Tuesday, October 21, 2014

சதாபிஷேகம்


சதாபிஷேகம்
குழந்தை பிறந்து ‘ஒரு வருடம் முடிந்து’ கொண்டாடுவது முதல் பிறந்தநாள். பிறந்து ஒருவருடம் (Anniversary) முடிந்தது என்பதைக் கொண்டாடுவது. (பிறந்ததைக் கொண்டாடுவது இல்லை.)
எத்தனையாவது பிறந்தநாள் என்பது, எத்தனைவருடங்கள் ‘முடிந்தது’ என்பதைக் குறிக்கும்.
81-வது பிறந்தநாள் என்பது பிறந்து 80 வருடம் முடிந்தது என்பதைக் கொண்டாடுவது. 81st Birthday.
சதாபிஷேகம் என்பது, இவர் பிறந்து 80 வயதாகும்வரை மொத்தம் 1000 பௌர்ணமிகளைப் பார்த்தவர்.
80 வருடங்களில் 80 x 12 =960 ம் 80/2 =40 ஆக 960+40=1000. (வருடத்திற்கு பன்னிரண்டரை பௌர்ணமிகள் வீதம்).
வயதை எட்டு எட்டாக பிரிக்கச் சொன்னதுபோல ஒரு வகை.
இங்கு, இருபது இருபதாகப் பிரித்தால் இந்த 80 வயது 4 பிரிவு.
முதல் இருபது ஒன்றும் அறியாத வயது. கன்றுக்குட்டி பசுமாட்டைச் சுற்றிவருவதுபோல.
இரண்டாவது இருபது, வாழ்க்கையின் எல்லா உண்மையும் விளங்கும் வயது. மனிதனாக இங்கு வந்ததன் ‘உண்மை நோக்கத்தை’ கடவுள் இதில் காட்டியிருப்பான்.
அடுத்த மூன்றாவது இருபது, சிலருக்கு இளைப்பாறும் சொர்க்க வசதி. சிலருக்கு நரக தண்டனை. இதில்தான், கடவுள் ‘கர்ம-வினை தீர்க்கும்’ சொர்க்க நரகத்தின் தீர்ப்பைக் காட்டுவான்.
அடுத்த நான்காவது இருபது, சிலருக்குக் கிடைக்கும். சிலருக்கு கிடைக்காது. நல்ல மக்களைப் பெற்றவர் இந்த இருபதில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வர். சிலர், ‘கடவுள் ஏன் என்னை கூட்டிச் செல்ல வரவில்லை’ என ஏங்குவர்.  இங்கும் கர்வ-வினையின் தீர்ப்பை எழுதி இருக்கிறான். ஒருவேளை, முன் வழக்கில் தப்பித்தவர்களுக்கு இது அப்பீல் கோர்ட்டாக இருக்குமோ?

இதில் விஷேசம் என்னவென்றால்,
80 வயதை தாண்டும்போதும் அவர் இளமையுடன், உடல்நலத்துடன், நல்ல சிந்தனையுடன், தன்னைத்தானே பார்த்துக்கொள்ளும் வலிவுடன் இருப்பாரேயானால், அவரே இந்த உலகின் அரசன். அந்த வயதில் தன் மனைவியுடன் இருப்பாரேயானால் பேரரசன்.
எனவே அவர் இந்தப் பூவுலகின் பொக்கிஷம்.
அப்படியென்றால், 100 வயதானவர்?
எண்பதை தொரடர்ந்த பயணம்... சுயமாகவே இயங்குபவர் கடவுளின் அருள் பெற்றவர். மற்ற நாடுகளில் இவருக்குத் தனி மரியாதை. இந்தியர்கள் அதன் அருமை தெரியாதவர்கள். இங்கு ‘கிழம்’ என்ற வசை.

இன்று ஒரு சதாபிஷேக தம்பதியரிடம் ஆசி பெற்றவதன் விளைவு.
கட்டுப்பாடானவர்; தனிஒழக்கம் கொண்டவர்; கடவுள் வழிபாட்டுடன், கடவுளை சேவை செய்வதில் தன்னை முழுதாக்கிக் கொண்டவர். சிறந்த சிந்தனைவாதி. எல்லாச் செல்வங்களுடனும் வாழ்பவர்.





Sunday, October 19, 2014

தெளிவானவர் எழுதிய பைத்திக்கார உயில்...

“தெளிவானவர் எழுதிய பைத்தியக்கார உயில்”

“பைத்தியக்காரன், ஒரு உயில் எழுதமுடியாது.”
அதுபோல, “தெளிவானவர், ‘ஒரு பைத்தியக்கார உயிலை’ எழுதக்கூடாது.”

The principle is that “just as a mad person cannot make any will, so a sane person cannot make a mad will.”

தானே தன் கைபட எழுதிய உயிலுக்கு பெயர் ஹாலோகிராப் உயில் (Holograph will).
தன் கையாலேயே தானே எழுதிய உயில் என்று பெயர்.
பழைய காலத்தமிழில் இதன் பெயர் ‘சுயலிகிதம்.’ – self-written.

