Thursday, November 24, 2016

ஹேடிஸ் (Hades) எமன்


ஹேடிஸ் (Hades) எமன்

ஜீயஸ் கடவுளுக்கு இரண்டு தம்பிகள்; ஹேடிஸ் மற்றும் பொசிடான்; இந்தப் பிரபஞ்சத்தை மூன்றாகப் பிரித்துக் கொண்டனர்; அதில் பொசிடானுக்கு கடலையும், ஹேடிஸ்க்கு பாதாள உலகத்தையும் கொடுத்துவிட்டு, மீதி உள்ள பூமியையும், ஆகாயத்தையும் மூத்தவரான ஜீயஸ் கடவுள் எடுத்துக் கொண்டார்; ஜீயஸ் கடவுள்தான் மற்ற கடவுள்களுக்கு எல்லாம் அரசன்; (கிரேக்க இதிகாசத்தில் இப்படிச் சொல்லப்பட்டுள்ளது);

ஹேடிஸ் பாதாள உலகத்துக்கு கடவுள்; பாதாள உலகம் என்றால் இறந்த மானிடர்கள் செல்லும் சொர்க்க-நரகம் இருக்கும் இடமாக இருக்கலாம்; எனவே இந்த ஹேடிஸ்தான் எமன் கடவுளாக இருக்க முடியும்; எமதர்மராஜன்;

ஹேடிஸ் கருப்பு தலைமுடியுடன் , கருப்பு தாடியுடன் இருப்பார்; ஒரு சாரட் வண்டி வைத்திருப்பார்; அதை நான்கு கருப்பு குதிரைகள் இழுத்துக் கொண்டிருக்கும்; (இங்கு எமனின் வாகனம் கருப்பு எருமை மாடு); இந்த ஹேடிஸ் திருமணம் செய்து கொண்டார்; அவர் மனைவியின் பெயர் பிரெசெபோன்; அவள் இறந்தவர்களுக்கு ராணி, எமனின் மனைவி;

மற்ற கடவுள்களுக்கு இந்த ஹேடிஸை என்ற எமனைப் பிடிக்காது; ஏன் மனிதர்களுக்கும் இந்த ஹேடிஸ் என்ற எமனைப் பிடிக்காது; ஹேடிஸ் அப்படி ஒன்றும் பொல்லாதவர் இல்லை; நேர்மையாக நடப்பாராம்; இறந்தவர்களைக் கூட்டிக் கொண்டு போவதால், அவரை பொதுவாக எல்லோருக்கும் பிடிக்காமல் போய் விட்டது;
யாராவது இறந்து பாதாள உலகம் சென்று விட்டால், திரும்பி வர முடியாதாம்! ஆனால் ஒருவர் மட்டும் அங்கு போய் விட்டு திரும்ப வந்திருக்கிறார்; அவர் பாடகர்  ஆர்பியஸ் (Orpheus: o:fies); அந்த பாடகரின் மனைவி பெயர் யூரிடைஸ்; இந்த யூரிடைஸ் இறந்து விட்டாள்; எனவே ஹேடிஸ்-எமன் வந்து அவளைக் கூட்டிக் கொண்டு பாதாள உலகம் சென்று விட்டார்; பாடகர் ஆர்பியஸ், இறந்த தன் மனைவியை தேடிக் கொண்டு திரிகிறார்; அப்படியே பாதாள உலகத்துக்கு வந்துவிட்டார்; மனைவியை அங்கு பார்க்கிறார்; ஆர்பியஸ் சோகமான பாடல் ஒன்றைப் பாடுகிறார்; இதில் மயங்கிய ஹேடிஸ்-எமன் அவர் மீது இரக்கம் கொள்கிறார்; பாடகரின் விருப்பப்படி அவரின் மனைவியை திரும்ப கூட்டிக் கொண்டு மண்ணுலகம் செல்லும் படி கூறுகிறார்; ஆனால் ஒரு நிபந்தனை; “போகும்போது, நீங்கள் உங்கள் மனைவியை பார்க்கக் கூடாது; பார்த்தால் மறுபடியும் அவர் இறந்து விடுவார்என்று ஹேடிஸ்-எமதர்மராஜன் நிபந்தனை விதிக்கிறார்;

ஒப்புக்கொண்டு பாடகர் தன் மனைவியைக் கூட்டிக் கொண்டு பாதாள உலகத்தை விட்டு வருகிறார்; மனைவி பின் தொடர்ந்து வருகிறார்; வரும் வழியில், மனைவியின் சத்தத்தையே காணவில்லை; சந்தேகப்பட்டு திரும்பிப் பார்க்கிறார்; ஆனால் மனைவி அவர் பின்னாலேயேதான் வருகிறார்; அப்படிப் பார்க்கும்போது, அவளின் முகத்தைப் பார்த்து விடுகிறார்; நிபந்தனை மீறப்படுகிறது; எனவே மனைவி மறுபடியும் இறந்து விடுகிறாள்;  மறுபடியும் மனைவி பாதாள உலகத்துக்கு போய் விடுகிறாள்; இனித் திரும்ப வரமாட்டாள்;
பொதுவாக, ஹேடிஸ்-எமன் வெளியில் எங்கும் போய் சுற்றித் திரிவதில்லை; வேலைபளு அப்படி; அப்படி வெளியே வந்தால் மற்றவர்களுக்கு பிடிப்பதில்லையாம்! மண்ணுலகுக்கு இறப்பின் காரணமாகவே வரவேண்டி உள்ளதாம்; வேறு வேலையாக வர முடியாதாம்!

