Friday, December 21, 2018

தந்தையே மகளுக்கு கார்டியன்


Madras High Court
G.Ponnaiah Asari v. Suppaiah Achari and others.
Citation: 158 Ind Cas 1 :: (1935) 68 MLJ 213
Judgment: Horace Owen Compton Beasley, Kt., C.J.
1935 காலக்கட்டங்களில் இராமநாதபுரம் மாவட்ட கோர்ட் மதுரையில் இருந்தது. மதுரையில் உள்ள இராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டுக்கு ஒரு வழக்கு வருகிறது. அதில், தன் மைனர் மகளைத் தன்னிடம் ஒப்படைக்கும்படி மைனர் பெண்ணின் தந்தையும், சகோதரனும் இந்த வழக்கை போடுகின்றனர்.
சுப்பையா ஆசாரிக்கு திருமணம் ஆகி, ஒரு மகனும் மகளும் இருக்கும் நிலையில் அவரின் மனைவி இறந்து விடுகிறார். பின்னர் சுப்பையா ஆசாரி வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறார். மூத்த மனைவியின் மகள் ஒரு வயதாக இருக்கும்போது மூத்த மனைவி இறந்து விடுகிறாள். இப்போது அந்த மகளுக்கு 13 வயது ஆகிறது.
மூத்த மனைவியின் சகோதரர்கள், இந்த மைனர் பெண்ணை கடத்திக் கொண்டு போய் விட்டார்கள். அவளிடம் அவள் தாயின் நகைகளும் உள்ளன. பாட்டியைப் பார்க்க வேண்டும் என்று அந்தச் சிறுமியிடம் சொல்லி நகைகளுடன் அவளை கடத்திச் சென்றுள்ளனர். அங்கு கொண்டு போய் அந்த மைனர் பெண்ணின் மாமன் மகனுக்குத் திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடும் செய்கிறார்கள். 13 வயதில் இருக்கும் மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்வது Child Marriage Act, 1929 சட்டப்படி குற்றமும் ஆகும்.  தகப்பன் இருக்கும்போது, அவனே அந்த மைனர் பெண்ணுக்கு சட்டப்படியான கார்டியன். எனவே மகளைத் தன்னிடம் ஒப்படைக்கு உத்தரவு கேட்டு மாவட்ட கோர்ட்டில் வழக்கு மனு கொடுக்கிறார்.
அந்த மைனர் பெண்ணுக்கு கோர்ட் மூலம் எந்த கார்டியனும் நியமிக்கவில்லை. அவ்வாறு கோர்ட் கார்டியன் நியமித்து இருக்காத போது, அவளின் தந்தை மட்டுமே இயற்கையில் கார்டியனாக இருக்க தகுதி உடையவர் என்பது தந்தையின் வாதம்.
வழக்கை விசாரித்த மாவட்ட கோர்ட், “அந்த மைனர் பெண்ணை, அவளின் தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், ஆனாலும், அவளின் தந்தை, அந்த பெண்ணை, ஒரு நான்கு மாதங்களுக்கு, தன் மாமன்கள், தாய் வழிப் பாட்டி இவர்களுடன் இருக்கும்படி அனுமதிக்க வேண்டும்” என்று தீர்ப்பு கூறினார்.  அந்த பெண்ணுக்கு 9 வயதுதான் ஆகிறது என்று தாய் மாமன்கள் சொல்கிறார்கள். பெண் வயதுக்கு வரும்போது, தாய்வழிப் பாட்டியிடம் இருப்பதே சிறந்தது என்பதால் அப்படிச் சொல்கிறார்கள். இப்படிச் சொல்வதால், மேலும் சிலகாலம் அந்தப் பெண்ணைத் தங்களுடனே வைத்துக் கொள்ள முடியும் என நினைக்கிறார்கள். ஆனால் அதில் உண்மையில்லை. அவளுக்கு 13 வயதாகிறது.
தந்தை கூறுகிறார், “இந்த வழக்கைப் போடுவதற்கு 15 நாட்களுக்கு முன்புவரை, மகள் தன்னிடமே இருந்து வந்ததாகவும், அதற்குப் பின்னர் தான் அவளை பொய் சொல்லி, தாய் மாமன்கள் அவர்களின் வீட்டுக்கு கூட்டிச் சென்றார்கள்” என்றும் சொல்கிறார். ஆனால் மாவட்ட நீதிபதி அது பொய்யான தகவல் என்றும் தன் தீர்ப்பில் கூறி உள்ளார்.