1935-ல் ஸ்காட்லாந்தில் ஒரு பெண்மணி இவ்வாறு ஒரு சுயலிகித உயிலை எழுதியுள்ளார். (Holograph will). அவருக்கு வேறு வாரிசுகள் இல்லை. அவர் இறப்புக்குபின் அவரை புதைத்த இடத்தில் உள்ள அவரின் உடலின் மிச்சங்களை எடுத்து ஒரு கல்லறை போன்ற ஒரு பெரிய அறை (கட்டிடம்) கட்டி அதில் வைக்க வேண்டுமாம். அவரின் மொத்த சொத்துக்களையும் இந்த கட்டிடச் செலவுக்கு உபயோகிக்க வேண்டுமாம். அத்துடன் அந்தப் பெண்மணியின் சித்தப்பா, சித்தியின் இவர்களின் இறந்த உடலின் மிச்சங்களையும் இவ்வாறே இவரின் இறந்த உடலின் மிச்சங்களுடன் சேர்த்து அங்கு ஒரே பெட்டகத்தில் வைக்க வேண்டுமாம்.

இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த உயில் எழுதிய பெண்மணியின் சித்தப்பா இறந்து 40 வருடங்கள் ஆகிவிட்டது. அப்போதே அங்குள்ள வழக்கப்படி, அவரின் சித்தி, அந்த சித்தப்பாவுக்கு கல்லறை கட்டிவிட்டார். அதற்குப் பின் 20 வருடங்கள் கழித்து சித்தியும் இறந்துவிட்டார். அவருக்கும் அவரின் கணவரின் அருகிலேயே கல்லறை கட்டப்பட்டு விட்டது.

இந்த உயிலை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு கோர்ட்டுக்கு வருகிறது. பொதுவாக இறந்தவர் மேல் உள்ள பிரியத்தில் அவரைப் புதைத்த இடத்தில் கல்லறை கட்டுவது, அல்லது இறந்தவரின் உடலின் எலும்புகளைக் கொண்டு வந்து வேறு ஒரு இடத்தில் ஞாபகச்சின்னம் கட்டுவது வழக்கமாம்.

ஆனால் ஏற்கனவே இறந்தவர்களுக்கு ஏற்கனவே கல்லறை இருப்பதை மறுபடியும் தோண்டி எடுத்து வேறு ஒரு இடத்தில் கல்லறை கட்டுவது என்பது சட்ட சிக்கலாகும். இறப்பதற்கு முன்னர் அவரே சொல்லியிருக்க வேண்டும் அல்லது இறந்தவுடன் அவரது உறவினர்கள் அவரின் கல்லறையைக் கட்டுவது பொதுவான செயல். ஆனால் இங்கு ஒரு உயிலில் “கல்லறையில் இருப்பவரை” அகற்றச் சொல்வது முடியாதாம். அவருக்கு அந்த உரிமையும் இல்லையாம்.

ஸ்காட்லாந்து கோர்ட் அந்த உயிலை நிராகரித்துவிட்டது.
The fulfillment of the testatrix’s directions is impossible, and that the bequest is invalid.

“testamenti factio”
There are unwise and even eccentric people who leave behind them unwise and eccentric wills. 
Lord Blackburn:
“The testatrix in her holograph testament desires that two things should be done which, at first sight, might appear to be quite distinct but which, on second thoughts, appear to me to be inextricably mixed up. The first is the erection of a vault in which her own body is to be interred – the second that the bodies of her so-called uncle and aunt should be exhumed from their present grave and reinterred in the vault along with her own body.”
The terms are a follows:
“(1) The bones of my uncle and aunt to be lifted out of their present grave…. And placed in separate coffins in the same vault with my own remains. (2) A reliable person is ‘to see the vault properly built and the remains of Mr. … and Mrs. … and my own remains put properly into it; and (3) the stone and railing of the present grave in … cemetery to be placed alongside of the vault.”






அடிடா நொறுக்குடா...

அடிடா, நொறுக்குடா...
மருத்துவமனைகளில், மருத்துவம் கைகொடுக்காமல் போனாலும், மருத்துவர் கைவிட்டுவிட்டாலும், உயிர் இழப்புகள் ஏற்படுவது இயற்கை. ஆனால், பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் மருத்துவமனைகளை தாக்குவது இப்போது அதிகமாகியுள்ளது. இதற்கு இரண்டே காரணங்கள்தான். மருத்துவமனைகள், போதுமான உபகரணம், அனுபவமிக்க மருத்துவர்களை, நர்ஸ்களை, உபயோகித்துக் கொள்ளாமல் பணம்பண்ணுவது. மற்றொன்று மருத்துவர் வேண்டுமென்றே அஜாக்கிரையாக இருந்து விட்டார் என்று பாதிக்கப் பட்டவரின் உறவினர் கண்ணை மூடிக்கொண்டு குற்றம் சொல்வது.

இதற்கு இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு சட்டத்தை கொண்டு வந்துவிட்டால், இத்தகைய அசம்பாவிதங்கள் இரண்டு பக்கமும் நேராது.

ஸ்காட்லாண்டில் ஒரு வழக்கு:
அந்த நாட்டின் 49 வயது ஆண் நோயாளியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கின்றனர். அவருக்கு ஏற்கனவே உடலெல்லாம் நோய். மூளை பாதிப்பு, சர்க்கரை வியாதி, ஹெபட்டிடிஸ்-சி, எபிலெப்சி என்னும் காக்காய்வலிப்பு. பத்து வருடங்களுக்கு முன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். யூரினரி-மூத்திர பாதை அடைப்பு நோய், பத்தாததற்கு நெஞ்சுவலியும் அவ்வப்போது வருமாம். சர்க்கரை வியாதியை ஒழுங்காக கவனித்துக் கொள்ளவில்லையாம். அதனால், சாப்பாட்டை விழுங்கிச் சாப்பிட முடியாதாம். (he had difficulty in swallowing).

