புராணம்:
உலகத்தினது தோற்றமும், ஒடுக்கமும், பாரம்பரியங்களும்,
மனுவந்தரங்களும், பாரம்பரிய கதைகளும், ஆகிய இவ்வைந்தையும் கூறலால் பஞ்சலக்ஷணம்
எனப்படுவது. புராணம் பதினெட்டு. அவை வேதங்களுக்கு வியாக்கியா ரூபமாய் உள்ளன.
அவை:
பிரமம், பத்மம், வைஷ்ணவம், சைவம், பாகவதம், நாரதீயம், மார்க்கண்டேயம், ஆக்கினேயம்,
பவிஷியம், பிரமகைவர்த்தம், லிங்கம், வராகம், ஸ்காந்தம், வாமனம், கூர்மம், மற்சம்,
கருடபுராணம், பிரமாண்டம், என பதினெண் புராணங்களாம். புராணம் என்பதன் பொருள் பண்டைய
வரலாறு.
அவற்றை வகுத்தவர் வியாசர். அவற்றுள் சிவபுராணம் பத்து, விஷ்ணுபுராணம் ஆறு,
பிரமபுராணம் ஒன்று, சூரியபுராணம் ஒன்று;
(விஷ்ணுபுராணம் நான்கு, பிரம புராணம் இரண்டு, அக்கினி புராணம் ஒன்று என்றும்
கூறுவர் சிலர்).
புராணமாவது சாஸ்திரங்களிலே தலைமை பெற்றது. அது கிருத யுகத்திலே
நூறு கோடி கிரந்தங்களினாலே பிரமாவினால் செய்யப்பட்டதால் ‘பிராமம்’ என்னும்
பெயருடையாதாய் ஒன்றாய் இருந்தது. திரேத யுகத்திலே ஒரு கோடி கிரந்தங்களால் 118
சங்கிதைகளை உடைய 18 பாகங்களாக அது மகரிஷிகளால் வகுக்கப் பட்டது.
அதனைத் துவாபர
யுகத்திலே வியாசர் நான்கு லக்ஷம் கிரந்தங்களாக பதினெண் (18) புராணமாக்கினார். அப்பதினெட்டையும்
ரோமகர்ஷணர் என்னும் முனிவர், வியாசரிடம் கேட்டார். அவர் சுமதி, அக்கினி வர்ச்சன்
முதலியோருக்கு உபதேசித்தார். இப்படி குரு-சிஷ்ய பரம்பரையாக வெளிவந்தன. இறந்துபோன
பல கற்பத்துச் (ஒரு பிரபஞ்சம் தோன்றி பின்னர் இது ஒடுங்குவதை ஒரு கற்பம் என்பர்)
செய்திகளை எடுத்துக் கூறப்படுதலாலும் இறந்துபோன சிருஷ்டிகளும் ஒருவாறின்றிப்
பேதப்படுதலும், கற்பந்தோறும் அநுகிரக மூர்த்திகளும் வேறாதலாலும், அந்த அந்தக்
கற்பத்து வரலாற்றைக் கூறும் போது, அந்த கற்பத்துக்கு அதிகார மூர்த்திகளை
விஷேடித்து துதிக்கப்படுதலாலும், புராணங்கள் ஒன்றுக்கொன்று மாறுபாடு
கொண்டுள்ளதுபோலத் தோன்றினாலும், உண்மையில் அவை ஒற்றுமை உடையனவே.
No comments:
Post a Comment