காயத்திரி மந்திரம்
சரஸ்வதி - பிரம்மாவின் மனைவி. இவரைப் பிரம்மாவே படைத்து மனைவியாக ஆக்கிக் கொண்டாராம். சரஸ்வதி வித்தைக்கு அதி தேவதை. இவரை சரஸ்வதி என்றும், சாரதாதேவி என்றும், காயத்திரி என்றும் அழைப்பர். இவர் நான்கு கைகளை உடையவர். ஒரு கையில் அட்சமாலையும், ஒரு கையில் கிளியும், ஒரு கையில் கமலம் என்னும் தாமரை மலரையும், ஒரு கையில் புத்தகத்தையும் வைத்திருப்பார். நான்கு வேதங்களும் இவரின் நான்கு கைகள் என்றும் சொல்வர்.
இவரின் உடலை ஒரு காரண காரியமாகச் சொல்வர். அதாவது, உபநிஷதம் இவரின் தலை என்றும், பிரமவித்தை இவரின் முகம் என்றும், இலக்கணமும், கணிதமும் இவரின் இரு கண்கள் என்றும், சங்கீத-சாகத்தியங்கள் இவரின் இரு தனங்கள் என்றும், ஸ்மிருதி இவரின் வயிறு என்றும், புராண-இதிகாசங்கள் இவரின் பாதங்கள் என்றும், ஓங்காரம் இவரின் யாழ் என்றும், கூறுவர்.
ஒரு யாகத்துக்கு, சரஸ்வதி வருவதற்கு காலதாமதம் செய்து விட்டார். உடனே கணவர் பிரம்மா கோபம் கொண்டு, ஒரு இடைச்சியை காயத்திரியாக ஆக்கி விட்டாராம். அவளையே தனது இரண்டாம் மனைவியாகவும் ஆக்கிக் கொண்டாராம். அதனால் கோபம் கொண்ட சரஸ்வதி, தேவர்களை எல்லாம் சபித்து விட்டாராம். அதனால்தான், தேவர்கள், தினமும், காலை மாலை இருவேளையிலும் காயத்திரி மந்திரத்தை சொல்லி வருகிறார்களாம்.
காயத்திரி மந்திரத்தில் உள்ள வர்ணனை, சிவனையும் குறிக்கும், அதே நேரத்தில் விஷ்ணுவையும் குறிப்பது போலவே இருக்குமாம். எனவே சைவர்களும், வைஷ்ணவர்களும் அதைத் தங்களுக்கு உரியதாகவே ஏற்றுக் கொள்வார்கள்.
வேதத்தைப் பசுவாகவும், அதன் சாரத்தை பாலாகவும் அடக்கி இருப்பது காயத்திரி மந்திரம் என்பர். எனவே தான் அதை இடைக்குல பெண்ணாக உருவகம் பண்ணினர் என்றும் சொல்கிறார்கள். ஒரு நதியின் பெயரும் காயத்திரி என்ற பெயரில் உள்ளது.
**
No comments:
Post a Comment