இதனால் இவரின் அடிவயிற்றில் ஒரு அறுவைச்சிகிச்சை செய்து, அதன்வழியாக ஒரு டியூப் விட்டு வயிற்றுக்கு சாப்பாட்டை கொடுக்கலாம் என டாக்டர்கள் முடிவு செய்கிறார்கள். இந்த மாதிரி டியூப் போடுவதை Percutaneous Endoscopic Gastrostomy (PEG) என்பர். பெக்-டியூப் வைத்து ஆப்பரேஷனும் செய்யப்பட்டது. லோக்கல் அனஸ்தீசியா மட்டுமே கொடுக்கப்பட்டது.

ஒருவாரத்தில் அந்த நோயாளி இறந்து விட்டார். போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டது. போஸ்ட்மார்ட்டம் செய்த டாக்டர் அறிக்கையில், பெக்-டியூப் சரியாக பொருந்தியிருக்கவில்லை என்றும், உணவு சிறிது வெளியேறிவிடுகிறது என்றும் அதனால் வயிற்றின் உள்ளே வீக்கம் வந்தது என்றும், பெக்-டியூப் சரியாகப் பொருத்தி இருந்தால், இந்தப் பிரச்சனை இருந்திருக்காது என்றும் சொல்லப்பட்டது.

இறந்தவரின் உறவினர்கள் அங்குள்ள Fatal Accident Act என்னும் மரணம் நேரும் விபத்துச் சட்டப்படி மருத்துவமனைமீது வழக்குப் போடுகிறது. மருத்துவமனையோ, பெக்-டியூப் முறையில் சாப்பாடு கொடுப்பது பொதுவானதுதானே. அந்த மாதத்தில்மட்டும் மொத்தம் 32 நோயாளிக்கு பெக்-டியூப் சாப்பாடுதான் கொடுத்திருக்கிறோம். இதில் அஜாக்கிரதை இல்லை. டியூப் சரியாகவே பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனால் டியூப்பில் போகும் சாப்பாடு அவரின் வயிற்றில் விழுவதில் பிரச்சனை என்பது உள்ளே நிகழ்ந்துள்ளது.

வழக்கு கோர்ட்டுக்குச் செல்கிறது.
ஐரோப்பிய கூட்டமைப்பின் மனித உரிமைப்படி, (European Convention of Human Rights=ECHR) இந்த வழக்கு விபத்து மரணத்தில் வராது. அந்த ECHR சட்டப்படி மனிதன் உரிமை என்னவென்றால்;
1.      ஒவ்வொரு தனிமனித உயிரும் சட்டத்தால் பாதுகாக்கப்பட்டது.
2.      கோர்ட் தண்டனை தவிர மற்ற விஷயங்களில் ஒரு மனிதனை தண்டிக்கவோ, இம்சிக்கவோ, யாருக்கும் உரிமையில்லை.

ஆனாலும், இந்த வழக்கில் இறந்த நோயாளி, அவன் இறக்கும்வரை மருத்துவ கண்காணிப்பில் இருந்துள்ளான். அவன் உயிர் போகட்டும் என்று எந்த அஜாக்கிரதையாகவும் யாரும் நடக்கவில்லை. எனவே இங்கு எந்த மனித உரிமை மீறலும் நடக்கவில்லை. அதாவது “நோயாளி, மருத்துவ சிகிச்சையில், கண்காணிப்பில் இருந்ததால், அவர் விபத்து-இறப்பு என்று கருத முடியாது.

“I take it from that it means that the requirement to hold an effective judicial inquiry into the death of a patient in medical care does not arise, in the absence of at least some reasonable possibility of a person responsible for the care of that patient being found in breach of duty.”

என்னதான் அனுபவமிக்க மருத்துவர்களும், காலத்துக்கேற்ற மருத்துவ உபகரணங்களும், புதிய புதிய மருந்துகளும் இருந்தாலும், நோயாளி பிழைப்பது என்பது அவனின் உடற்கூறும், இறைவனின் அருளும் சேர்ந்து நடக்கும் ஒரு கூட்டுச் செயல்.

மருத்துவர்களின் அஜாக்கிரதை இருக்கும் விஷயங்களில் மட்டும், நிவாரணம் கேட்கவும், அப்படி இல்லாத விஷயங்களில், மருத்துவமனைகளையும், மருத்துவர்களையும் தாக்குவதை தடுக்கவும், நம்மூரிலும் போதுமான, விளக்கமான சட்டங்கள் தேவைப்படுகிறது.





நினைவுகள்-52

நானும் ரவுடிதான்!

ஒரு நேரத்தில் மனசு ரொம்ப தைரியமாக இருக்கிறது.
பேச்சும் அதேபோல தைரியமாக வருகிறது.
எல்லா பிரச்சனைக்கும் தன்னிடமே தீர்வு இருப்பது போலவும், தன்னால் மட்டும் அதை செய்யமுடியும் என்றும் நினைக்கும் தைரியம் அது.

