Tuesday, October 14, 2014

நினைவுகள்-48

‘ஒருவர் நம்மை மதிக்கிறார்’ என்பதை எதைக் கொண்டு எடைபோடுவது?
அவர் பேசும் பேச்சால் எடைபோடலாமா?
அல்லது அவரின் செயலால் எடை போடலாமா?
அல்லது அவரின் நடவடிக்கையால் எடை போடலாமா?
மற்றவர் ஏன் நம்மை மதிக்க வேண்டும்?அதனால் நமக்கென்ன லாபம்?
பலம் உள்ளவரைப் பார்த்து, பலமில்லாதவர் மரியாதை செய்வது எதனால்? பயத்தால்.
வசதி உள்ளவரைப் பார்த்து, வசதியில்லாதவர் செய்யும் மரியாதை? தயவை எதிர்பார்த்துத்தான்!
அதிகாரத்தில் இருப்பவர் எவரும் தனக்கு கீழே உள்ளவரை மதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே பெரும்பாலும் எண்ணுகின்றனர்.
மற்றவர்கள்தான், தன்னை மதிக்க வேண்டும் எனவும் விரும்புகின்றனர்.  
அப்படியென்றால், மதிப்பு என்பது ஒருவரின் வசதி, பதவியை வைத்து வருவதா?

பிருகு முனிவர். இவர் ஒரு மகா ரிஷி.
இவர் வம்சத்தில்தான் பரசுராமர் பிறந்தார்.

பிருகு ரிஷி ஒரு காலத்தில் சிவனைக் காண சென்றபோது, அவருக்குத்  தரிசனம் கொடுக்காமல் கண்டு கொள்ளாமல் இருந்தார். அதனால் பிருகு முனிவர் கோபித்துக் கொண்டு சிவனை 'லிங்கமாக ஆகுக!' என்று சபித்து விட்டார்.

பின்னர் பிரம்மாவை பார்க்கச் செல்கிறார். அவரும் இவரை மதிக்கவில்லையாம். 'உமக்கு எந்த ஆலயமும் இல்லாமல் போகுக! உமக்கு பூஜையும் இல்லாமல் போகுக!' என்று சபித்துவிட்டார்.

பின்னர் விஷ்ணுவிடம் செல்கிறார். அவர் தூக்கத்தில் இருக்கிறார். எனவே முனிவர் வந்ததைப் பார்க்கவில்லை. முனிவருக்கு கோபம் வந்து, தன் காலால் விஷ்ணுவின் மார்பிலே மிதிக்கிறார்.  விஷ்ணுவோ விழித்து எழுந்தபின்னரும் கோபம் கொள்ளாமல், உமது கால்கள் என் மார்பின்மீது பட்டதே பெரும் புண்ணியம் என்று சொல்கிறார். முனிவர் சமாதானமாகி 'நீயே இனி எல்லோராலும் வணங்கத்தக்க கடவுள்' என்று சொன்னாராம்.

ஆனால் கந்தபுராணம் வேறு மாதிரி சொல்கிறது.
பிரம்மா, பொய் சொன்னதற்காக அவருக்கு கோயில் இல்லை என்று கூறுகிறது.

நாம் உண்மையில் மற்றவரை மதிக்கிறோமோ இல்லையோ, மதிப்பதுபோலக் காண்பிக்கவாவது வேண்டும். இல்லையென்றால் மற்றவர் நம்மை தவறாகவே புரிந்து கொள்வார்கள்.




No comments:

Post a Comment