Sunday, August 10, 2014

ஆனா.ரூனா.கானா.செட்டியார்

ஆனா. ரூனா.கானா. செட்டியார் (Ana. Roona. Laina. Chetty)

லஷ்மணன் செட்டி என்பவர் மதராஸ் மாகாண த்தில் உள்ள வட்டித் தொழில் செய்யும் செட்டியார். இவருக்கு மிகப் பெரிய வட்டித் தொழில் பர்மா நாட்டில் பல இடங்களில் நடக்கிறது. ஏற்கனவே இவருடன் மேலும் இரண்டு பார்ட்னர்கள் இருந்தனர். அந்த வியாபாரத்துக்குப் பெயர் "ஆனா. ரூனா. லேனா. செட்டி" என்று பெயர், (A.R.L. Chetty). அதில் ஒருவர் காலமாகி விட்டார். மற்றவர் வியாபாரத்திலிருந்து விலகிக் கொண்டார். லஷ்மணன் செட்டி மட்டுமே சொந்த தொழிலாக இதைச் செய்கிறார். வியாபாரங்களைப் பார்க்க ஆளில்லை. இவர் மதராஸில் தங்கிவிடுவதால், பர்மாவில் ரங்கூனில் உள்ள வட்டிக் கடைகளை நடத்தி வருவதற்காக, ராமசாமி என்பவருக்கு பவர் பத்திரம் 24.10.1904 தேதியில் எழுதிக் கொடுக்கிறார். ஏஜெண்டும், "ஆனா.ரூனா.லேனா. ராமசாமி செட்டி" என்று வியாபரத்தை மேனேஜ்மெண்ட் செய்து வருகிறார். அவராலும் கவனிக்க முடியாமல், அவருக்கு ஒரு துணையாக சொக்கலிங்கம் செட்டி என்பவருக்கு பவர் கொடுக்கிறார். அவர்தான், பர்மாவில் உள்ள எல்லா இடங்களிலும் இவர்களின் வட்டித் தொழிலை கவனித்து வருகிறார்.

இதற்கிடையில், ஹாசன் இப்றாகீம் என்பவர், இந்த சொக்கலிங்கம் செட்டியாருக்கு அறிமுகம் ஆகிறார்.  இப்றாகீமுக்கு பணம் தேவைப்படுகிறது. பேங்க் ஆப் பெங்கால் (Bank of Bengal) என்ற பாங்கில் வட்டிக் கடையின் ஜாமீனில் சொக்கலிங்கம் கையெழுத்துச் செய்து ரூ.50,000/- பாங்க் கடன் வாங்கிக் கொடுக்கிறார். பாங்கில், ஆனா.ரூனா.லேனா வட்டிக் கடைதான் ஜாமின் என்று சொக்கலிங்கம் பவர் ஏஜெண்டாக கையெழுத்தை செய்கிறார். இப்றாகீம், பாங்கில் மொத்த பணத்தையும் வாங்கிக் கொண்டு, கம்பி நீட்டிவிட்டார். தலைமறைவு. இப்றாகிம் சொத்துக்களை கடனாளி சொத்துக்கள் என அரசாங்கம் Official Assignee அதிகாரி மூலம் கைப்பற்றி வைத்துள்ளது.

பாங்கும் ஜாமீன் கொடுத்த ஆனா.ரூனா.லேனா. சொக்கலிங்கம் வட்டிக் கடையை பணம் கேட்டு வழக்குப் போடுகிறது. ஆனால், சொக்கலிங்கத்துக்கு, இந்த வட்டிக்கடை பேங்க்கில் கடன்வாங்கும் அதிகாரத்தை எப்போதும் கொடுக்கவில்லை எனவே அவர், பேங்க்குக்கு எழுதிக் கொடுத்த ஜாமீன் பத்திரம் செல்லாது என வாதாடுகிறது. கீழ்கோர்ட், பேங்குக்கு சாதகமாகத் தீர்ப்பை வழங்குகிறது.

அப்பீல் கோர்ட்டான, Chief Court of Lower Burmah, பேங்க்குக்கு எதிராக தீர்ப்புக் கூறுகிறது. அப்பீல் கோர்ட்டில் செட்டியாருக்கு சாதகமாக தீர்ப்பு, அதாவது 1-வது பவர் ஏஜெண்ட், வேறு ஒரு ஏஜெண்டை நியமிக்க அதிகாரம் இல்லை என முடிவு.

ஆனால் பிரைவி கவுன்சிலோ தீர்ப்பை மாற்றி விட்டது.
சொக்கலிங்கம் தான் வியாபாரத்தை பார்த்துக் கொண்டு வந்துள்ளார். இப்ராஹீமுக்கு வாங்கிக் கொடுத்த பணத்திலும் கமிஷன் வாங்கிக் கொண்டார். அந்தக் கமிஷன் கணக்குப் புத்தகத்தில் உள்ளது. இவரே வெகுகாலமாக பணம் கொடுக்கல் வாங்கல் செய்திருக்கிறார். செட்டியார்களுக்கும், செட்டியார் அல்லாதவர்களுக்கும் கடன் கொடுத்து வசூலும் செய்திருக்கிறார். அப்படி இருக்கும்போது, இந்த ஒரு விஷயம் மட்டிலும் அவருக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லிவிட முடியாது என்று பேங்க்குக்கு சாதகமாக தீர்ப்பை வழங்கி விட்டது.

Ref: The Bank of Bengal vs Ramanathan Chetty and others.
Privy Council Appeal No.42 of 1915
Judgment on 16.12.1915.
வழக்குகள் நடந்து கொண்டிருக்கும்போதே லஷ்மணன் செட்டியார் இறந்துவிடுகிறார்.

.

No comments:

Post a Comment