Friday, October 3, 2014

நினைவுகள் 40

வாழ்வின் அனுபவங்கள்:
வாழ்வின் அனுபவங்கள் எப்போதும் தேவைப்பட்டுக் கொண்டிருக்காது. சில நேரங்களில் அதன் தேவை இருப்பதுபோலத் தோன்றும். மற்ற நேரங்களில் நமது செயல்களே நமது அப்போதைய அனுபவங்கள். அதுவே போதும். முன் அனுபவம் என்று தனியே ஒன்றும் தேவையில்லை.

எழுதப் பழகும்போது எழுத்தை திருத்தித் திருத்தி எழுதிப் பழகியதால்தான் இப்போது வேகமாக எழுதுகிறோம் என்கின்றனர். இதை அனுபவம் என்று எடுத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால், முதன்முதலில் எழுத்தை எழுத எந்த அனுபவம் தேவைப்பட்டது? சிறப்பாகச் செய்வதற்கு வேண்டுமானால் கைப்பழக்கம் தேவைப்பட்டிருக்கும்.

வாழ்வின் அனுபவத்தைத் தேடித்தேடி வைத்துக் கொண்டு நாம் என்ன செய்யப் போகிறோம். வாய்ப்புக்கு காத்திருக்க வேண்டுமா? தேவையில்லை. பிரச்சனைகள் வரும்போது, அறிவு என்னும் அனுபவமே அதை சமாளித்துக் கொள்ளும். தனியாக ஒரு முன் அனுபவம் தேவையில்லை.

மதிற்புக்குறிய லா.சா.ராமாமிருதம் அவர்கள் பெரிய எழுத்தாளர். சின்னச் சின்ன நிகழ்வுகளைக் கூட ஆச்சரியப்படும்படி விளக்கி இருப்பார். அவரின் ஒரு சிறுகதை நினைவுக்கு வருகிறது. அவரின் கதையின் சாரத்தை மட்டும் தான் என்னால் சொல்லமுடியும். எனக்கு அந்த சரக்கை அப்படியே சொல்லத் தெரியாது. எனக்கு வார்த்தை வளம் போதாது. இது என் பாணி.

ஒரு நாயைப் பற்றி வர்ணிக்கிறார். நாய்களில் குறைக்கும் வகை, கடிக்கும் வகை, விரட்டும் வகை உண்டு. இது கடிக்கும் வகையைச் சேர்ந்த கோபக்கார நாய். பின்னர், கதையின் நாயகனான பூனையை வர்ணிக்கிறார். பொதுவாக பூனைகள் இயல்பிலேயே சாத்வீக குணம் கொண்டவை. சாந்தசொரூபி! அதுஎன்னவோ, இறைவனின் படைப்பில் இரண்டுக்கும் ஆகாது. எப்போதுமே ஒரே இனத்தில்தான் பொறாமை இருக்கும். இங்கே வேறுவேறு இனத்திலும் இந்தப் பொறாமை. ஏனென்று யோசித்தால், அவை இரண்டும் மனிதனிடம் வளர்கின்றன!

ஒருநாள், ஒரு முட்டுச்சந்தில் அந்த நாய் போகிறது. அங்கு இந்தப் பூனை. இவர்கள் இரண்டுபேருக்கும் நடக்கும் வர்க்கப் போரட்டத்தை வார்த்தைகள் கொண்டு லா.சா.ரா. வர்ணிக்கிறார். பூனையால் பின்னால் போகமுடியாது. அது முட்டுச் சந்து. நாயோ திரும்ப வராது. தான் பலசாலி என்ற நினைப்பு. அதன் உச்சக்கட்டமாக, நாயின் உறுமல். எதிரி இளைத்தவன் என்றால் எல்லோருக்கும் கொண்டாடம்தானே? நாம் என்ன எம்ஜிஆரா எதிரியிடமும் ஒரு கத்தியைக் கொடுத்துவிட்டு பின்னர் எதிரியுடன் சண்டைபோட!

ஒரு கட்டத்தில் நாயின் உறுமல் அதிகமாகிறது. பூனை எவ்வளவோ பதுங்கியும் முட்டுசந்தின் கடைசி முனைக்கு வந்துவிட்டது. இனி போவதற்கு இடமில்லை. பகவான் ஸ்ரீகிருஷ்ணன் இதுபோன்ற சமயத்திற்காகவே புத்தி சொல்லி உள்ளான். “இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை பார்த்தா! முடிவெடு!”

பூனைக்கு கடைசி நிமிடங்கள்! இனி செய்வதற்கு ஒன்றுமில்லைதான். இரண்டிலொன்று. உயிர் இருக்க வேண்டும். உயிர் போகவேண்டும். பூனை மெதுவாக உடலைப் பின்வாங்கி பதுங்கி, தன் உச்சகட்ட பலத்தை எல்லாம் கொண்டு ஒரு சிறுத்தையின் பார்வையுடன் பிரபஞ்ச அதிர்வுடன் ஒரு பிளிறலை வெளியிட்டது. அண்டமே நடுங்கத்தான் செய்தது. பாவம் நாய் என்ன செய்யும்? இதை எதிர்பார்க்கவேயில்லை. ஏதோ அசம்பாவிதம் நடக்க போவதைப் போன்று பயங்கொண்ட நாய், பூனையைப் பார்த்தது. உண்மையில் அது பூனையில்லை. ஒரு சிறுத்தைதான். ஆம். அதன் கண்கள் சிறுத்தையின் கண்களைப் போன்றே தெரிந்தது. நாய்க்கு பயம் பிடித்துக் கொண்டது. ஆம் கண்களில் சிறுத்தை தெரிந்தால், நாய் எப்படி ஒரு சிறுத்தையுடன் சண்டையிட முடியும். என்ன நினைத்ததோ நாய், பின்வாங்கி அந்த முட்டுசந்தை விட்டே ஓடிவிட்டது. ஆக பூனை தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு மெதுவாக முட்டு சந்தை விட்டு வெளியே வந்தது.

இப்படியாக அந்தக் கதையை (அவர் பாணியில்) சொல்லி இருப்பார் லா.சா.ரா. அவர்கள்.

இங்கு எந்த அனுபவம் வந்து கைகொடுத்தது? அனுபவம் என்பது ஒரு செயலைத் திரும்பத் திரும்பச் செய்வது அல்ல. சரியான முடிவை எடுப்பதே. அதற்கு முன்அனுபவம் தேவையில்லை. செத்துச் சுடுகாடு அறிய வேண்டும் என்றால், அந்த அனுபவம் எதற்கு?No comments:

Post a Comment