ஆனால் உண்மையில் இப்படித்தான் நடந்து இருக்க முடியும் என்று மாவட்ட நீதிபதி தன் கருத்தைச் சொல்லி உள்ளார். “இந்தப் பெண்ணுக்கு ஒரு வயது இருக்கும்போது, அவளின் தாய் இறந்து விடுகிறாள். அப்போது, இவளின் தகப்பனின் சம்மதத்தின் பேரில், இந்தப் பெண்ணை, அவளின் தாய்வழிப் பாட்டியும், தாய் மாமன்களும் அவர்களின் குடும்பத்துக்கு அழைத்துச் சென்று விட்டார்கள். அவள் அங்குதான் வசித்து வருகிறாள். அப்போது அவளின் தாய்க்கு திருமணத்தின் போது, தாய்வீட்டில் கொடுத்த நகைகளையும் சேர்த்து எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர். இந்தச் சூழ்நிலையில்தான், இவளின் தந்தை வேறு ஒரு பெண்ணை மறுமணம் செய்து கொள்கிறார். இரண்டாவது திருமணத்தின் மூலம் அவருக்கு நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள். இரண்டாவது மனைவி, அவளுக்குக் குழந்தைகள் பிறக்கும்போது, அவர்களுடன் இந்தச் சிறுமியையும் அந்த மாற்றந்தாய் சரியாக கவனிக்க முடியாது என்று கருதியே இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கலாம்,” என்று மாவட்ட நீதிபதி தன் கருத்தையும் சொல்லி உள்ளார்.
எனவே அந்தச் சிறுமி, தன் தாய்வழிப் பாட்டி வீட்டுக்கு தன் ஒரு வயதில் சென்றதில் இருந்தே அங்குதான் வளர்ந்து வருகிறார் என்றே கருத வேண்டும். அந்தச் சிறுமி, தன் தந்தையுடன் சேர்ந்து வசிக்கவில்லை. அந்தச் சிறுமியின் தாய்வழிப் பாட்டியும், தாய் மகன்களும் அவளை அன்புடனே வளர்த்து வருகிறார்கள். அவளுக்கு நகைகளும் செய்து கொடுத்துள்ளனர்.  அந்த சிறுமியைக் கோர்ட்டுக்கு வரவழைத்து அவளையும் ஒரு சாட்சியாக விசாரித்த போது, “நான் என் தந்தையுடன் சென்று வாழ விருப்பம் இல்லை” என்றும் சொல்லி உள்ளார். “எனக்கு, என் மாமன்கள், நகைகள் செய்து கொடுத்துள்ளார்கள், துணி மணிகள் வாங்கிக் கொடுக்கிறார்கள்”, என்றும் சொல்லி உள்ளாள். “நான், என் தந்தையை பார்த்தே இல்லை; அவரும் எப்போதும், நான் வசிக்கும் கிராமத்துக்கு என்னைப் பார்க்க வந்ததும் இல்லை; என் கூடப் பிறந்த என் சகோதரனும் என்னை வந்து பார்க்கவில்லை” என்று கூறுகிறாள்.
இவள் சிறுமிதான். ஏன் இவளின் சாட்சியத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது? ஏற்கக் கூடிய சாட்சியமாகவே இருக்கிறது என்று மாவட்ட நீதிபதி முடிவு செய்கிறார். சிறுமியின் தாய் இறந்தபோது, இரண்டு குடும்பத்துக்கும் சரியான உறவு முறை இருக்கவில்லை என்றே தெரிகிறது என்று மாவட்ட நீதிபதி கருத்து தெரிவிக்கிறார்.
மாவட்ட நீதிபதி, இரண்டு முன் வழக்குகளை மேற்கோள் காட்டுகிறார்.
Mohideen Ibrahim Nachi v. Mohamed Ibrahim Sahib, (1915) ILR 39 Mad.608 : 30 MLJ 21.
Kode Atchayya v. Kosaraju Narahari, (1958) 120 IC 474.
இந்த முன் வழக்குகளில், “தந்தையே தன் மைனர் குழந்தைகளுக்கு இயற்கை கார்டியன் ஆவார்; இதை நிலையையும் உரிமையையும் மாற்ற முடியாது;  ஆனால், தந்தை தகுதி இல்லாதவராக இருந்தால் மட்டுமே கார்டியனாக இயங்க முடியாது; மேலும், தந்தை, இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்ற ஒரே காரணத்துக்காக அவர் கார்டியனாக இயங்கத் தகுதி இல்லாதவர் என்று கருதி விட முடியாது,” என்றும் அந்த தீர்ப்புகளில் சொல்லப் பட்டுள்ளது.
