Sunday, October 19, 2014

நினைவுகள்-52

நானும் ரவுடிதான்!

ஒரு நேரத்தில் மனசு ரொம்ப தைரியமாக இருக்கிறது.
பேச்சும் அதேபோல தைரியமாக வருகிறது.
எல்லா பிரச்சனைக்கும் தன்னிடமே தீர்வு இருப்பது போலவும், தன்னால் மட்டும் அதை செய்யமுடியும் என்றும் நினைக்கும் தைரியம் அது.

மற்றொரு வேளையில் அப்படியே தலைகீழ்.
சுண்டெலி மனசு. பயந்து நடுங்குகிறது.
துணைக்கு ஆள் தேடுகிறது.
பயம் என்று சொல்லுவதற்கும் பயம்.
அவ்வளவு வேதாந்தமும், சிந்தாந்தமும் எங்குபோய் ஒழிந்து கொண்டன.

எது தைரியத்தைக் கொடுத்தது?
எது பயந்து பம்மச் செய்தது?
தைரியம் வந்தபோது, இறைவனுக்கே யோசனை சொல்லுமளவுக்கு துணிச்சல். நிகரில்லாத ஞானம். படைத்தவனைத் தாண்டிய அறிவு. பொய்யில்லை, நிஜம்தான். நிஜமாகவே அந்த ஞானம் அப்போது இருந்தது.

எந்த மனநிலையில் இந்தத் தைரியம்?
எந்த மனநிலையில் இந்தக் கோழிக்குஞ்சு பயம்?

பிரச்சனைகளை மனது யோசிக்காதபோது தைரியமாக இருந்திருக்கிறது.
பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும் என நினைக்கும்போது பயம்.

மனசு நினைத்த தைரியம் பொய்.
அது தனக்கு சாதகமாக ‘சூழ்நிலைகளை’ உருவாக்கிக் கொண்டு, பொய்யான தைரியத்தைக் கொடுத்தது. எல்லாம் சாதகமான சூழ்நிலை என்று வானிலை அறிக்கை படித்தது. அதை நம்பி வந்த தைரியம்.
அப்படியென்றால், மனசு பொய் சொல்லும்போதெல்லாம் இந்த தைரியம் வருமா? ஆம்.
மனசு எப்போதெல்லாம் பொய் சொல்லும்?
அது கற்பனை செய்யும்போதெல்லாம் பொய் காட்சி காண்பிக்கும்.
அதுதானே பார்த்தேன். நமக்கா இவ்வளவு தைரியம், ஞானம் வந்திருக்கப் போகிறது? அது பொய் சினிமா காட்டி, தைரியமாக இருப்பதுபோல் ஏமாற்றி விட்டது.
நிஜத்தை எதிர்கொள்ளச் சக்தி இல்லாமல், பொய்யைக் கதையாக்கி காட்சியாக்கி விட்டது.
நிஜத்தை எதிர்கொள்பவரே தைரியசாலி. நாம் முடிவெடுக்கும்வரை நிஜம் காத்திருக்காது. நிஜத்திற்கு அப்போதே முடிவு தேவை.
நிஜம் நம்மை நல்லவனாக மட்டுமே உருவம் காட்டாது. நல்லதும் கெட்டதும் கலந்த கலவையாகக் காட்டும்.
ஒரே ஒரு துணிச்சல்தான் நமக்கு வேண்டும்.
“நான் நல்லவனும் அல்ல, கெட்டவனும் அல்ல, இரண்டும் கலந்த கலவை. எனக்கென்று ஒரு அடையாளம் இல்லை. சூழ்நிலையே எனது அடையாளம்.” –இவ்வாறு நினைப்பவனே தைரியசாலி. ஆக நான் கோழைதான்.








No comments:

Post a Comment