Wednesday, May 4, 2016

ஒருபால் திருமணம்

ஒருபால் திருமணம்

ஒருபால் திருமணங்கள் இப்போது அதிகமாகி விட்டன. ஆணும் ஆணும் திருமணம் செய்து வாழ்வது; பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்து வாழ்வது. இது முகம் சுளிக்க வைத்தாலும், உலகில் பல நாடுகள் இதை ஏற்றுக் கொண்டு விட்டன.

இறைவன், இந்தப் பூவுலகில், ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இன்பம் துய்த்து வாழவே, ஆணாகவும் பெண்ணாகவும் இரு பாலாக படைத்திருக்கிறான் என்று இதுவரை இருந்து வந்த உலகியல் உண்மையே பொய்யாகிப் போனது. அமெரிக்க சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கை விசாரிக்கும் போது, ஒருபால் உறவுகள் தவறில்லை என்றும், ஒரே பாலைச் சேர்ந்த, அதாவது ஆணும் ஆணும் உறவு கொள்ள விரும்புகிறார்கள் என்பது விஞ்ஞானபூர்வ “உடலின் செல்” மாற்றமே தவிர, இதில் முகம் சுளிக்க ஒன்றும் இல்லை என்று கூறிவிட்டது. ஒரு ஆண், ஒரு பெண்ணை விரும்ப மாட்டார், ஆனால் மற்றொரு ஆணையே விரும்புவார். இது அவரிடம் ஏற்பட்ட மரபணு மாற்றத்தின் நிகழ்வு. இப்போது இப்படிப்பட்ட மாறுதல்கள் உலகில் அதிகமாக ஏற்பட்டு வருவது, ஆச்சரியமாகவும், மூக்கில் விரலை வைக்கும்படியும் செய்து விட்டது. வேறு வழியில்லாமல் பல நாடுகள் இத்தகைய உறவுகளை சட்டபூர்வமாக ஏற்றுக் கொண்டு விட்டது.

இதுவரை உலகில் உள்ள 12 நாடுகள் இத்தகைய ஒருபால் உறவுகளை சட்டமாக்கி விட்டது. அதில், கனடா, தென்அமெரிக்கா, ஸ்பெயின், போர்ச்சுக்கல் போன்ற நாடுகள் முக்கியமானவை. இப்போது பிரான்ஸ் நாடும் இத்தகைய உறவை சட்டபூர்வமாக்கி விட்டது.

இந்த பிரான்சில் புது சட்டப்படி, “யார்” வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம். ஆண் பெண் என்ற வேறுபாடு தேவையில்லை என்று அந்த திருமணச் சட்டம் சலுகை அளிக்கிறது. The new law allows marriage for all, regardless of sexual orientation. இதனால் என்ன நன்மை? அவர்கள் சேர்ந்து வாழலாம். ஒருவர் இறந்து விட்டால்,  அவர் வேலை செய்த நிறுவனத்தில் கொடுக்கும் தொகைகளை “துணைவர்” பெற்றுக் கொள்ளலாம். திருமணம் செய்து கொண்டால்தான், இந்த தொகையைப் பெற உரிமை கிடைக்கும் என்பதால் திருமணம் செய்து கொள்கிறார்கள். இது இல்லாமல், வேறு ஒருவரின் குழந்தையை “தத்து-Adoption” எடுத்துக் கொள்ளலாம். இதற்கு முன்னர், திருமணம் செய்து கொள்ளாதவர்கள், Adoption என்னும் குழந்தை-தத்து எடுக்க முடியாது. இப்போது ஒருபால் திருமணம் சட்டபூர்வமாக்கப்பட்டு விட்டதால், இது சாத்தியம் ஆகிறதாம்.

உலகம் எங்கு செல்கிறது என்றுதான் தெரியவில்லை. ஒரே பாலைச் சேர்ந்தவர்களுக்குள் வைத்துக்கொள்ளும் உறவுகள் குரோமசோம் மாறுதலால் ஏற்படுகிறது என்று விஞ்ஞானம் சொன்னால், அந்த குரோமசோம்களை மாற்றி, எதிர் எதிர் பாலைச் சேர்ந்தவர்களை ஈர்க்கச் செய்ய வழி வகை செய்ய வேண்டும்.

சட்டம் என்ன சொன்னாலும், சமுதாயம் இதை ஏற்பது கடினம்தான். கடவுளின், பிறப்பின் ரகசியத்தையே இது மாற்றிவிடுமோ என்ற அச்சமும் உள்ளது. ஒருவேளை கடவுளும் இத்தகைய சமுதாய குழப்பத்தை விரும்புகிறாரா என்றும் தெரியவில்லை! எல்லாம் வல்ல இறைவனுக்கே வெளிச்சம்.

**

No comments:

Post a Comment