Sunday, August 3, 2014

மூத்தவன் யார்?

1872ல் நடந்த வழக்கு:

(ஒரே மேடையில் இரண்டு மனைவிகளை ஜமின்தார் திருமணம் செய்கிறார். எந்த மனைவி மூத்த மனைவி? என்ற குழப்பம்)

திருநெல்வேலியில் உள்ள ஊர்க்காடு என்ற ஜமீனின் ஜமின்தார் கோளலிங்க சேதுராயர். இவருக்கு மொத்தம் மூன்று மனைவிகள்.

1.காந்திமதி அம்மாள் (இவருக்கு குழந்தை இல்லை).
2.ராமலஷ்மி அம்மாள் (இவருக்கு ஒரே மகன்- ராமலிங்க சதுராயர்).
3. வெள்ளைத்தாய் பெருமாளம்மாள் (இவருக்கும் ஒரே மகன் -சிவானந்த பெருமாள் சேதுராயர்).

கடைசி இரண்டு மனைவிகளையும் ஒரே நாளில் (ஜூன் 1836ல்) ஜமின்தார் திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் வேறு வேறு முகூர்த்த நேரங்கள்.

எந்த மனைவிக்கு முன்னுரிமை என்பதில் பிரச்சனையாகி வழக்கு லண்டனில் உள்ள பிரைவி கவுன்சில் வரை சென்றது. ஜமீன் வழக்கப்படி, மூத்த மனைவியின் மகனுக்கோ மொத்த ஜமீனும் சேர வேண்டும் என்பது வழக்கம். அதனால்தான் இந்தப் பிரச்சனை.

இந்தியாவில் உள்ள கோர்ட்டுகள், 'நேரத்தைக் கொண்டு, முன்னர் திருமணம் நடந்தவர் மூத்த மனைவி என்று சொல்லலாம்' என தீர்ப்புகள் வழங்கியுள்ளனஅந்தமாதிரி முடிவுக்கு வரமுடியாது எனச் சொல்லி இந்த பிரைவி கவுன்சில் மேல் அப்பீலைத் தொடர்ந்துள்ளனர்.

2-வது மனைவிக்கு திருமணம் நடக்கும்போது அவர் 10 வயதே நிரம்பிய சிறுமி. ஆனால் 3-வது மனைவிக்கோ அப்போது 16 வயது.
எனவே 3-வது மனைவியின் மகன்தான் மூத்தவன். அவனுக்கே ஜமீன் சொத்து செல்ல வேண்டும் என்பது வாதம்.

ஆனால் 2-வது மனைவியின் மகனோ, 'என் தாயாரைத்தான் முதலில் திருமணம் செய்துகொண்டார் ஜமின்தார்; எனவே என் தாய்தான் மூத்த மனைவி. அவரின் மகனான எனக்கே ஜமின்சொத்து சேரவேண்டும்' என்பது அவரின் வாதம்.

மேலும் ஒரு குழப்பமும் உள்ளது.
அதாவது, 2-வது மனைவியின் மகனோ பின்னர் பிறந்தவர். (இளையவர்). 3-வது மனைவியின் மகனோ முன்னரே பிறந்தவர் (மூத்தவர்).

இப்போதுள்ள குழப்பப்படி, மனைவி மூத்தவரா என்று பார்ப்பதா? இல்லை மகன்களில் யார் மூத்தவர் என்று பார்ப்பதா? (ஜமின் சொத்துக்களையும் ஜமீனையும் ஒரே ஒரு மகனுக்குத் தான் கொடுக்க முடியும் அதுதான் இந்தியாவில் உள்ள ஜமின் சட்டம். இதை Impartible Estate என்று சொல்வர். அதாவது பங்கு பிரிக்க முடியாத ஜமின்கள் என்று பெயர். (ராஜா என்றால் ஒரு நாட்டுக்கு ஒரேயொரு ராஜா தானே இருக்கமுடியும், அதுபோலவே).

இந்தியாவில் நடைமுறையில் உள்ள பழக்கம், மூத்த மனைவியின் மகனுக்கு பட்டம். ஆனால் இந்து சட்டம் மூத்தவனுக்கே பட்டம் என்று சொல்கிறதாம். (அப்போது இருந்துவந்த பழக்கவழக்கம் அப்படி).

