Thursday, December 19, 2013

ஆகமங்கள் (மந்திர, தந்திர, சித்தாந்தங்கள்)

ஆகமங்கள்:

ஈசுவரனால் அருளிச் செய்யப்பட்ட தந்திர சாஸ்திரங்கள்.  அவை சைவ, வைஷ்ணவ ஆகமங்கள் என இருவகைப்படும்.

வைஷ்ணவ ஆகமங்கள்: பாஞ்சராத்திரம், வைகானசம் என இரண்டு.  சோமகாசுரன் வேதங்களைச் சமுத்திர நடுவில் கொண்டுபோய் மறைத்தபோது, விஷ்ணு தன்னுடைய பூசார்த்ததமாக பூசாவிதையை சாண்டில்யவிருஷிக்கு ஐந்து ராத்தியிரியில் உபதேசித்தமையால் பாஞ்சராத்திரம் என பெயர் பெற்றது. வைகானசம் துறவற முதலிய ஒழுக்கங்களும் யோகஞான சித்திகளும் கூறுவது.

சைவ ஆகமங்கள்: காமியம் முதல் வாதுளம் ஈறாக இருபத்தெட்டுமாம். இவை சதாசிவ மூர்த்தியினது ஈசான முகத்தினின்றும் தோன்றின. தத்துவ சொரூபமாகிய விக்கிரங்கங்கள், ஆலயங்கள், பூஜைகள் என்னும் இவற்றின் உண்மைப் பொருள்கள் இந்த ஆகமங்களால் உணர்த்தப்படும்.

இவ்வாகமங்கள் மந்திரமெனவும். தந்திரமெனவும், சித்தாந்தமெனவும் பெயர் பெறும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கோடியாக இருபத்தெட்டுமிருபத்தெட்டுக் கோடி கிரகந்தங்களுடையது. இவை ஞானபாதம், யோகபாதம், கிரியாபாதம், சரியாபாதம் என தனித்தனி நான்கு பாதங்கள் உடையனவாயிருக்கும்.
இவற்றுள் ஞானபாதம் பதி-பசு-பாசம் என்னும் திரிபதார்த்தங்களின் ஸ்வரூபத்தையும்; யோகபாதம் பிராணாயாமம் முதலிய அங்கங்களையுடைய சிவயோகத்தையும்; கிரியாபாதம் மந்திரங்களின் உத்தாரணம், சந்தியாவந்தனம், பூஜை, ஜெபம், ஹோமம், என்பனவற்றையும், சமய விஷேச நிருவாண ஆசாரியாபிஷேங்களையும்; சரியாபாதம் பிராயசித்தம், சிராத்தம், சிவலிங்க இலக்கணம் முதலியவைகளையும் உபதேசிக்கும்.

ஆகமம் என்பது: பரமாப்தரினின்றும் வந்தது என பொருள்படும். இந்த ஆகமங்களுக்கு வழிநூல் நாரசிங்கம் முதல் விசுவகன்மம் ஈறாகிய உபாகமங்கள் (உப-ஆகமங்கள்) இருநூற்றேழுமாம். மூல ஆகமங்கள் இருபத்தெட்டும் வேதம்போல சிவனால் அருளிச் செய்தமையால் சைவர்களுக்கு இரண்டும் முதல் நூல்களாகும். 

No comments:

Post a Comment