ஒருமுறை, மண்ணுலகில் சிசிபஸ் என்ற மன்னனை பிடிக்க வரவேண்டி இருந்ததாம்; அவனுக்கு ஆயுள் முடிந்து விட்டது; ஆனால் அவனோ, ஒவ்வொரு முறை ஹேடிஸ்-எமன் பூமிக்கு வரும்போது, அந்த சிசிபஸ் மன்னன் தப்பித்துக் கொள்வானாம்! சாவை ஏமாற்றிக் கொண்டே இருந்த மனிதன் இவன்தானாம்! சிரஞ்சீவி போல!

ஒருநாள், சிசிபஸை, ஹேடிஸ்-எமன் பார்த்து விட்டார்; போலீஸ் முறையில் கையில் விலங்கு மாட்டி இழுத்துக் கொண்டு போகலாம் என்று நினைத்தாராம்; தப்பிவிடக் கூடாது என்பதற்காக அப்படி விலங்கு போடுவாராம்; அப்படி விலங்கு போட்டால், மனிதனின் உயிர் பிரியாதாம்! உயிருடன்தான் மனிதன் இருப்பானாம்!  இந்த தந்திரத்தை தெரிந்து கொண்ட சிசிபஸ் மன்னர், தன்னை விலங்கு மாட்டி இழுத்துக் கொண்டு செல்லும்படி ஹேடிஸ்-எமனிடம் கூறுகிறான்; இவனின் தந்திரத்தை தெரிந்து கொண்ட ஹேடிஸ்-எமன் அப்படிச்  செய்யாமல், விலங்கு மாட்டாமல், தன் பக்கத்திலேயே நடந்து வரும்படி கூறினார்; அதனால், பாதாள உலகம் வந்தவுடன் சிசிபஸ் மன்னர் இறந்து விடுகிறார்; அங்கு பாதாள உலகத்தில் அவனைத் தள்ளிவிடுகிறார்; தன்னை ஏமாற்றிய இவன், இங்கும் ஏதாவது தில்லு-முல்லை வேலை செய்வான் என அறிந்த ஹேடிஸ்-எமன், அங்கு அவனுக்கு கடுமையான வேலையைக் கொடுக்கிறார்; ஒரு பெரிய பீப்பாயைக் கொடுத்து, அங்குள்ள உயரமான மலையில் அதை தள்ளி ஏற்றச் சொல்வாராம்; ஏற்றி முடித்தவுடன் அதை கீழே இறக்கச் சொல்வாராம்; மீண்டும் அதை மலை உச்சிக்கு ஏற்றச் சொல்வாராம்; இப்படி நாள் முழுவதும் அதே வேலை அவனுக்கு; தப்பிக்கவே முடியாது அவனால்;

ஹேடிஸ்-எமனுக்கு துணையாக ஒரு நாய் கூடவே இருக்குமாம்! அந்த நாய்க்கு மூன்று தலை இருக்குமாம்! அந்த நாயின் பெயர் செர்பரஸ்; அதுதான் ஹேடிஸ்-எமனுக்குப் பாதுகாப்பு;

பாதாள உலகத்தில் மொத்தம் ஒன்பது நதிகள் உள்ளனவாம்; (இந்திய இதிகாசத்திலும் இப்படி சொல்லப்பட்டுள்ளது); அதில் ஒரு நதியின் பெயர் ஸ்டிக்ஸ் (Styx); அங்குதான் இறந்தவர்களின் மிச்ச மீதியை தள்ளி விடுவார்களாம்; இந்த நதிதான் பாதாள உலகத்துக்கும் பூமிக்கு இடையில் உள்ள நதி ஆகும்; இதைத் தாண்டித்தான் பாதாள உலகத்துக்குப் போக முடியும்; அந்த நதியில் சரோன் என்ற ஒரு படகோட்டி இருக்கிறான்; அவன், இறந்தவர்களை கரையேற்றும் வேலையை செய்வான்; இறந்தவர்களை அங்கு உள்ள நதியில் தள்ளி விடுவானாம்; (கடும் தண்டனை கொடுக்க வேண்டியவர்களை மட்டும் பாதாள உலகத்துக்கு கூட்டிக் கொண்டுபோய் கொடுமைப் படுத்துவார்கள் போலும்!)
**


No comments:

Post a Comment