எனவே தந்தைதான் எப்போதும் கார்டியன் என்பதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை; ஆனாலும் இதில் ஒரு முக்கியமான விஷயத்தையும் பார்க்க வேண்டும்; அது அந்த மைனரின் எதிர்கால நன்மை.
மற்றொரு வழக்கான, Battara v. Mohanlal Lallubai, (1922) 68 IC 518 என்ற வழக்கில், தந்தை கார்டியனாக இயங்க அனுமதி கேட்டுப் போட்ட வழக்கு தள்ளுபடி ஆகிறது. அந்த வழக்கில், மைனர் மகன், தன் பிரிந்து சென்ற தாயிடமே கடந்த ஐந்து வருடங்களாக வசித்து வருகிறான். அதை மைனரின் தகப்பனும் ஆட்சேபனை செய்யாமல் இருந்து இருக்கிறார். இப்போது திடீரென்று, கார்டியன் உரிமை கேட்டு வழக்குப் போட்டுள்ளார். மைனர் மகனின் நன்மையைக் கருதி, மைனரை அவனின் தந்தையிடம் ஒப்படைக்கவில்லை.
மற்றொரு வழக்கான, Mrs. Annie Besant v. Narayaniah (1914) LR 41 I.A.314 : ILR 38 Mad 807 : 27 MLJ 30 (PC); (1913) 25 MLJ 661 என்ற பிரபலமான வழக்காகும். இந்த வழக்கில், நாராயணையா என்பவர், தன் இரண்டு மகன்களையும் (ஜே.கிருஷ்ணமூர்த்தி, ஜே.நித்தியானந்தா) வளர்க்க முடியாமல் அல்லது அவர்களுக்கு நல்ல கல்வி அறிவு கொடுக்க முடியாமல் இருக்கும் சூழ்நிலையில், அன்னி பெசன்ட் அம்மையாரிடம் தன் இரண்டு குழந்தைகளையும் மதராஸ் பட்டிணத்தில் அடையாரில் உள்ள தியாசோபிகல் சொசைட்டியின் செகரட்டரியாக இருந்த அன்னி பெசன்ட் அம்மையாரிடம் ஒப்படைக்கிறார். அப்போது அந்தச் சிறுவர்களுக்கு முறைய 14, 11 வயதுகள். அந்த பெண்மணி அன்னி பெசன்ட் அந்தச் சிறுவர்கள் இருவரையும், லண்டனுக்கு அனுப்பி நல்ல கல்வியைக் கொடுக்கிறார். அப்போது, “இந்தக் குழந்தைகளை அன்னி பெசண்ட் அம்மணியே தத்து போல எடுத்துக் கொள்ளலாம் என்றும், தந்தை ஆகிய நான் எப்போதும் அதை கேள்வி கேட்கவோ, மகன்களின் மீது உரிமை கொண்டாடவோ மாட்டேன் என்றும், எனக்கு அவர்களின் கல்வி அறிவுதான் முக்கியம் என்றும் ஒரு பத்திரம் எழுதி அன்னி பெசன்ட் அம்மையாரிடம் ஏற்கனவே கொடுத்த இருக்கிறார். ஏனென்றால், தந்தையின் பாசத்தில், நன்றாக லண்டனில் படித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளை திரும்ப கேட்டு விடுவார் என்று நினைத்தார் அந்த அம்மணி. ஆனால் அதுவே நடந்து விட்டது. சிறுவர்கள் இருவரும் லண்டனில் மிகச் சிறந்த படிப்பாளிகளாக ஆகி விட்டார்கள். (அதில் ஒருவரின் பெயர் தான், பிரபலமான ஜேகே என்று சொல்லும் ஜே.கிருஷ்ணமூர்த்தி. பின்னர் அவர் எழுதிய தத்துவ அறிவுப் புத்தகங்கள் ஏராளம்). என்னதான் தன் பிள்ளைகளை வேறு ஒருவருக்கு கொடுத்து விட்டாலும், தந்தை பாசம் பொல்லாததுதான். அவர் செங்கல்பட்டு மாவட்ட கோர்ட்டில், தன் குழந்தைகளைத் தன்னுடன் ஒப்படைக்கும்படி வழக்கு போடுகிறார். அந்த வழக்கு, செங்கல்பட்டு கோர்ட்டில் நடந்து, மதராஸ் ஐகோர்ட்டில் நடந்து, பின்னர் லண்டனில் உள்ள பிரைவி கவுன்சில் வரை (உயர் அப்பீல் கோர்ட்) சென்றது. பிரைவி கவுன்சில் கோர்ட், அங்கு லண்டனில் படித்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவர்களை நேரில் கோர்ட்டுக்கு அழைத்து விசாரித்தும் இருக்கிறார்கள். அவர்களின் அறிவுத் திறமையை வியத்தும் உள்ளனர்.