மற்றொரு வேளையில் அப்படியே தலைகீழ்.
சுண்டெலி மனசு. பயந்து நடுங்குகிறது.
துணைக்கு ஆள் தேடுகிறது.
பயம் என்று சொல்லுவதற்கும் பயம்.
அவ்வளவு வேதாந்தமும், சிந்தாந்தமும் எங்குபோய் ஒழிந்து கொண்டன.

எது தைரியத்தைக் கொடுத்தது?
எது பயந்து பம்மச் செய்தது?
தைரியம் வந்தபோது, இறைவனுக்கே யோசனை சொல்லுமளவுக்கு துணிச்சல். நிகரில்லாத ஞானம். படைத்தவனைத் தாண்டிய அறிவு. பொய்யில்லை, நிஜம்தான். நிஜமாகவே அந்த ஞானம் அப்போது இருந்தது.

எந்த மனநிலையில் இந்தத் தைரியம்?
எந்த மனநிலையில் இந்தக் கோழிக்குஞ்சு பயம்?

பிரச்சனைகளை மனது யோசிக்காதபோது தைரியமாக இருந்திருக்கிறது.
பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும் என நினைக்கும்போது பயம்.

மனசு நினைத்த தைரியம் பொய்.
அது தனக்கு சாதகமாக ‘சூழ்நிலைகளை’ உருவாக்கிக் கொண்டு, பொய்யான தைரியத்தைக் கொடுத்தது. எல்லாம் சாதகமான சூழ்நிலை என்று வானிலை அறிக்கை படித்தது. அதை நம்பி வந்த தைரியம்.
அப்படியென்றால், மனசு பொய் சொல்லும்போதெல்லாம் இந்த தைரியம் வருமா? ஆம்.
மனசு எப்போதெல்லாம் பொய் சொல்லும்?
அது கற்பனை செய்யும்போதெல்லாம் பொய் காட்சி காண்பிக்கும்.
அதுதானே பார்த்தேன். நமக்கா இவ்வளவு தைரியம், ஞானம் வந்திருக்கப் போகிறது? அது பொய் சினிமா காட்டி, தைரியமாக இருப்பதுபோல் ஏமாற்றி விட்டது.
நிஜத்தை எதிர்கொள்ளச் சக்தி இல்லாமல், பொய்யைக் கதையாக்கி காட்சியாக்கி விட்டது.
நிஜத்தை எதிர்கொள்பவரே தைரியசாலி. நாம் முடிவெடுக்கும்வரை நிஜம் காத்திருக்காது. நிஜத்திற்கு அப்போதே முடிவு தேவை.
நிஜம் நம்மை நல்லவனாக மட்டுமே உருவம் காட்டாது. நல்லதும் கெட்டதும் கலந்த கலவையாகக் காட்டும்.
ஒரே ஒரு துணிச்சல்தான் நமக்கு வேண்டும்.
“நான் நல்லவனும் அல்ல, கெட்டவனும் அல்ல, இரண்டும் கலந்த கலவை. எனக்கென்று ஒரு அடையாளம் இல்லை. சூழ்நிலையே எனது அடையாளம்.” –இவ்வாறு நினைப்பவனே தைரியசாலி. ஆக நான் கோழைதான்.








Saturday, October 18, 2014

நினைவுகள்-51

நம்பிக்கை என்பது முழுஅர்பணிப்பு.
நம்புகிறேன் என்பதே, ஏதோ ஒரளவு நம்புகிறேன் என்றுதான் நம்புகிறோம். முழுநம்பிக்கைதான் நம்பிக்கை என்பதன் முழுவடிவம்.

கடவுள், தனக்கு ஏதாவது அதிசயத்தைச் செய்தால், அந்தக்கடவுளையும், அவர் இருக்கிறார் என்பதையும் நம்புவதாகவும், இல்லையென்றால், நம்ப வாய்பில்லை என்றும் நினைக்கிறோம்.

கடவுள் நம்மிடம் அதிசயம் நிகழ்த்திக் காட்டித்தான் அவர் இருப்பதைச் சொல்ல வேண்டுமா? நிகழ்த்திக்காட்டுவதால் அவருக்கு இதில் என்ன லாபம்? கடவுள் இருக்கிறார் என்று அப்போதுதான் நான் நம்புவேன். உன்னை நம்ப வைத்து காசு பார்ப்பதற்கு அவர் என்ன மோடி மஸ்தான் வேலை செய்பவரா?
எல்லா மதங்களின் புனித நூல்களுமே, கொஞ்சம் அதிகமாகவே மிரட்டும் தொனியில் இதைச் சொல்லியுள்ளது.
“நீ என்னை நம்பு. என்னைத் தவிர வேறு எதையும் நம்பாதே.
“நான் உன்னை முழுவதுமாகக் காப்பாற்றும் ஒரே கடவுள்.
“நீ என்னிடம் முழுமையாகச் சரணடைய வேண்டும்.

