Friday, October 30, 2020

பிரகஸ்பதி என்னும் வியாழன்

 பிரகஸ்பதி என்னும் வியாழன்

பிரம மானசன் மகன்களில் ஒருவன் அங்கிரசன். இந்த அங்கிரசன் மகனே வியாழன் என்னும் பிரகஸ்பதி. இந்த பிரகஸ்பதி, தேவர்களின் குரு. (அசுரர்களின் குருவாக இருப்பவர் சுக்கிரன்). 

இந்த பிரகஸ்பதியின் மனைவி பெயர் தாரை. ஒரு முறை, சந்திரன் இங்கு வந்து, இந்த பிரகஸ்பதியின் மனைவி தாரையைக் கடத்திக் கொண்டு சென்று விட்டான். எனவே பிரகஸ்பதிக்கும் சந்திரனுக்கும் பெரும் போர் மூண்டது. பிரமதேவர் இருவரையும் சமாதானம் செய்து வைக்க முயன்றார். அவர், தாரையை விட்டுவிடும்படி சந்திரனிடம் கேட்டுக் கொண்டார். ஆனால் அதற்குள் சந்திரனுக்கும், தாரைக்கும் ஒரு மகன் பிறந்து விடுகிறான். அவன் பெயரே புதன். 

சமாதானத்துக்குப் பின்னர், தாரை, பிரகஸ்பதியிடம் வந்து சேர்ந்தாள். புதன் என்பவன் சந்திரனுக்குப் பிறந்ததால், புதனை சந்திர அம்சமானவன் என்றும் சொல்வர். 

பிரகஸ்பதிக்கு என்று தனியே ஒரு மண்டலம் உள்ளது. அதை பிரகஸ்பதி மண்டலம் என்பர். இது பொன் (தங்கம்) போல இருப்பதால், இந்த பிரகஸ்பதியை, பீதகன் என்றும் பொன் என்றும் சொல்வர். இந்த பிரகஸ்பதி மண்டலத்தில் உள்ளவர்கள் மனிதரைப் போன்றே இருப்பார்களாம். ஆனால், அறிவில் மிகச் சிறந்தவர்களாம். இந்த பிரகஸ்பதி மண்டலம் என்பது இந்த பூமியை விட பல மடங்கு பெரிதாம். ஆனால், மிக லேசான கோள் என்கிறார்கள். இங்கு வசிப்பவர்கள் பறந்து செல்வது போல இருக்குமாம். அவர்களை தேவகணத்தினர் என்றும் சொல்வர். புராணங்களில், பிரகஸ்பதி மண்டலத்தை தேர் என்று வர்ணிக்கின்றனர். இந்த மண்டலத்தைச் சூழ்ந்துள்ள மண்டலங்களை வெள்ளைக் குதிரைகளாக கற்பனை செய்துள்ளனர். அவ்வாறு சூழ்ந்துள்ள மண்டலங்கள் மொத்தம் எட்டு என்கிறது இந்திய புராணங்கள். ஆனால் ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் அதை ஐந்து என்று சொல்கிறார்கள்.

**

No comments:

Post a Comment