Saturday, August 9, 2014

நினைவுகள்-26

அசைபோடும் ஆடு.
நினைவின் நினைவு
வாழ்வின் வேகம் பிடிபடவில்லை. இவ்வளவு சீக்கீரமே ஓடிவிட்டது. நிதானமாக வாழ்ந்தோமா? தெரியவில்லை. நிதானத்துக்கு இங்கு வேலையுமில்லை. 
தாய்மடி வாழ்க்கை, தவழ்ந்தது நினைவிலில்லை! சிறுபிள்ளைப் பருவமோ ஒன்றிரண்டு தூறல்கள் ஞாபகம்! அவ்வளவே! அடுத்த வயதுகள் ஏக்கத்துடனும், ஏமாற்றத்துடனும்! 
தொடு கோட்டை நெருங்கி விட்ட உணர்வு. ஆசைப்பட்டதை இனி வாழ வழியில்லை, முடியாது! அந்தி நேரத்தில், காலைச் சூரியன் எங்கே வருவான்? அடுத்த பிறவியில், நின்று நிதானமாக இவை எல்லாவற்றையும் அனுபவித்தே பார்த்துவிட வேண்டும்! 
முதலிலேயே உஷாராக இருந்துவிட வேண்டும்! இப்போது ஏமாந்ததைப் போல இருக்கக் கூடாது! இங்கு இவ்வளவு இருக்குமென்று, பிறக்குமுன்பே, படைத்தவன் தெளிவாக கூறியிருந்தால், உஷாராக இருந்திருக்கலாம்! எல்லாவற்றையுமே நீயே நீந்தித் கற்றுக் கொள் என்று விட்டுவிட்டான் பாவி! 
அவனின் மோசடி தெரியாமல் இங்கு வந்துவிட்டேன். அவனோ "உனக்குப் பிழைக்கத் தெரியவில்லை; வாழைப்பழத்தை உரித்து வாயிலே ஊட்டு என்கிறாயே" எனத் திட்டுகிறான். அடுத்த பிறவியில் நிச்சயம் ஏமாற மாட்டேன். இதை முடித்து போகும் கடைசி நொடியில் இந்த அனுபவத்தை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்! 
இல்லையாமே, அவன், நம்மை மயக்க நிலையில்தான் கூட்டிக் கொண்டு போவானாம்! அப்புறம் எப்படி நினைவில் வைத்துக் கொள்வது? இதிலும் அவனின் தில்லுமுல்லுகள்!
போதும், மிச்சமிருக்கும் நாட்களை நம் சுயஅறிவில் வாழ்ந்துவிட்டுப் போவேம், போதும் மனித வாழ்க்கை!

.

No comments:

Post a Comment