வயிரவநாதன்
இவ்வளவிற்கும் அவனை முழுப்
பைத்தியம் என்று எல்லோரும் ஒதுக்குவது போல் அந்த தாயாரால் மட்டும் ஒதுக்கிவிட முடியவில்லை; அவளுக்கு அவன் ஒரே மகன்; செல்ல மகன்; சித்த சுவாதீனத்தில் இம்மியும் பிழையில்லாத அருமை மகன்;
ஆனால், அவனுக்கு என்னவோ, தாய், வீடு,
உலகம் என்ற வேறுபாட்டைக் கிரகிக்கும் அளவுக்குப் புத்தி வளர்ச்சி அடைந்திருந்ததாகக்
கூடத் தென்பட வில்லை; பசித்தால் அம்மா தர வேண்டும் என்ற நம்பிக்கை;
அதற்கும் அப்பால் சிந்திக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை;
தேவையும் இல்லை;
பதினேழு, பதினெட்டு வயதுக்கு ஏற்ற வளர்ச்சி; சிறிது அசிங்கமாக
உப்பிய வயிறு; ஆனால் பத்தே வயது மதிக்கக்கூடியதாக, ரோமமே இல்லாத முகம்;
அவன் பள்ளியில் படித்த
காலங்களில் அவனைக் காலையிலே கூட்டி வந்து பள்ளியில் விடுவாள் அந்தத்தாய்; அதற்குப் பின், பகல் எல்லாம் காவல் கிடந்து, பின்னேரம் மூன்று மணிக்குப் பள்ளி விட்டதும், சேலைத்
தலைப்பால் அவன் தலையை மூடிக் கவனமாக வீட்டுக்கு அழைத்துச் செல்வாள்; ஆனால் அவனுடைய படிப்பு என்னவோ, அரிஅரி வகுப்பில் நாலு
வருடம் தொடர்ச்சியாக இருந்ததோடு முடிந்து விட்டது;
ஒருநாள்... பள்ளி வாத்தியார் அந்த வழியாகப் போகிறார்;
நேரம் ஒருமணி இருக்கும்;
"ஏடி செல்லம்மா....
இஞ்ச வாடி.... வாத்தியார் போறாலெல்லோ.... அந்த வேட்டியைக் கட்டிவிடன்டீ...."
அவன், குளித்த உடம்போடு உயர்ந்து நெடுக நின்று கொண்டிருந்தான்.
தாய், வேட்டி கொண்டுவர
உள்ளே போயிருக்க வேண்டும்;
உடல் வளர்ச்சி அடைந்த
அளவுக்கு அறிவு வளரவில்லை; இருந்தாலும் வாத்தியாருக்கு முன்னால்
நிர்வாணமாக நிற்கக்கூடாது என்று படுகிறது அவனுக்கு;
சொந்தமாக எதையும் செய்யும்
திறமையே அவனுக்கு இல்லையா? என்னுடைய மனமானது அவன் தாய் செல்லம்மா
என்ற உயிருடன் பிணைந்து ஒன்றி நிற்கும் வயிரவநாதன் உருவத்தை தனித்து, இழுத்து, நிறுத்திக் கற்பனையிலே பார்க்க முயன்று கொண்டிருக்கிறது;
"எடி.... செல்லம்மா....
மூதேவி.... வேட்டியைக் கொண்டாடி..... வாத்தியார் பாக்கிறார்....."
பைத்தியம் என்று அவனை
அப்படியே ஒதுக்கிவிட என்னால் முடியவில்லை; எவருமே வியக்கத்தக்க
அபூர்வ சாதுர்யத்தோடு அவன் சில வேளைகளில் நடந்திருப்பதை நானே பார்த்திருக்கிறேன்;
இனந்தெரியாத, கோபித்துப் பேச முடியாதபடி,
பயத்தினுள் கலந்திருக்கும் ஒருவித ஆபூர்வக் கவர்ச்சியையும் நான் அவனிடத்தில்
கண்டிருக்கிறேன்;
இருந்தும், ஏதோ ஒரு குறைபாடு எல்லாவற்றையும் மீறி இயங்கிக் கொண்டுதான் இருப்பதாக எனக்குப்
பட்டது;
(நன்றி: பிரபல எழுத்தாளர்
அ.முத்துலிங்கம் அவர்களின் கதைகள் தொகுப்பிலிருந்து ஒரு கதையின் சிறு பகுதி.......)
No comments:
Post a Comment