Sunday, February 7, 2016

புளிசாதம்

புளிசாதம்
நாலு முழ வேட்டி, அதன்மேல் முக்கோணப்பட மடித்து பட்டிபோல் அரையைச் சுற்றி கட்டிய ஈரிழைத்துண்டு; தலையில் ஒரு துண்டுத் தலைப்பா; தோளில் சால்வை; இதனுடன் கால்களில் தோற்செருப்பு; செவிகள் இரண்டிலும் கடுக்கண்; சொருக்கு அவிழ்ந்த குடுமியைக் சொடுக்கி முடிந்து கொண்டு அந்தக்கால மணற்கோடு கிழித்த ஒற்றையடிப் பாதையில் செல்கிறார்கள் என்றால், அவர்கள் பட்டணம் போகிறார்கள் என்று அர்த்தம்;
பயணம் செல்பவர்களைப் பின்னால் இருந்து கூப்பிடக்கூடாது; அதற்காகவே முதல்நாளே பயணம் சொல்லிவிடுவர்; சிலர், பட்டணத்தில் தனக்கு பொருள் வாங்கிவரும்படி காசு பணம் கொடுத்து தொந்தரவும் செய்வர்; இந்த இடைஞ்சலை தவிர்க்கவே, விடிவெள்ளி காலிக்கும் முன்பே பயணம் புறப்பட்டு விடுவர்; பயணத்துக்கு உதவாத சகுனப் பிழைகளைத் தவித்துக் கொள்ளவும் இந்த அகாலவேளை சாலச் சிறந்தது; அந்தக் காலத்தில்,  தும்மினால், பல்லி சொன்னால், வழியில் வெறும் குடத்தைப் பார்த்தால், பூனை குறுக்கே போனால், "முழுவியளம் சரியில்லை" என்று பயணத்தை நிறுத்த வேண்டி இருக்கும்;
ஓலைப் பெட்டியில் புளிசாதப் பொட்டலங்கள், கிணறுகளில் தண்ணீர் அள்ளுவதற்கு செம்பு, அதற்கு நூற்கயிறு இவற்றுடன் பயணம்; செலவுக்கு பணத்தை வைத்துக் கொள்ள பெரிய வல்லுவம் (wallet); வல்லுவத்தின் ஒரு அறையில் நாணயக் குற்றிகள், அடுத்த அறையில் ரூபாய்த் தாள்கள்; மற்ற அறை சற்று பெரியது, அதனுள் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்புக் கரண்டகம், காசுக்கட்டி, களிப்பாக்கு, மணப்பாக்கு, என்பனவற்றோடு, பித்தளையில் செய்த வெற்றிலைச் செல்லம் என்ற வெற்றிலை பாக்கு இடிக்கும் கருவியும், குடுமி வாங்கி முள் எடுக்கும் ஊசியும்;
அப்போதெல்லாம், தீவுப்பகுதி மக்களின் பிரயாண வசதி மிகக் குறைவு; மாட்டுவண்டி தவிர்த்த வேறோர் வாகன வசதியற்ற காலம்; பிரயாணங்கள் கால்நடையாகவே இருக்கும்;
மதிய வேளை; இத்தகைய அடையாளங்களுடன் வெகு தொலைவிலிருந்து வந்திருப்பவர், தண்ணீர் எடுக்கலாமா என்று கேட்டார்; நான் செம்பில் நீர் எடுத்துக் கொடுத்தேன்; வேண்டாம் என்றார்; கிணற்றைக் காட்டினால் போதும் என்றார்; அவர் கொண்டுவந்த செம்பில் நூற்கயிறைக் கட்டி, நீர் இரைத்து, முகம், கை, கால் கழுவி, தாகம் தீர நீர் அருந்திய கையோடு, வைரவக் கோயில் திருநீற்றினை கைநிறைய அள்ளி, நெற்றி, நெஞ்சு கைகள் முகம் என்று எல்லா உறுப்புகளிலும் நிறையப் பூசிக் கொண்டார்; சந்தனத்தையும் நீரில் குழப்பி பொட்டும் இட்டுக் கொண்டார்; இப்போது அவர் மிகப் புனிதராய் ஆகி விட்டார்; இளைப்பாற சுவரில் சாய்ந்து கொண்டே, “சிவ, சிவா இப்போதுதான் தெம்பு வந்தது” என்றும் கூறிக் கொள்கிறார்;
“சாப்பிடுவதற்கு ஏதாவது வேண்டுமா” என்று கேட்டேன்;
"ஆமாம், சாப்பிட வேண்டும், ஆனால் நான் கண்ட கண்ட கடைகளில் சாப்பிடும் வழக்கம் இல்லை; வீட்டிலிருந்தே புளிசாதம் கொண்டு வந்திருக்கிறேன் என்றார்; அவர் பேச்சில் அகங்காரம் தொனித்தது;
சிறிது நேரத்தில், அங்கு தலையில் தலைப்பாகை இறுக்கிய தளநாறுடன் அரையில் பட்டி இறுக்க, இரண்டு "முட்டிகளை" கைகளில் தூக்கியபடி ஒருவர் சென்றார்; அந்தக் காட்சியை இவர் பார்த்தாரோ இல்லையோ, "தம்பி, இந்த பொருள்களைக் கொஞ்சம் பார்த்துக்கோ தம்பி" என்று அவசரமாகச் சொல்லிவிட்டு, அவர் பின்னே சென்றார்;
மாலை மணி நான்காகியும் வரவில்லை; அவரை காணவில்லையே என்ன ஆயிற்றோ என்று அவரைத் தேடிப் போனேன்; யாரோ ஒருவர் பனை வளவில் விழுந்து கிடக்கிறார், வெளியூர்காரர் போல என்று சொன்னார்கள்;
ஆசாரங்கள் எல்லாம் வெளியில்தானா? இது மற்றவர்களுக்காக போடும் வேஷமா? நான் கொடுத்த செம்புத் தண்ணீரை வாங்க மறுத்து, தானே கிணற்றில் நீர் இறைத்து குடித்த ஆசாரசீலரா இவர்வெளிவேஷக்காரர்கள்! மற்றவர்களுக்காக வாழ்பவர்கள்!! சுயத்தை அறியாதவர்கள்!!!
கடைக்குத் திரும்பி வந்து பார்க்கிறேன்; அவரின் புளிசாதத்தை நாய் தின்று கொண்டிருக்கிறது; எத்தனை ஆசைகளுடன் அவரின் மனைவி அந்தப் புண்ணியவதி சமைத்துக் கட்டிய உணவோ?
(நன்றி: யாழ்பாணம், தில்லைச் செல்வன் அவர்களின் “அந்தக் காலத்துக் கதைகள்” என்ற தொகுப்பிலிருந்து ஒரு கதை...)
**



No comments:

Post a Comment