இது ஏதோ பிசினஸ் அக்ரிமெண்ட் போல உள்ளதே?
ஆம் பிசினஸ் அக்ரிமெண்ட் தான்.
நாம் ஒரு பெரிய மனிதரைப் பார்க்கப் போனால், அவரிடம் நாம் காட்டும் மரியாதையே நம்மை அவரிடம் நெருங்கவிடும். அவரும் நெருங்குவார். இந்த மரியாதையை நாம் நம்பிக்கையுடன் செய்தால் காரியத்தை சாதித்துக் கொள்ளலாம்.
கடவுளுக்கு எதுக்கு இந்த ஆசை?
யார் மதித்தாலென்ன, மதிக்காவிட்டாலென்ன?
விருப்பு வெறுப்பு அற்றவனுக்கு மரியாதை அவசியமில்லைதான்.
அவன் மரியாதையை ‘நம்மிடம்’ கேட்கவில்லை.
நீ, நம்பி என்னிடம் சேர் என்கிறார்.
ஏன் நம்ப வேண்டும்?
பிரபஞ்ச முழுவதையும் என் ஆளுமையில் வைத்திருக்கிறேன். எல்லா அணுவில் என் இயக்கம் உள்ளது. முதலில் நீ அதை நம்பு. பின்னர், அதில் நான் இருப்பதை நம்பு. அதனுடன் உன் இயல்பை சேர்த்துக் கொள். உன் காரியம் நடந்துவிடும்.
ஒரு அணுவுக்குள் நீ வராமல், நான் வெளியேறி வந்து உனக்கு செயலாற்றுவது இயற்கைக்கு எதிரானது. நான் மந்திரவாதி போல உனக்கு அதிசயங்களை நிகழ்த்த மாட்டேன். ஆனால், என்னுள் நீ ஐக்கியமானால், நீ நானாவாய், நானும் நீயாவேன். இருவரும் Synchronize ஆகிவிடுவோம்.

ஸ்ரீகிருஷ்ணனுடன் விளையாடித் திரிந்த கோபிகைகள் (பெண்கள்) 16,000 பேர். இவர்களுடன் வேறு வேறு இடத்தில் தனித்தனியே கிருஷ்ணன் விளையாடிக் கொண்டிருக்கிறான். அது எப்படி முடியும் என்று கேட்கத் தோன்றும். ஆம், கிருஷ்ணன் ஒரே நேரத்தில் பல இடங்களில் பல கோபிகைகளுடன் வேறு வேறு விளையாட்டை விளையாடி இருக்கிறான். அவர்களுக்குத் தெரியாது. கிருஷ்ணன் நம்முடன் மட்டும்தான் விளையாடிக் கொண்டிருக்கிறான் என்று அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். அது மனித இயல்பு.

இதை வேறு ஒரு விளையாட்டு மூலம் விளக்கப்படுகிறது. யமுனை நதியில் குளிக்கும் கோபிகைகளின் உடைகளை எடுத்து மரத்தின் மீது வைத்து விடுகிறான் கிருஷ்ணன். அவர்கள் கெஞ்சியும் கொடுக்கவில்லை. என்னைக் கையெடுத்து தொழுது கொண்டு வந்தால் தருவேன் என்கிறான். அவர்களும் அப்படியே வந்து வாங்கியதாக கதை. கொஞ்சம் விரசமான கதையாகச் சொல்லப் பட்டுள்ளது. பூர்வ ஜென்மத்தில், இந்தக் கோபிகைகள் விஷ்ணுவின் அடியார்கள்.
இதில் நம்பிக்கையைப் பற்றி சொல்வதற்காக இந்தக் கதை சொல்லப் பட்டுள்ளது.
‘முழுவதுமாக என்னைச் சரணடை’ என்கிறார். யோசிக்காதே.
இங்கு கிருஷ்ணன் எதை உணர்த்தினான்?
“நீ எப்படி என்னைக் கருதிக் கொண்டு வழிபடுகிறாயோ அவ்வாறே நான் வருவேன்.
சிலர் என்னை மகன் என்கிறார்கள்.
சிலர் என்னை நண்பன் என்கிறார்கள்.
சிலர் என்னை எதிரி என்கிறார்கள்.
சிலர் என்னை காதலன் என்கிறார்கள்."

அவர்களின் மன ஓட்டத்துக்கு நான் ஈடுகொடுத்தால்தான் அவர்களின் ஆசையை நான் நிறைவேற்ற முடியும். எனவே நானும் அவ்வாறே ஆகிறேன்.
இதைத்தான் கோபிகைகளின் உடையை மறைத்து, பின் கொடுத்த விஷயத்திலும் சொல்லி உள்ளார். கிருஷ்ணன் பெண்களை அவ்வாறு பார்க்க ஆசைப்படவில்லை.
உன் விருப்பம் எதுவோ அதுவாக நான் மாறுவேன் என்கிறார்.
அப்படியென்றால், நாம் என்ன ஆசைப் படுகிறோமே அதுவாகவே கிருஷ்ணன் நம்மை நெருங்குகிறான்.
நாமும் கடவுளிடம் நம்பிக்கை வைப்போம், அதை தெளிவாக வைப்போம், அதையும் முழுவதுமாக வைப்போம்.
நிச்சயம் நம் கடவுள் நாம் நினைத்த்\தை, கேட்டதைக் கொடுப்பான். கொடுத்தாக வேண்டும்.
இதிலும் ஏதோ விஞ்ஞானம் இருப்பதாகவே தெரிகிறது.

இதுவும் வாழும் வழிதான்.

