Monday, February 15, 2016

கிராதார்ச்சுனீயம் (பாஞ்சாலியின் கோபம்)

கிராதார்ச்சுனீயத்தில் பாஞ்சாலியின் பேருரை:
தருமனை நோக்கிப் பாஞ்சாலி நிகழ்த்தும் பேருரை:

"என் உயிர் காதல! நீர் தரும நெறி தவறாத ஒழுக்கமுடையவர்; நானோ சின்மதிப் பெண்மை தாங்கி நின்றவள்; உம் முன்னால் அரசியல் பற்றி யாதும் பேசத் தகுதியற்றவள்; எனினும், 'மாற்றான் வலிமையுடையவன்' என்று நீர் கூறிய மாற்றமே என்னை இரண்டொரு வார்த்தைகள் பேசத் தூண்டியது;"

"உயிர்த்துனைவ! முன்னர் இந்திரனுக்கு இணையான இகல் வேந்தரால் நன்கு பரிபாலிக்கப்பட்ட இந்த குருநாட்டு அரசு, கடகளிற்றின் (ஆண் யானையின்) கையில் அகப்பட்ட கமழ் பூமாலை என உம்மால் கொன்றே சிதைக்கப் பட்டது; நீவிர், அரசை அன்று ஊழ்வழியால் இழந்தீர் அல்ல; பகைவனின் வாளி (அம்பு) கூர்மை உடையது என்று அறிந்தும், இரும்புச் சட்டை அணியாது பாராமுகமாய் இருந்து வருகிறீர்! 'வருமுன் காப்பது நியாயமல்லவோ! வஞ்சகனிடத்தில் வஞ்சகமாக நடக்காதவனுக்கு இவ்வுலகில் அவமானம் வந்து எய்துதல் திண்ணம் என்பதை அறியமாட்டீரா?"

"இலக்குமி சபலை (ஒரே இடத்தில் நிலை இல்லாதவள்) என்றாலும் குணமுள்ள கோமானை ஒருபோதும் விட்டு அகலுவதில்லையே! எழினலங்கொண்ட உமது உயிர் போன்ற மனையாளை (மனைவியை) மன்னவன் அவையில் மாற்றான் மானபங்கம் செய்யப் பார்த்திருந்தும் வாயடக்கி வாளாதிருந்தீரே? நாடுதோறும் விபத்துக்கள் எங்களை வேட்டையாடிக் கொண்டிருந்தும், நீர் மட்டும் பொறுமையை மேற்கொண்டது எதனால்?"

"நல்ல குடிப்பிறந்தார், தெய்வத்தால் தமக்கு, ஓர் இழிவு நேர்ந்தால், ஒரு நொடியும் உயிர் வாழாரே! நீர், மனிதரால் வந்த இந்த இழிவுக்கு மருந்தாக வெகுளி கொள்ளாதது ஏன்? ஒருக்கால், வெகுளி பொல்லாதது என்று விட்டு விட்டீரோ? சினம் செல்லாவிடத்து ஒருவன் அதனைக் காப்பினும், காவாது ஒழியினும் இரண்டும் ஒன்றே; சினம் செல்லுமிடத்து ஒருவன் அதனைச் செலுத்துவதற்குத் தடை என்ன? நீர் வெகுண்டால் இந்த உலகமே நடுங்கும்; இம் மண்ணுலகத்துள்ள மன்னவர் எவருமே உமக்கு வயப்படுவார்கள்; சினமில்லான் பகையும், நட்பும் ஒரு தன்மையே! அவனை உலகம் சிறு துரும்பு எனவும் மதிப்பதில்லை; இனியேனும் நீர் சினங்கொண்டு பகைவர் வலியிழக்கத் துணீவீரோ?"

"ஆருயிர்த் துணைவ! முன் நாளில், அன்னத்தின் தூவி (இறகு) பரப்பிய மென்பூஞ் சேக்கையில் படுத்துக் கண்படைகொண்டு வைகறையில் வந்திமாகதர் வாழ்த்துப்பாடத் துயில் எழும் நீங்கள், இன்று கூரிய தருப்பைப் புற்களிற் படுத்துத் துயில் கொண்டு நரிகளின் ஊளைச் சத்தம் கேட்ட பின்னர் அன்றோ கண் விழிக்கின்றீர்; இதனை நான் எவ்வாறு சகிப்பேன்? "

"முன் நாளில், எல்லா உயிரிகளிடமும் செந்தண்மை பூண்டு ஒழுகும் அந்தணர்க்கு முதலில் அமுது படைத்து, அவர் உண்ட பின்னரே மீதி எச்சிலை நீர் ஏற்றுக் கொள்வீர்; அதனால் உங்கள் உடம்பும், பொலிவுடன் விளங்கியது: ஆனால் இன்று, கானகத்தில் காய், கனி, கிழங்கு இவைகளை உண்டு உங்கள் திருமேனியும் மெலிவுற்றது; இதைக் காண என் மணம் படும் பாட்டை சொல்ல முடியவில்லையே!"

"மன்பதை மாட்டு இன்ப துன்பங்கள் சகடக்கால் போல மாறி மாறி வரும் என்றாலும், தெய்வீகமான இன்னல்களைப் பொறுப்பதன்றி, மனிதரால் வரும் அவைகளை விலக்க முயலாமல் பொறுத்தல் சரியானதன்று;"

"இன்னுயிர் நாயக! இதுகாறும் நீங்கள் பொறுமையை மேற்கொண்டது போதும், போதும்; இனியேனும் பகை கடப்பதற்கான உபாயங்களை ஒல்லும் வகை முயன்று சிந்தித்தல் வேண்டும்;"
 **

No comments:

Post a Comment