது;
**


No comments:

Post a Comment