ஞெள்ளல் (வீதி)

சந்து பொந்துகளின் தமிழ்ப் பெயர்கள்:

மதில் = கடகம், காப்பு, பிரகாசம், நொச்சி, ஆரல், புரிசை, வேணகை, வாரி
               உவளகம், இஞ்சி, அரணம், எயில், ஓதை, சிறை, வேதி, சாலம், அகப்பா, வேலி.
அகழி = பரிகம், கிடங்கு, கேணி, பாம்புரி, உடு, ஓடை.
மதிலுறுப்பு = எந்திரம், கோசம், நாஞ்சில், தோணி, ஞாயில்.
மதிலுள் உயர்ந்த மேடை = பரிகம், அகப்பா, பதணம்.
நகர வாயில் = கோபுரம், கோட்டி.
நகர வாயிற்கதவில் விட்டுப்புகும் வழி = புதவு.
நகர வாயில் திண்ணை = அளிந்தம்.
நகர வாயிற்படி சுருள் = அத்தினகம்.
அங்காடி = ஆவணம், கூலம், பீடிகை.
குதிரைவையாளி வீதி = செண்டுவெளி, புரவிவட்டம், திருமுற்றம்.
வீதி = ஞெள்ளல்.
அரசர்வீதி = பூரியம்.
நெடுந்தெரு = மன்றம், மார்க்கம், நிகமம்.
குறுந்தெரு = மறுகு.
கோணத்தெரு = முடுக்கு.
முச்சந்தி = அந்தி.
சந்து = சதுக்கம்.
நாற்சந்து = சிருங்காடகம், சதுக்கம்.
சிரேணி = வாடை, சேடி.
ஆயர்வீதி = ஆபீணம்.
சிற்பர் வீதி = ஆவேசனம்.
வேடர் வீதி = பக்கணம்.
அம்பலத்தின் வீதி = மன்றம், பொதி, பொது, சபை.
சித்திரகூடத்தின் வீதி = தெற்றியம்பலம்.


ஊர்களின் தமிழ்ப் பெயர்கள்

ஊர்களின் தமிழ்ப் பெயர்கள்:
ஊர் என்பதன் மற்ற தமிழ்ப் பெயர்கள் =
பாக்கம், இருக்கை, பாழி, பட்டினம், பள்ளி, முட்டம், பூக்கம், சம்வாகம், நொச்சி, பூரியம், பாடி, பூண்டி, கோட்டம், வாழ்க்கை, மடப்பம், குடி, குடிக்காடு, குறிஞ்சி, குப்பம், அருப்பம், நத்தம், சும்மை, அகரம், புரம், சேரி, அகலுள், வைப்பு, உறையுள், வேலி, நகரம், பக்கணம் (பத்தணம்), கிராமம், கருவடம், குறும்பு, வேசனம், தாமம், நிவேசனம், பதி, பேடு, புரி.
நீரும் வயலும் உள்ள ஊர் = கிராமம்.
சிறு கிராமம் = நூறு குடிகள் நிறைந்தவூர்.
பெருங்கிராமம் = ஐந்நூறு குடிநிறைந்தவூர்.
இராசதானி = புரம், புரி, நகரம்.
மலை செறிந்தவூர் = கேடம்.
மலையும் ஆறும் சூழ்ந்தவூர் = கருவடம்.
ஐஞ்ஞூறு (ஐநூறு) கிராமத்தின் தலைமை கிராமம் = மடப்பம்.
பலபல தீவிற்பண்டம் விற்கும் ஊர் = பட்டணம்.
நெல்லும் புல்லும் நிறைந்த மலை ஊர் = சம்வாகம்.
கழியிருக்கை = தோணாமுகம்.
சிற்றூர் = பட்டு, நொச்சி, பள்ளி.
குறிஞ்சி நில ஊர் = குறிச்சி, சிற்றூர், சீறூர்.
முல்லை நில ஊர் = பாடி.
நெய்தல் நில ஊர் = பட்டினம்.
பாலை நில ஊர் = குறும்பு.
மருத நில ஊர் = புரி, குடம், நகரம், பூக்கம், புரம், குடி, நிகாயம், பள்ளி, சரணம், ஆவாசம், பாக்கம், தாவளம், நிகமம், தாமம், நிலயம், கோட்டம்,  பதி, வாழ்க்கை, சேர்வு, பாழி, வசதி.


புதன் புத்திசாலிதான்...

“பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காதுதான்”

புதனின் தந்தை சந்திரன்.
புதனின் தாய் தாரை.
ஆனால் கவிஞர்கள் எல்லாம் சந்திரனைப் பெண்ணாக வர்ணித்தனர்.
ஆனால் உண்மையில் சந்திரன் ஆண்தான் போலும்.
சூரியனும் ஆண்தான்.
சூரியனின் மகன் சனி.
ஒன்பது கிரகமுமே சொந்தக்காரர்களாகத்தான் இருப்பார்கள் போல!

சந்திரனின் மகன்தான் புதன்.
புதன் என்றால் Mercury.
சூரியனுக்கு மிக அருகில் புதன் இருக்குமாம். நாலரைக் கோடி கி.மீ.
புதன்தான் எல்லாக் கிரகத்தைக் காட்டிலும் மிகச் சிறிய கிரகமும்.
ஆனால் சந்திரனைவிட ஒன்னறை மடங்கு பெரியது.

பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது.
இதற்கு 24 மணி ஆகிறது. எனவே ஒரேநாளில் பகல் இரவைப் பார்த்துவிடும்.

ஆனால், புதன், சூரியனைச் சுற்றுவதற்கு 88 நாள்கள் தேவைப்படுகிறதென நினைத்திருந்தார்கள். ஆனால் 58 நாட்கள்தான் ஆகிதென்று இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். பகல் இரவு 58 நாளுக்கு ஒருமுறைதான். 58 நாட்கள் புதனின் ஒருபக்கம் இருட்டாகவே இருக்கும்.

