Sunday, October 5, 2014

நினைவுகள்-41

முதன்முதலில் இறந்த மனிதன் யார்?

நடிகர் வடிவேலு ஒரு படத்தில் நடித்த காட்சி.
லாட்டரியில் பரிசு விழுந்தால் விவசாயப்பண்ணை வைப்பேன் என்று ஒருவர் சொன்னதற்கு எதிராக, தனக்கும் அதேபோல் பரிசு விழுந்தால் ஆடுமாடு வாங்கி ‘அந்தப் பண்ணையில்’ மேயவிடுவேன் என்பார்.

நாம் நல்லா இருக்கணும் என்பதைக் காட்டிலும், நம்மைத்தவிர, நம்மோடு தொடர்புடையவன் எவனும் நன்றாக இருக்கக்கூடாது என்பதில் இயல்பாகவே மனித இனம் குறியாக இருக்குமாம்!

இதை பைபிளிலும் காணலாம்.
ஆதாம் ஏவாளுக்கு பிறந்த முத்த பிள்ளையின் பெயர் கைன் (Cain).
அவர்களின் இளைய பிள்ளையின் பெயர் ஏபல் (Abel).
மூத்தவன் விவசாயம் பார்க்கிறான். இளையவன் ஆடுமாடு மேய்கிறான்.
கடவுளுக்கு நன்றி சொல்வதற்காக கடவுளுக்குப் படையல் படைப்பார்கள்.
மூத்தவன் தானியங்களை படைப்பான்.
இளையவன் இளம் ஆட்டுக் குட்டிகளைப் படைப்பான்.
மூத்தவனின் படையலில் சாமிக்கு திருப்தி இல்லை போல! அவனை விரும்பவில்லை.
ஆனால், இளையவன் படைத்த இளம் ஆட்டுக்குட்டிகளை சந்தோஷமாக சாமி ஏற்றுக் கொண்டார். இளையவனிடம் பிரியம் கொண்டார்.
மூத்தவனுக்கு இதனால் பொறாமை ஏற்பட்டது.
ஒருநாள் மூத்தவன், இளையவனை கொலை செய்கிறான்.
ஆக முதன்முதலில் கொலை செய்யப்பட்டு இறந்தவன் ஏபல்.
அந்தக் கொலையைச் செய்தவன் அவனின் அண்ணன் கைன்.
பிறந்த முதல் பிள்ளைகளுக்குள்ளேயே சண்டை, கொலை.
மனித இனம் ஆரம்பித்த நேரம் சரியில்லை போலும்!

இந்தக் கதையை இன்னொரு விதமாகவும் சொல்வார்கள்.
மூத்தவன் கைன், இளையவன் ஏபல் இருவருக்கும் பெண் பார்க்கிறார்கள். அந்த பெண்கள் இருவரும் இரட்டை பிறவிகள். அதில் இளைய பெண் அக்லிமா (Aclima) மிக அழகாக இருப்பாள். அந்த இளையவளை, இளையவனுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்யலாம் என்று இருந்தார்கள். ஆனால் மூத்தவன் இந்த ஏற்பாட்டுக்கு ஒப்புக் கொள்ளவில்லை. எனவே கடவுளின் ஒப்புதல் பெற யோசனை சொல்லப்பட்டது. அதன்படி இளையவன் படைத்த படையலை கடவுள் ஏற்றுக் கொண்டார். மூத்தவன் படையலை கடவுள் ஏற்கவில்லை. இதனால் மூத்தவன் கோபமடைந்தும், பொறாமை கொண்டும் இளையவனை கொலை செய்தான் என்றும் சொல்வர்.

ஒரு பழத்துக்காக சண்டையிட்ட, பிள்ளையார், முருகன் கதையும் கிட்டத்தட்ட இதேநிலைதான். கொலை மட்டும் நடக்கவில்லை. தம்பி கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு ஓடிவிட்டான்.

ஆனால் இப்போதுள்ள கலியுகத்தில், தாய்களுக்கு அவர்களின் இளைய மகன் (அல்லது இரண்டாவது மகன்) மேல்தான் பிரியம் அதிகமாக இருப்பதாக உளவியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள். அந்த இரண்டாவது மகன் என்ன தவறு செய்தாலும், அதை அவனின் தாய் எந்த ஆட்சேபனையும் செய்யாமல் ஏற்றுக் கொள்வதுடன் அந்தத் தாய் அவனுக்காக பரிந்தும் பேசுகிறார். இது பெரும்பாலான தாய்களின் குணமாக உள்ளதாம். உளவியல் காரணம் தெரியவில்லையாம்.

சகோதர சண்டைகளுக்கு பெரும்பாலும் பெற்றோர் காரணமாக இருக்கிறார்கள். தவறினால் கடவுள் அந்த வேலையை செய்துவிடுவார் போலும்!



No comments:

Post a Comment