பிரைவி கவுன்சில் நீதிபதிகள் (Lordships) கீழ்கண்ட தீர்ப்பை கூறுகிறார்கள்.
"ஒரு பகுதியில் காலங்காலமாக நடைமுறையில் இருக்கும் பழக்க வழக்கம் (Custom and Usage) மதிக்கப்பட வேண்டும். அங்கு பொதுவான சட்டம் முன்னே நிற்காது.

எனவே, மதராஸ் ஐகோர்ட்டில், 2-வது மனைவியின் மகன், தனக்கு உரிமை உண்டு என்பதை இந்த பழங்கால பழக்க வழகத்தைக் கொண்டு நிருபிக்கத் தவறிவிட்டார். (அதாவது மூத்த மனைவியின் மகன் தான் முடிசூடலாம் என்பதை; இளையவராக இருந்தபோதும்).

திருநெல்வேலி மாவட்ட கோர்ட்டில் உள்ள நீதிபதி, 'இங்குள்ள ஜமீன்களில், மூத்த மனைவியின் மகனே முடிசூடுவான்' என்று வழக்கம் உள்ளது எனக் கூறி தீர்ப்பு கொடுத்தார். ஆனால் அந்தத் தீர்ப்பு மதராஸ் மாகாண ஐகோர்ட்டில் தள்ளுபடியானது. அதை எதிர்த்துத்தான் லண்டன் வந்துள்ளார்.

1859ல் வேறு ஒரு ஜமின் விவகாரத்தில், ரெவின்யூ போர்டு ஜமின் சொத்தை நிர்வகித்து வந்தது. அது பரையூர் ஜமின் விவகாரம். அதில் இறந்த ஜமின்தாரின் இரண்டு மகன்களும் மைனர்கள். எனவே ரெவின்யூ போர்டு அதுவரை நிர்வாகம் செய்து வந்தது. அதை எந்த மகனுக்கு கொடுத்துவிட வேண்டும் என்ற பிரச்சனையும் வந்தது. அப்போது மாகாண அரசு, திருநெல்வேலி, மதுரை கலெக்டர்களிடம் அபிப்பிராயம் கேட்டது. அவர்கள் விசாரித்ததில், அந்தப் பகுதியில் உள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட ஜமின்தார்களையும், பொலிகாரிகளையும் (பாளையக்காரர்?) (Zemindars and Poligars) விசாரித்தார்கள். பல மனைவிகள் மூலம் மகன்கள் இருந்தால், யாருக்கு ஜமின் போகும் என்ற கேட்டு பதிலும் பெறப்பட்டுள்ளது. ஆனாலும் அதிலும் ஒவ்வொரு ஜமின்தாரும் வெவ்வேறான கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அவர்களும் ஒரே ஜாதியைச் சேர்ந்தவர்கள் கிடையாது. ஒவ்வொரு ஜாதி ஜமினுக்கும் ஒரு வழக்கம் இருக்கும்போல.

ஆனால், திருநெல்வேலியில் உள்ள இந்த ஜமின் பகுதியில் இவர்கள் ஜாதியில், இளைய பெண்டாட்டியின் மகன் மூத்தவனாக இருந்தால் அவனுக்குத்தான் பட்டம் என்ற வழக்கம் உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

எனவே முடிவாக, இரண்டு மகன்களும் அங்குள்ள பழக்க வழக்கத்தை அவர்களால் முடிவாகச் சொல்லவும் முடியவில்லை. நிரூபிக்கவும் முடியவில்லை. எனவே நாங்கள் பொதுவான இந்து சட்டத்தை எடுத்துக் கொள்கிறோம்.

ஏனென்றால், இதே போல, சிவகங்கை ஜமின் வழக்கும் 1863ல் இங்கு வந்தது. அதில் "ஜமின் என்பது ஒரு பிரிக்கமுடியாத அமைப்பு என்று கூறப்பட்டுள்ளது. (a Principality, impartible, and capable of enjoyment by only one member of a family at a time;)

எனவே இந்தியாவில் எந்த பழக்கவழக்கத்தை இதுவரை பின்பற்றி இருந்தாலும், அவைகளை விட்டுவிட்டு, 'இந்து' சட்டத்தை நடைமுறைப் படுத்தும் வகையில் இந்த தீர்ப்பை கூறுகிறோம். இதன்படி வயதில் மூத்த மகன் (இளைய பெண்டாட்டி மகனாக இருந்தபோதும்) ஜமீனைப் பெறுவான்.
Ramalakshmi Ammal vs Sivanantha Perumal Sathurayar, Ref: Madras (1872) UKPC 37 dated 20 April 1872

.

No comments:

Post a Comment