சூரியனுக்கு அருகில் இருப்பதால், சூரியனின் வெளிச்சம் படும்பகுதி 400 டிகிரி சூடாக இருக்கும். புதனின் மறுபக்கம் இருட்டுப் பகுதி கடும் குளிராக இருக்கும். அதனால், இங்கு எந்த உயிரினமும் இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறார்கள்.

சந்திரனின் மகன்தான் புதன் என்று சொன்னதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனாலும், சந்திரனைப் போலவே, புதனிலும் பௌர்ணமி, அமாவாசை, வளர்பிறை, தேய்பிறை காட்சிகள் பார்க்கலாமாம். அதனால், தந்தையைப் போல பிள்ளை என்று நினைத்துச் சொல்லி இருப்பார்களோ?

Mercury-மெர்குரி (புதன்) என்றால் Merchant மெர்சண்ட் (வியாபாரம்) என்று பொருள். அதனால் புதன் பணத்துக்கும், வியாபாரத்துக்கும், உரிய தெய்வம். அதனால்தானோ என்னவோ "பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது" என்று சொல்லி முக்கிய வியாபாரத்தை ஆரம்பிக்கிறார்கள்.

ரோமன் மித்தாலஜிப்படி, (இதிகாசப்படி) புதன் என்பவன் வியாழனின் மகன்.
எல்லாக் கடவுளுக்கும் அரசன் ஜூப்பிடர் (Jupiter). இவர்தான் குரு, வியாழன்.
ஜூப்பிடர் என்னும் வியாழனின் இளைய மகன்தான் இந்த மெர்குரி என்னும் புதன்.
மெர்குரி என்னும் புதனின் தாயார் பெயர் மெய்யா.
இந்த மெய்யா தான் அட்லஸின் மகள்.

புதன் நிறைய திறமை உடையவர். வேகமாகப் பறப்பார்.  மிகுந்த நம்பிக்கைக்கு உரியவர். சமாதான முடிவை எடுப்பவர். பிரச்சனைகளிலிருந்து விடுவிப்பவர். அதனால்தான், எந்தப் பெரிய பிரச்சனையானாலும், குரு என்னும் வியாழன் எப்போதும் தன் இளைய மகனான புதனையே அனுப்பி வைப்பாராம்.



பேச்சைக் கேட்கும் புலி இருந்த காலம்...

குமரகுருபர சுவாமிகள்.
இவர் தனது 10 வயது வரை ஊமையாக இருந்தவர். இவரின் தந்தை, இவரை திருசெந்தூர் முருகனின் ஆலயத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டார்.

அங்கு முருகன் இவரின் ஊமைதன்மையை நீக்கி, கவிபாடும் அளவுக்கு பாடும் சக்தியைக் கொடுத்து விட்டார். அதுமுதல் அற்புதமாகக் கவி பாடுகிறார்.

இவர் காசி யாத்திரைக்கு நடந்தே செல்கிறார். வழியில், வேங்கடகிரி காட்டில் ஒரு புலி, வருவோர் போவோரை கடித்து கொன்று விடுகிறது. அந்த வழியில் இவர் போகிறார். வழியில் அதே புலி வருகிறது. இவரிடம் ஏதோ கடவுள் அருள் இருக்கும்போல. அற்புதங்களையும் செய்கிறார். இவர் அந்தப் புலியை அழைக்கிறார். அது இவரிடம் பம்மிக் கொண்டு வருகிறது. என்னை காசியில் விட்டுவிடு என்கிறார். அதன் முதுகில் ஏறி உட்காருகிறார். அதுவும் இவரைச் சுமந்து கொண்டு காசி வழியில் செல்கிறது. வழியில் யாருக்கும் எந்த துன்பமும் கொடுக்கவில்லை.

இந்த விஷயத்தை அப்போது அரசாண்ட மன்னன் அக்பர் கேள்விப்படுகிறார். அந்த துறவியை நம் அரண்மனைக்கு அழைத்து வாருங்கள் என்று ஆணையிடுகிறார். அதனால், துறவி அங்கு செல்கிறார். துறவிக்கு மன்னர் அக்பர் மரியாதை செய்கிறார். ஆனால் அதைப் பார்த்த அந்த மத ஆசாரியர்கள் அதை விரும்பவில்லை. மன்னனின் விருந்து நடக்கிறது. அந்த விருந்தில், மாட்டு மாமிசம் கறியாக சமைக்கப்பட்டுள்ளது. இந்தத் துறவியோ காய், கனிகள் மட்டும் சாப்பிடுவார். அவரின் தட்டிலும் மாட்டுக்கறி.
ஆனாலும், அவர் சொல்கிறார், "எனக்கு மரக்கறி உணவும், பன்றிக்கறி உணவும் ஒன்றுதான். நான் எந்த வித்தியாசமும் பார்ப்பதில்லை." என்று கூறுகிறார். படைத்திருப்பதோ மாட்டுக்கறி. இவர் அதை பன்றிக் கறி என்கிறார் என குழம்புகின்றனர். முகமதியர்கள் பன்றிக் கறியை அவர்களின் மதவழக்கப்படி உணவாகச் சேர்த்துக் கொள்ளக் கூடாது. எனவே எல்லோரும் பதறி எழுந்துவிட்டனர்.

