Thursday, August 14, 2014

நினைவுகள்-28

 எரியும்கட்சி, எரியாக் கட்சி:
இந்த பிரபஞ்சம் எதனால் கட்டப்பட்டுள்ளது? மிக நுண்ணிய அணுக்களால் (Atoms) கட்டப்பட்டுள்ளது என்று ஒருகாலக் கட்டம் வரை நினைத்திருந்தனர். அணுக்கள்தான் அடிப்படை மூலப் பொருள் என்று நினைத்தனர். அதுக்கும்கீழே, ஒருபொருள் இல்லை என்றே நினைத்தனர்.
பின்னர், அணுவையும் உடைக்க முடியும் என்று விஞ்ஞானம் வளர்ந்தது. ஒவ்வொரு பொருளும் அணுக்களால் ஆனது, அந்த ஒவ்வொரு அணுவும் மூன்று மூலப் பொருள்களால் ஆனது என்றும் கண்டுகொண்டனர். அந்த மூன்று மூலப் பொருள்களே, 1. புரோட்டான் (Proton), 2. நியூட்ரான் (Neutron), 3. எலெக்ட்ரான் (Electron). இதில் புரோட்டானும், நியூட்ரானும் சேர்ந்த ஒரு கலவையைத்தான்  'நியூக்கிளியஸ்' (Nucleus)என்கிறோம்.
இதுக்குக்கீழே வேறு மூலப் பொருள் இல்லை என்றே நினைத்திருந்தோம். அதாவது கடவுள் படைத்தது இந்த மூன்று மூலப் பொருளைத்தான் என்று நினைத்திருந்தோம்.
இந்த மூன்று மூலப் பொருள்களில் உள்ள ஆச்சரியமிக்க ஒருவித விநோதம் என்னவென்றால், இந்த உலகத்திலுள்ள எல்லாப் பொருள்களுமே இந்த மூன்று மூலப் பொருள்களில்தான் அடங்கி உள்ளது என்றாலும், இதன் ஒவ்வொரு பொருளும் எந்த விகிதத்தில் ஒன்று சேர்ந்து உள்ளதோ, அப்போது அது வேறு பொருளைப் போலத் தெரிகிறது. அதாவது, ஒரு புரோட்டானும், ஒரு நியூட்டிரனும் இருந்தால் அது ஹைட்ரஜன் (Hydrogen);  இரண்டு புரோட்டான்களும், இரண்டு எலெக்ட்ரான்களும் சேர்ந்து இருந்தால் அது ஹீலியம் (Helium). 6 இருந்தால் கார்பன், 8 இருந்தால் ஆக்ஜிஸன் (Oxygen);  26இருந்தால் இரும்பு; 47 இருந்தால் வெள்ளி; 79 இருந்தால் தங்கம். இப்படியாக  ஒன்று முதல் 118 வரை பொருள்கள் உண்டு. புரோட்டானின்  எண்ணிக்கையின்  வரிசைப்படி கூடிக் கொண்டே 118 வரை செல்கிறது. அப்படிப் பார்த்தால், மூன்றின் மூலப் பொருள்கள் மாறி மாறி சேர்ந்து வேறு வேறு குணமுள்ள பொருளாக (தங்கமாகவும், தகரமாகவும், சதையாகவும், பேப்பராகவும், இரும்பாகவும், நீராகவும், இப்படியாக) பலவேறு பொருள்களாக ஆகி உள்ளது. இந்தக் கண்ணோட்டதில் பார்த்தால், இந்த பிரபஞ்சம் முழுவதும் இந்த அடிப்படையான மூன்று மூலப் பொருள்களால் மட்டுமே ஆக்கப் பட்டுள்ளது. இந்த மூன்றும் இல்லாமல் இந்தப் பிரபஞ்சம் இல்லை.
ஆரம்பகாலத்தில், இங்கு நம் மூதாதையர்கள் கூட, இந்தப் பிரபஞ்சம் எதிலிருந்து உருவானது என்று தத்துவ-விவாதங்கள் நடத்திவந்தனர். அவர்களில் ஒரு கட்சியை 'எரியும் கட்சி' என்றும் மற்ற கட்சியை 'எரியாக் கட்சி' என்றும் குறிப்பிடுவர். இவர்களின் வாதப்படி, இந்தப் பிரபஞ்சமானது ஒரே ஒரு மூலப் பொருளில் இருந்துதான் உருவானது என்பது ஒருசாரரின் தத்துவ விளக்கம். மற்றவர்களோ, 'ஒரு மூலப் பொருளில் இருந்து ஏதும் உருவாகவே முடியாது, இரண்டு மூலப் பொருள்கள் இருந்திருக்க வேண்டும், இரண்டும் சேர்ந்தால்தான் வேறு ஒரு பொருளை உருவாக்கவே முடியும் என்றும், ஒரே மூலப் பொருள் இன்னொன்றை உருவாக்கவே முடியாது' என்றும் வாதம்.
இந்த தத்துவ-வாதங்கள் எல்லாம் Theoretical வாதங்களே. எனவே வாதங்களாகவே தொடர்ந்தன.
இப்போது, இதையும் தாண்டி, மேற்சொன்ன மூன்று மூலப் பொருள்களும், அடிப்படை மூலப் பொருள்கள் இல்லை. அவைகள் எல்லாம் வேறு வேறு மூலப் பொருள்களால் ஆனவை என்று ஒரு பெரிய ஆச்சரியத்தை விஞ்ஞானிகள் உண்டாக்கி உள்ளனர். இதுவரை இருந்துவந்த தத்துவ-விளக்கங்கள் மாறிவிட்டன.

.

No comments:

Post a Comment