Sunday, March 2, 2014

பிரம்மா:

பிரம்மா:

சிருஷ்டி கிருத்தியத்தை நடத்தும் அதிகாரமூர்த்தி. இவர் விஷ்ணுவினது நாபிக் கமலத்தில் உதித்தவர். இவர் சக்தி சரஸ்வதி தேவி. இவருக்கு வாகனம் அன்னம். இவர்தான் சர்வ லோகங்களையும் சிருஷ்டிக்கு மாற்ற அதிகாரம் உள்ளவர் என கர்வித்து சிவனை மதியாதிருந்து சிவன் கோபாக்கினியில் தோன்றிய வைரவக் கடவுளாலே ஒரு தலை கொய்யப்பட்டு, நான்கு முகங்களை உடையவர் ஆனதால், நான்முகன், சதுர்முகன் என்னும் பெயரெடுத்தார். இவர் சிருஷ்டி முறை அறியாது மயங்கிச் சிவனை வழிபட்டு அவரைத் தமக்கு புத்திரராகப் பெற்றார் என்று சில புராணம் கூறும். இவருக்குப் புத்திரராக அமைந்ததால் இவருக்கு பிதாமகன் என்னும் பெயரும் உண்டாம். பிரமாவைச் சுப்பிரமணியக் கடவுள் சிறையிலிட்டு சிருஷ்டி கிருத்தியத்தை ஒரு காலத்தில் நடத்தினார் என்பது கந்தபுராணம். பிரம்மாவானவர் மகா பிரளய காலத்தில் ஒடுங்கி, சிருஷ்டி காலத்திலே தோன்றுதலின் அக்காலந் தோறும் அழிகின்ற பிரமாக்களின் கபாலங்களைச் சிவன் மாலையாக அணிவார் என்பதினால் தேவரெல்லோரும் அழியவும், அழியாது எஞ்சி நிற்பவர் சிவன் ஒருவரே என்பதும் பொருளாம்.

No comments:

Post a Comment