Thursday, October 29, 2020

நாரதர்

 நாரதர் 

நாரதர், இதற்கு முந்தைய கற்பத்தில் (இப்போதுள்ள பிரபஞ்சம் வருவதற்கு முன்னர் இருந்த பிரபஞ்சத்தில்) ஒரு கந்தருவனாகப் (தேவலோகத்தில்) பிறந்தார். அப்போது, பிரம சிரேஷ்டர் என்னும் ஒரு பிராமணர் செய்த யாகத்துக்கு வருகிறார். அங்கு, வீணை வாசித்து எல்லோரையும் வசியம் செய்கிறார். அவ்வாறு இவரின் திறமையைக் காண்பித்து ஒரு பெண்ணை வசியம் செய்து, அவளுடன் உறவும் கொண்டு விட்டார். இதைத் தெரிந்த அந்த பிராமணர், இந்த நாரதன் மீது கோபம் கொண்டு, “நீ சூத்திரனாகப் பிறப்பாய்” என்று சாபம் கொடுத்து விட்டார். அவ்வாறு சூத்திர குலத்தில் பிறந்து, மகா தவம் செய்து, பின்னர் வந்த கற்பத்தில் (பின்னர் தோன்றிய பிரபஞ்சத்தில்) பிரம மானசருக்கு மகனாகப் பிறக்கிறார்.

இந்த நாரதர், தட்ச பிரஜாபதியின் பிள்ளைகளுக்கு ஞான உபதேசம் செய்கிறார். அதனால், அவர்கள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபாடு கொள்ளாமல் ஆகி விட்டார்கள். வம்ச விருத்தி இல்லாமல் போய் விடுகிறது. இயற்கையின் சிருஷ்டிக்கு எதிராக, நாரதரின் நடவடிக்கை இருந்ததால், தட்சன் கோபம் கொண்டு, “நாரதரே, நீர் சந்ததி இல்லாமல், நிலை இல்லாமல் அலைந்து கொண்டு திரிவாய்” என்று சாபம் கொடுத்து விட்டார். பொதுவாக நாரதர் கலகத்தை உண்டு பண்ணும் குணம் உடையவர். அவர் இருக்கும் இடம் கலகம் ஏற்படும். 

இந்த சாபத்தால், மூன்று உலகங்களான திரிலோகத்திலும் நாரதர் எப்போதும் சுற்றிக் கொண்டே இருப்பார். தன் காதில் எதைக் கேட்டாலும், அதை தன்னுள்ளே வைத்துக் கொள்ள மாட்டார். வேறு ஒருவருக்குச் சொல்லி விடுவார். இதனால் இவர் எங்கு சென்று எதைச் சொன்னாலும் ஒரு பிரச்சனை வந்து விடும். இவர், தேவ சபை, இராஜ சபை, வேள்வி சபை ஆகிய எந்த இடத்துக்கும் அழைக்காமலேயே சென்று விடும் குணமுடையவர். 

இது இல்லாமல், சில நல்ல விஷயங்களையும் செய்வாராம். தனியாக எங்காவது மாட்டிக் கொண்டவருக்கும், திக்கற்று இருப்பவர்களுக்கும், உடனே அங்கு சென்று, அவர்களுக்கு உபாயங்கள் என்னும் அறிவுரைகளையும் உதவிகளையும் செய்யும் குணம் உடையவராம். பின்னர் நிகழ்வதை முன்கூட்டியே கண்டு சொல்லும் திறமையும் இருக்கிறதாம். தூதுவராகச் சென்று சாதுரியமாகப் பேசும் வல்லமை உடையவராம். வீணை வாசிப்பதில் இவருக்கு நிகரானவர் வேறு யாரும் இல்லையாம். 

இந்த நாரதரே, கிருஷ்ணனின் பிறப்பை முன்கூட்டியே, அவன் எதிரியான கம்சனுக்கு உணர்த்தினாராம். அதே போல, இராமாயணத்தை, வான்மீகிக்கு உரைத்தவரும் இவர்தானாம். இவர் ஒரு தேவ ரிஷி. எனவே இவர் சம்மந்தப்படாத புராணங்களே இருக்காது என்பர். 

**

No comments:

Post a Comment