The Art of Presentation
காப்பி போட எல்லோருக்கும் தெரியும். ஆனால் நல்ல மணமுள்ள காப்பி
போட ஒரு சிலருக்கு மட்டுமே கைவந்த கலை; காப்பித்தூள்
ஒன்றுதான்; அதை எப்படிப் போடவேண்டும் என்பதில்தான் மணமும் சுவையும்; காப்பி டபராவை
வெந்நீரில் போட்டு எடுத்து, அதை ஒரு உலர்ந்த துணியால் துடைத்துச் சுத்தமாக்கி, அதில்
கலந்த காப்பியை ஊற்றினால் அதன் சுவையும் மணமும் தனியே!
விஷயத்தை யார் வேண்டுமானாலும் பேசலாம்; ஆனால் அதை எப்படிப்
பேசுவது என்பதில்தான் விஷயமே இருக்கிறது; என் குமாஸ்தாவுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது;
ஒரு வேலையைச் செய்து வரச் சொன்னால், போய் வந்து, முதலில் இருந்து விஷயத்தை ஆரம்பிப்பார்;
அதாவது, அவர் போனதாகவும், அவர்கள் முடியாது என்று சொல்லி விட்டதாகவும், பின்னர் இவர்
வேறு ஒருவரைப் பார்த்த்தாகவும், அவரும் முடியாது என்று சொல்லி விட்டதாகவும், பின்னர்
அவர் மூன்றாம் நபரைப் பார்த்ததாகவும்……. “விஷயம் என்ன ஆச்சு? முடிந்ததா இல்லையா?” என்று நாம்
அழுத்திக் கேட்டபின்னர், கஷ்டப்பட்டு முடிந்ததாகச் சொல்வார்;
அவரிடம் “நீங்கள் ஏன் இப்படி சுத்தி குழப்பி அடித்துப் பதிலைச்
சொல்கிறீர்கள்?” என்று கேட்டால், நடந்ததை உங்களுக்குச் சொல்ல வேண்டும் அல்லவா அதனால்
சொல்கிறேன் என்பார்; அது இல்லை; அவர் கஷ்டபட்டது நமக்குத் தெரிய வேண்டும் என்று நினைக்கிறார்;
“வேலை முடிந்து விட்டது” என்று மட்டும் சொன்னால், ஒரு சொடுக்கு நேரத்தில் முடிந்து
விட்டது என மற்றவர் நினைத்து விடக்கூடும்; நாம் கஷ்டப்பட்டது மற்றவர்க்கு தெரியாமலேயே
போய் விடும்; மற்றும் அந்த வேலை அவ்வளவு கஷ்டமானது; நானாக இல்லை என்றால் முடிந்திருக்காது;
என அடுத்தவர் நினைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இப்படி சொல்லிக் கொள்வர்;
சீதையைத் தேடித் திரிந்த ராமன், அனுமனை இலங்கைக்கு அனுப்பி
வைக்கிறார்; எவ்வளவோ சிரமங்களுக்கு இடையில், அனுமன் சீதையைச் சந்திக்கிறார்; அதை இராமனிடம்
தெரிவிக்க வருகிறார்; அனுமன், ராமனிடம் வந்தவுடன், இராமனின் மனம் எப்படி பதட்டப்படும்
என்று அனுமனுக்குத் தெரியும். என் குமாஸ்தாவாக அனுமன் இருந்திருந்தால், இராமனுக்கு
நெஞ்சுவலி வந்து இதயத் துடிப்பே நின்று போயிருக்கும்; அனுமனோ அவன் வந்தவுடனேயே, “கண்டேன்
சீதையை” என்று “கண்டேன்” என்ற முதல் வார்த்தையைக் கூறி இராமனை பதற்றத்திலிருந்து தேற்றினான்
என கவிச்சக்கரவர்த்தி கம்பர் எழுதி உள்ளார்; இந்தக் கதையை என் குமாஸ்தாவுக்கு எத்தனையோ
முறை, கதை கதையாகச் சொல்லி இருந்தாலும், அவர் இன்னும் முதலில் இருந்து, “இராமேஸ்வரம்
போனேனா… இங்கு ஒரு பெரிய கடல்…. என்றுதான் இன்னும் ஆரம்பிக்கிறார்;
இந்த Presentation கலை எல்லோருக்கும் தேவைப்பட்டாலும், வக்கீல்களுக்கு
மிக முக்கியமாக தேவைப்படும் கலை; பொதுவாக சிவில் வழக்கு என்றாலே சவ்வு மிட்டாய்தான்;
சிவில் வழக்கை வேடிக்கை பார்க்க கோர்ட்டுக்கு வருபவர்கள்கூட, வெகு சீக்கிரம் தூங்கி
விடுவார்கள்;
ஒரு வக்கீல், அவரின் வழக்கை எவ்வளவு குறைந்த நேரத்தில் எவ்வளவு
எளிதாக எடுத்துச் சொல்கிறாரோ அதில்தான் அவரின் திறமை வெளிப்படும்; Presentation என்பதே
ஒருமணி நேரம் பேச வேண்டிய விஷயத்தை, ஐந்து நிமிடங்களுக்குள் சொல்ல வேண்டும்; ஒரு ஐந்து
நிமிடம்தான் பேசுக்கூடிய விஷயத்தை ஒரு மணி நேரம் பேச வேண்டும்; ஜவ்வு மிட்டாய் மாதிரி;
இந்த கலையை எலாஸ்டிசிட்டி Elasticity என்கிறார்கள்; ஒரு ரப்பர் பேண்ட் அளவுக்கு சுருக்கமாக
இருக்க வேண்டும்; இழுக்க வேண்டும் என்றால் எவ்வளவு நீளம் வேண்டுமானாலும் இழுக்க வேண்டும்;
எவ்வளவு இழுத்தாலும் விஷயம் உள்ளதாகவும் இருக்க வேண்டும்;
மேடைப் பேச்சு வேறு ரகம்; அங்கு வார்த்தை அலங்காரம் வேண்டும்;
தொனியில் ஏற்ற இறக்கம் வேண்டும்; அங்கு கூடி இருக்கும் மக்களின் மனோபாவம் வெளிப்பட வேண்டும்;
உணர்வு பூர்வமானதாக இருக்க வேண்டுமே தவிர, கருத்து தேவையில்லை;
Presentation என்பதே ஒரு கலை; அதை எல்லோருமே வளர்த்துக் கொள்ள
வேண்டும்; “என்ன பிரச்சனை?” என்று ஒருவர் கேட்டால், அவர் கேட்கும் இடம், பொருள், ஏவல்
தெரிந்து, மிகச் சுருக்கமாகவும், ஒரளவு சுருக்கமாகவும், விரிவாகவும், தெளிவாகவும்,
இப்படிப் பல பல முறைகளில் தெரிவிக்க வேண்டி இருக்கும்; விஷயம் ஒன்றுதான்; ஆனால் சூழ்நிலைகளுக்கு
ஏற்ப அதை எடுத்துச் சொல்லும் கலை; இதை கற்றுக் கொள்வது மிக எளிதானதே! எல்லோருடைய தொழிலுக்கும்
இது தேவைதான்; இதைத் திறம்பட செய்தவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்; வக்கீல்களுக்கு
இதுவே அடிப்படை தேவை, அவ்வளவே;
**
No comments:
Post a Comment