Sunday, December 18, 2016

இதோபதேசம்—8

இதோபதேசம்—8
பெண்களை ஆண்களுக்கு இணையாக இந்த உலகம் ஒருகாலமும் ஏற்றுக் கொண்டதில்லை; இப்போதுதான் ஒரளவு இதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது; அதுவும் பெண்களே அந்த இடத்தை எடுத்து நிரப்பிக் கொண்டு வருகிறன்றனர்; இதுவரை ஆண்கள் அந்த இடத்தை விட்டுக் கொடுக்காமல் இருந்தனர்; இப்போது வேறு வழியில்லை;
அமெரிக்க சுப்ரீம்கோர்ட் பெண் நீதிபதிகளில் Justice Ruth Bader Ginsburg  நீதிபதி ரத் பேடர் கின்ஸ்பர்க் என்ற பெண்மணியும் ஒருவர்; இவர் ஒரு புத்தகம் எழுதி உள்ளார்; “My Own Words” “என்னுடைய சொந்த வார்த்தைகளில்” என்று அதற்கு பொருள் கொள்ளலாம்; அதில் அவர் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்; அதில் சில,
“1957ல் அமெரிக்க புளோரிடா மாநிலத்தில்ஒரு கணவன் மனைவி இருக்கிறார்கள்; அவளின் கணவன், அந்த மனைவியை கொடுமைப் படுத்திக் கொண்டே இருப்பானாம்; இவளால் பொறுக்க முடியவில்லை; ஒருநாள், பேஸ்பால் மட்டையைக் கொண்டு அவனை அடித்தே கொன்று விட்டாள்; அவள்மீது கொலை வழக்கு சுமத்தப்படுகிறது; அவளுக்கு ஒரு வருத்தம்; “இந்த வழக்கை என் மனநிலையில் இருந்து விசாரிக்க வேண்டும்; நான் ஏன் என் கணவனைக் கொன்றேன் என்றும், என் செயலில் நியாயம் உள்ளது என்றும், அப்போதுதான் தெரியவரும்” என்று கேட்கிறாள்;
அமெரிக்க கோர்ட் விசாரனை முறையில், ஜூரி என்னும் பொதுவானவர்கள் இருந்து அந்த வழக்கை கேட்பர்; அவர்களே இது கொலையா இல்லையா என்று முடிவுக்கு வருவர்; அதன்பின் நீதிபதி தண்டனையை அறிவிப்பார்; விசாரனை முழுவதும் நீதிபதி முன்னர்தான் நடைபெறும்; ஆனால் ஜூரிகள் முன்னால் வழக்கு விசாரனையை வக்கீல்கள் நடத்துவர்;
இந்த பெண்மணியின் வழக்கில், ஒரு பெண் ஜூரி கூட இல்லையாம்; அவள் கேட்கிறாள், “என் வழக்கில், பெண் ஜூரிகளும் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்” என்று கேட்கிறாள்; ஆனால் அங்குள்ள புளோரிடா மாநில சட்டத்தில் பெண்கள் ஜூரிகளாக இருக்க அனுமதி இல்லையாம்; எனவே அவளது கோரிக்கை மறுக்கப்படுகிறது; ஆண்களே ஜூரிகளாக இருந்து விசாரித்து, அவள் கொலைகாரிதான் என்று தீர்ப்பு சொல்கிறார்கள்;  
வழக்கை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு எடுத்துச் செல்கிறாள்; அங்கும் அதே வாதம்தான்; “நான் பெண்; என் மனநிலையை, பெண் ஜூரிகளால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்; ஆண் ஜூரிகள் இந்த வழக்கை விசாரித்தது சரியில்லை; மாநில சட்டத்தில் பெண் ஜூரிகளை நியமிக்க முடியாது என்ற சட்டம், அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது; சட்டத்தில் ஆண் பெண் என்ற பேதம் இருக்கக் கூடாது என்றே அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது” என்று வாதாடுகிறார் அவளின் வக்கீல்;
ஆனாலும், சுப்ரீம் கோர்ட் அந்த வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை; அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் அப்போது நீதிபதிகளாக இருந்தவர்கள் எல்லோருமே ஆண்கள்;”
மற்றொரு வழக்கான ரீட் எதிர் ரீட் வழக்கு Reed vs Reed. அமெரிக்காவின் இடாகோ மாநிலம்; இதில் ஒரு தம்பதியருக்கு ஒரு பையன் இருக்கிறான்; அவன் சிறு வயதாக இருக்கும்போது, அவனின் பெற்றோர் இருவரும் பிரிந்து விட்டனர்; அவன் தந்தையுடன் வாழ்ந்து வருகிறான்; தாய் பிரிந்து சென்று விட்டாள்; அந்தச் சிறுவனுக்கு என்ன மன உளைச்சலோ தெரியவில்லை, தற்கொலை செய்து கொண்டு இறந்து விடுகிறான்; தந்தையின் வீட்டில் இது நடக்கிறது: காரியங்கள் எல்லாம் முடிந்த பின்னர், அந்த சிறுவனின் ஒரு சில பொருள்களை யார் வைத்துக் கொள்வது என்ற பிரச்சனை தாய்,தந்தைக்கு ஏற்படுகிறது; தாய் கேட்கிறாள், “என் மகனின் நினைவாக அவனின் பொருள்கள் எனக்கு வேண்டும்” என்கிறாள்; தந்தை கேட்கிறார், “இந்த இடாகோ மாநில சட்டப்படி, இறந்த மகனின் சொத்து, தகப்பனுக்குத்தான் சேரும் தாய்க்குச் சேராது என்று உள்ளது” என்று வாதம் செய்கிறார்;
வழக்கு அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்கிறது; 1971-ல் தீர்ப்பு; “ஆம், ஆண் பெண் வித்தியாசம் பார்க்கும் சட்டம் இது; எனவே இது அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானதுதான்; எனவே அந்த மாநிலச் சட்டம் செல்லாது; இறந்த சிறுவனின் உடமைகளை அவனின் தாயிடம் அவனின் நினைவாக ஒப்படைக்கவும்” எனத் தீர்ப்பு வருகிறது;
இந்த வழக்கில் இப்படி ஒரு தீர்ப்பு வந்தபின்னரே, அதற்கு பின் வந்த வழக்குகளில் பெண்களின் உரிமைகள் பற்றிய தீர்ப்புகள் அதிகமாக வரத் தொடங்கின” என்று அந்த பெண் நீதிபதி தன் நினைவுகளைப் பகிர்கிறார்;
1950ல் இந்த பெண் நீதிபதி தனது பட்டப்படிப்பை முடித்து டிகிரி வாங்குவதற்கு முதல் நாளில் அவரின் தாயார் இறந்து விடுகிறார்; தன் தாயார் துணிக்கடையில் வேலை செய்து தன்னைப் படிக்க வைத்ததாகவும் கூறுகிறார்: பின்னர் ஒருநாளில், 1993ல் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதி ஆகி, ஏற்புரை நிகழ்த்தும்போது, இதை நினைவு கூர்கிறார்: “The bravest and strongest person I have known, who was taken from me much too soon. I pray that I may be all that she would have been had she lived in an age when women could aspire and achieve and daughters are cherished as much as sons.”
**


No comments:

Post a Comment