அப்போதும், பொறுமையாக, ஏன் எல்லோரும் எழுந்துவிட்டீர்கள். எல்லோர் தட்டிலும் என்ன இருக்கிறதென்று பாருங்கள், என்று சொல்கிறார். அமிர்தமான கனிவகைகள் தட்டில் இருக்கின்றன. அதிசயமாக இருக்கிறது. உடனே அவர்கள் மன்னிப்பு கேட்டுக்கொண்டு சாப்பிட்டுவிட்டு அவருக்கு உதவிகளைச் செய்கிறார்கள்.

மன்னர், இவரின் வேண்டுகோளுக்கிணங்க, கங்கை துறைகளையும், விஷ்வநாத சுவாமி கோயிலுக்கும், அம்மைக்கும் அனேக மானியங்களை கொடுத்து உதவுகிறார்.
இவர் எழுதிய நூல்கள் மிகச் சக்தி வாய்ந்தவைகளாம்.



Wednesday, October 15, 2014

நினைவுகள்-50


எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும், ஒரு நேரத்தில் ஒரு சிறிய விஷயத்தில் ஏமாந்துவிடுவர்.
அதுபோலவே, எவ்வளவு பெரிய பலசாலியும் ஒரு சின்னவனிடம் தோற்றுவிடவும் நேரும்.
எவ்வளவு பெரிய அதிகாரம் படைத்தவராக இருந்தாலும், ஒருநேரம் தனது ஒரு சொல்லைக் கேட்கக்கூட ஆள் இல்லாமல் இருப்பர்.
இது மனிதவாழ்வில் அடிக்கடி நிகழும் நிகழ்வுகள்தான்.
800 வருடங்களுக்கு முன்னரும் இது நிகழ்ந்துள்ளது.

ஆளவந்தார்.
இவருக்கு யமுனைத் துறைவர் என்றும் பெயர்.
மிகப் பெரிய அறிவாளி.
12 வயது சிறுவனாக இருந்தபோது, பாண்டிய சமஸ்தான வித்துவானாக ஆகிவிட்டார்.  பாண்டிய மன்னனின் பாதி நாட்டை போட்டியில் பெற்று அரசு செய்தவர்.
பாண்டிய மன்னனிடம் இருந்த ஒரு பண்டிதரைப் பார்த்து இந்த மூன்று கேள்விகளைக் கேட்கிறார்.
1. உமது தாய் புத்திரவதி அல்லள். (உன் தாய், குழந்தை பெற்றவள் இல்லை).
2. தர்மவான் பாண்டிய மன்னன், தர்மவான் இல்லை.
3. ராஜபத்தினி (ராணி, பாண்டியனின் மனைவி) பதி விரதை இல்லை.
இந்த மூன்று கேள்விகளையும் கேட்டு அதை உன்னால் நிரூபிக்க முடியுமா என்றும் கேட்கிறார். அதைக் கேட்ட அந்த வித்துவான் பேசாமல் இருக்கிறார்.
பாண்டிய மன்னன் குறுக்கிட்டு, இந்தச் சிறுவனைப் பார்த்து, 'நீ நிரூபித்தால், என் நாட்டில் பாதியைத் தருகிறேன்' என்கிறார்.
1. ஒரு பிள்ளை, பிள்ளையல்ல. ஒரு மரம் தோப்பாகாது. ஒரு முறை ஈன்ற வாழை, பின்னர் மலடி. அதுபோல, ஒரு பிள்ளை பெற்றவள், பின்னர் மலடிதானே. எனவே உன் தாய் புத்திரவதியல்லள்.
2. குடிகள் (குடிமக்கள்) செய்யும் பாவங்கள் அந்த அரசனையே சேரும். இது விதி. எனவே அரசன் தருமவானாய் இருக்க முடியாது.
3. மணப் பந்தலில், அக்கினி தேவன் முதலிய தேவர்களுக்கு முன்னால்அந்த மணப்பெண்ணை அவர்களிடம் சேர்த்து வைத்து, அதற்குப் பின்னரே, மணமகனுக்குக் கொடுக்கின்றனர்.  அப்படிப் பார்த்தால், அந்தப் பெண், தனது பதிவிரதை கொள்கைக்கு பங்கம் ஏற்பட்ட பின்னரே, மற்றொருவனுக்கு மனைவி ஆகிறாள். ஆதலால், அரசனின் மனைவி பதிவிரதை இல்லை.

இவ்வாறு கூறி, பாண்டிய மன்னனின் பாதி நாட்டைப் பெற்று ஆண்டதாகச் சொல்வர்.

இவ்வளவு அறிவானவரும், தெளிவானவரும் ஒருமுறை ஏமாந்துவிட்டார்.
இவரை மணக்கால் நம்பி என்னும் ஒரு வைஷ்ணவர், சந்தித்து, “உன் பாட்டனாரின் புதையலை உனக்கு காட்டுகிறேன் வா” என்று பொய் சொல்லி அழைத்துச் சென்று ஏமாற்றி விட்டார்.
ஏமாந்தவர், ஸ்ரீரங்கம் வருகிறார். அங்கு திருமாலைப் பார்க்கிறார். அவரைக் கண்டவுடன் துறவு பூண்டு, இனி விஷ்ணுவின் வழிபாடே எனது ராஜாங்கம் என்று வாழ்ந்தார்.
இது நடந்தது சுமார் 800 வருடங்கள் இருக்கும்.