என் எதிரி:
எத்தனையோ
மனிதர்களை பிறக்கவைத்து, மனித வாழ்வின் உன்னதத்தையும், கேவலத்தையும் சந்திக்க
வைத்திருக்கிறான் இறைவன். இவன் உயிர்களின் ஆன்மா மூலம், தான் விரும்பியதைச் செய்து கொள்கிறான் போலும்!
அப்படியென்றால், ஆன்மா இவனின் ஏஜெண்ட் போல! வேறு ஒருவனுக்கு ஏஜெண்டாக இருந்து
கொண்டு, நமக்கு ஏதும் ஆதரவாக ஆன்மாவால் செய்யமுடியாது போல!
ஆக, நம்மில் வேறு
ஒருவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆன்மா வேறு ஒருவனின் சொத்து என்றால், நமக்கு
நம் உடலும், மனமும் மட்டுமே சொந்தமா? அவை இரண்டும்கூட, பலசமயங்களில், ஆன்மாவின்
கட்டளைப்படியே இருப்பதாகப் படுகிறது. ஆன்மா என்னும் எதிரியுடன் நாம் வாழ்ந்து
கொண்டிருக்கிறோமா? வேறு வழியில்லையா? ஆன்மாவின் தயவு இல்லாமல் நம்மால் இயங்க
முடியாதா? ஆன்மாவிடம் நாம் சரண்டைந்துவிட வேண்டுமா?
இயங்க முடியும் என்றால், நாம் நினைத்த
அனைத்தையும் நம்மால் ஏன் செய்ய முடியவில்லை? பெரும்பாலான மனிதர், தான் தோற்றபின்,
விதியை நோவதேன்? ஆக, நம் உடல், மனம்,
உயிர், ஆன்மா இவைகள் நம் கட்டுப்பாட்டில் இயங்கவில்லை என்றே சொல்ல வேண்டும். நாம்
இயக்காத ஒரு பொருள், வேறு யார் கட்டுப்பாட்டில் இயங்குகிறது? யாரோ ஒருவருக்காக
இயங்கும் இந்த இயக்கத்தை, நான் ஏன் வாழவேண்டும்? நான் ஏன் சந்தோஷப் பட்டுக் கொள்ள
வேண்டும்? நான் ஏன் துயரப் பட்டுக் கொள்ள வேண்டும்? எவனோ ஒருவனின் சந்தோஷம், துக்கம்
இது! அப்படித்தானே! எனவே என்னை அது ஒன்றும் செய்துவிட முடியாது! இல்லையே, அது
என்னைப் பாதிக்கிறதே! நான் செய்யாத செயல் என்னைப் பாதிக்கிறது என்று சொன்னால்
யாரும் நம்ப மாட்டார்கள். ஆம், ஆன்மா என்ற என் எதிரியின் செயல் என்னைப்
பாதிக்கத்தான் செய்கிறது.
இதற்கு ஒரே
வழி, என் எதிரியை அடக்கிவிடுவது ஒன்றே! முடியுமா? அவன் வழியில் போய்விட்டு, நான்
அடக்கி விட்டேன் என்று மார்தட்டிக் கொள்ளமுடியாது. உண்மையில் என் எதிரியை என்
கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். வேறு ஒருவனின் கட்டுப்பாட்டில் நடந்து வரும்
என் எதிரி, என் வழிக்கு எப்படி வருவான்? இல்லையில்லை, அவன் என் உடலில்
வசிக்கிறான். என் உயிரில் மூச்சை விடுகிறான். என் மனதில் சிந்திக்கிறான். என்னிடமே
வசிப்பவனை நான் கட்டுப்படுத்த முடியாதா? ஏன் முடியாது. என் மனம், உடல், உயிரைக்
கட்டுப்படுத்தினால், என் எதிரி அடங்கத்தானே வேண்டும். எப்படியும் ஜெயித்து
விடுகிறேன். அவனா? நானா? பார்த்துவிடலாம்!
.
No comments:
Post a Comment