Saturday, May 14, 2016

வெள்ளைக் கப்பல்


வெள்ளைக் கப்பல்
1120-ம் வருடம். கிட்டத்தட்ட 890 வருடங்களுக்கு முன்னர் நடந்த வெள்ளைக் கப்பல் விபத்து. இங்கிலீஷ் கால்வாயில் நடந்தது. மன்னரின் ஒரே மகனும், அரச வாரிசுமான இளவரசர் இந்த விபத்தில் இருந்து விடுகிறார். அப்போது ஹென்றி-1 மன்னர் ஆட்சி செய்கிறார். வில்லியம் என்னும் தன் ஒரே மகனே வாரிசாக அரசனாக வருவார் என்று பலத்த நம்பிக்கையுடன் இருக்கிறார். வில்லியம் சிறுவனாக, 17 வயதாக இருக்கும்போதே, தன் தந்தைக்கு துணையாக பிரான்ஸ் மன்னருடன் போரிட்டவர். அந்த போரில், பிரான்ஸ் மன்னர் லூயிஸ்-4 தோற்று விட்டார்.
வெற்றிக் களிப்புடன் இங்கிலாந்துக்கு கப்பலில் திரும்பி வருகிறார். அந்தக் கப்பலுக்கு பெயரே “வெள்ளைக் கப்பல்” The White Ship. ஆனால் விதி வேறு விதமாக இருக்கிறது. ஹென்றி மன்னர் அந்தக் கப்பலில் வருவதாக ஏற்பாடு. ஆனால், அவரோ, இதில் தன் மகன் வில்லியம் பயணம் செய்யட்டும் என்று கூறி, அவரின் பிரயாணத்தை மாற்றிக் கொள்கிறார். இளவரசர் வில்லியம்முடன் சுமார் 300 பேர் பிரயாணம் செய்கிறார்கள். அதில், 140 போர் வீரர்களும், 18 அரச குடும்ப பெண்களும் அடங்குவர். அதில், இளவரசரின் பாதி-சகோதரர் ரிச்சர்டு, பாதி-சகோதரி மடில்டா (பாதி என்பது, தன் தகப்பனாரின் மற்றொரு மனைவியின் மகன்) மற்ற குடும்ப உறுப்பினர்களும் அடங்குவர். போரில் வெற்றி பெற்று வருவதால், பீப்பாய் பீப்பாயாக ஒயின் மது கொண்டு வருகின்றனர். ஒரே கொண்டாட்டம். மது போதை அதிகமாகி விட்டது. ஒருவரை ஒருவர் கத்திக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். உச்சக் கட்டத்தில் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்கிறார்கள். மதகுருமார்களும் வருகிறார்கள். அவர்களை வெளியேறும்படி கட்டாயப் படுத்துகிறார்கள். ஒரு சிலருக்கு பேதி ஆகி படுக்கையில் இருக்கிறார்கள். அவர்களையும் வெளியேறும்படி அடாவடி செய்கிறார்கள்.
கப்பல் புறப்படுவதற்கு முன்னரே இத்தனை களேபரம். கப்பல் புறப்பட்டு கடலுக்குள் செல்கிறது. போதையில் இருந்த வீரர்கள், இளவரசர் இருக்கும் இடத்தைவிட்டு தூரத்தில் போதையில் மிதக்கிறார்கள். மற்ற கப்பல்கள், இளவரசர் பயணம் செய்யும் கப்பலுக்கு முன்னே செல்கிறது. இளவரசருக்கோ ஒரே குறுகுறுப்பு. நான் மட்டும் முன்னதாக இங்கிலாந்துக்கு போய் விடவேண்டும் என நினக்கிறார். இவரின் கப்பல் கேப்டனிடன், “கப்பலை வேகமாக விடு; நாம் எல்லாக் கப்பல்களையும் முந்தி சென்றுவிட வேண்டும்” என்று கட்டளை இடுகிறார். இளவரசர் கப்பல் மிதக்காமல் பறக்கிறது. கப்பலை ஓட்டுபவரும் போதையில் மிதக்கிறார், பறக்கிறார். வெள்ளைக் கப்பலும் போதையில் மிதந்து பறக்கிறது. நடுவில் பாறைகள் இருக்கும் என்பதால், பார்த்துத்தான் கப்பலை ஓட்ட வேண்டும்.
போதை, பாறையை மறைத்ததால், கப்பலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இளவரசரின் பாதி-சகோதரி எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் யாரும் கேட்பதாக இல்லை. கப்பலை திருப்பி விடச் சொல்கிறார் இளவரசர். அந்தோ! விதி விளையாடி விட்டது! ஒன்றும் செய்ய முடியவில்லை. கப்பல் பாறையில் மோதிக் கவிழ்ந்தது. எல்லோரும் கடலுக்குள் மூழ்கி விட்டார்கள். ஒரே ஒருவரை மட்டும், இந்த தகவலைச் சொல்தற்காக, கடவுள் உயிருடன் விட்டுவிட்டார். அவர், ஒரு சமையல்காரர். இறந்தவர்களின் உடல்கள் கரை ஒதுங்க, ஒருமாதம் ஆகிவிட்டது.
மன்னர் ஹென்றிக்கு இந்த தகவல் தெரியவருகிறது. இந்த சேதியைக் கேட்டு கலங்கி விட்டார் மன்னர். அன்றுமுதல், அவரின் வாழ்நாள் வரை, அவரின் முகம் சிரிப்பை மறந்தது. ஒரே மகன், தனக்குப் பின், அரச வாரிசு என்று கருதிய மகன், கடலில் பிணமாகக் கிடக்கிறான்.
ஆண் வாரிசு போய் விட்டது. ஹென்றி மன்னருக்கு ஒரே ஒரு மகள் மட்டுமே உயிருடன் இருக்கிறார். அவர் வேறு கப்பலில் வந்தவர். மகள் பெயர் மடில்டா Matilda. நாட்டின் முக்கிய பிரமுகர்களின் சம்மதத்தைப் பெற்று, வழக்கத்துக்கு மாறாக, தன் மகளை அரச பதவிக்கு வாரிசாக நியமிக்கிறார். ஹென்றி மன்னர் இறப்புக்குப் பின், தன் மகள் மடில்டா, இங்கிலாந்து நாட்டின் ராணியாக வரவேண்டும் என்று சட்டம் ஏற்படுத்தி வைக்கிறார். ஒரு பெண்ணை, இங்கிலாந்தின் ராணியாக ஏற்க, நாட்டில் பலத்த எதிர்ப்பும் இருக்கிறது. ஹென்றி மன்னர் இறக்கிறார். இந்த சூழ்நிலையை சரியாகப் பயன்படுத்தி, இறந்த ஹென்றி மன்னரின் சகோதரனின் மகன் ஸ்டீபன் புளாஸ் அரச பதவிக்கு வந்து விடுகிறார். இதிலிருந்து நாட்டில் உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டு விட்டது.
இங்கிலாந்தில் ஆண் வாரிசுகள் வரக்கூடாது என்று ஏதாவது கடவுளின் கட்டளை (விதி) இருக்குமோ?

**

No comments:

Post a Comment