கந்தரலங்காரம்-17
வேத ஆகம சித்ர வேலாயுதன் வெட்சி பூத்தண்டைப்
பாதார விந்தம் அரணாக அல்லும் பகலும் இல்லாச்
சூதானது அற்ற வெளிக்கே ஒளித்துச் சும்மா இருக்கப்
போதாய் இனி மனமே தெரியாதொரு பூதர்க்குமே!
(வேதமும் ஆகமமும் போல, (சித்திர = அற்புத) அற்புதமான வேலாயுதத்தை உடைய முருகக்
கடவுளது, வெட்சிப் பூவை ஒத்த, தண்டை அணிந்த பாதங்களை அரண் என்னும் காப்பாக, இரவும்
பகலும் இல்லாததும், (சூதானது அற்ற= மயக்கம் இல்லாதாகிய) மயக்கமில்லாதும் ஆகிய வெளி
என்னும் சிதாகாயத்திலே கலந்து சுகமாக வாழ்வதற்கு இனி என் மனமே போகவாயாக! ஒரு
சீவனுக்கு அறியாமலேயே! (மனமே! இனி எந்த வினைகளையும் செய்யாமல், ஞான யோகத்துக்கு
செல்வாயாக!)
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-17)
**
No comments:
Post a Comment