“ஏதோ தந்தையின் ஆசையில், குழந்தைகளை வேறு ஒருவரிடம் ஒப்படைப்பது இயல்புதான். அதற்காக பாசமே இல்லை என்று சொல்லி விட முடியாது. அவரின் உரிமையை அதற்காக மறுக்கவும் முடியாது” என்று பிரைவி கவுன்சில் கருத்துச் சொல்லி உள்ளது. “A man may be in narrow circumstances, he may be negligent, injudicious and faulty as the father of minors; he may be a person from whom the discreet, the intelligent and the well disposed, exercising a private judgment, would wish his children to be, for their sakes and his own, removed; he may be all this without rendering himself liable to judicial interference, and in the main it is for obvious reasons well that it should be so.”
தந்தையிடம் குழந்தைகளை ஒப்படைக்க வேண்டுமா? இல்லையென்றால் அவர் கேபியஸ் கார்பஸ் ரிட் உரிமையை நாட முடியுமா? என்ற கேள்விகளுக்குப் பதிலாக, இங்கிலாந்து கோர்ட்டின் வேறு ஒரு வழக்கின் தீர்ப்பை பார்க்கிறார்கள். In re Agar Ellis, (1883) 24 Ch.D.317 at page 331. இது 1883-ல் நடந்த வழக்கு. இதில், குழந்தைகள், தன் முடிவை எடுக்கும் அறிவு வரும் வயதைத் தாண்டி விட்டால், அவர்களின் முடிவையும் கேட்க வேண்டும். அந்த வயதைத் தாண்டாத குழந்தையைப் பொருத்து, தந்தைதான் கார்டியன் என்ற சட்ட முடிவுக்கு கோர்ட் வர வேண்டும் என்று கூறி உள்ளது. தன் முடிவு எடுக்கும் அறிவு என்பது ஆண் குழந்தையாக இருந்தால் அவனுக்கு 14 வயதில் வரும்; அதே பெண் குழந்தையாக இருந்தால் அவளுக்கு 16 வயதில் வரும் என்று ஆங்கிலேய கோர்ட்டுகளின் முடிவு.
“But then there are cases where undoubtedly the Court declined to interfere on Habeas Corpus in order to interfere with it when it was of the age of discretion – the age of sixteen in the case of girls and the age of fourteen in the case of boys. For what reason is that? When an infant is so young as not to be able in the eyes of the law to exercise a discretion, then unless that infant is in the proper custody, that is to say the legal custody of the father or the guardian appointed, it is not in legal custody, and the very object of suing out a Habeas Corpus is to have it ascertained whether the person who is sought to be brought up is under duress or imprisonment; but nobody can be placed in the position of being under duress or imprisonment if he expresses a wish to remain where he is at the time the writ is issued, that is to say, provided the person is competent to express such a wish; and, if he does, it is the duty of law to regard it.”
இந்த அன்னி பெசன்ட் அம்மையாரின் வழக்கில், லண்டன் பிரைவி கவுன்சில் கோர்ட்டில் விசாரனை நடக்கும்போது, அந்த சிறுவர்கள் இருவரையும் அழைத்து நீதிபதிகள் பேசினார்கள். அப்போது பெரியவனுக்கு 18 வயதும், சின்னவனுக்கு 16 வயதும் ஆகிறது. பெரியவன் ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் படிக்கும் விருப்பத்தில் இருக்கிறான். சின்னவன், இந்தியன் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி இந்தியாவில் ஐசிஎஸ் அதிகாரி ஆகும் எண்ணத்தில் உள்ளான். அப்போது இரு சிறுவர்களும், Mr. G.S. அருண்டேல் என்பவரின் கண்காணிப்பில் உள்ளனர். அவர் கேம்பிரிட்ஜ் பட்டதாரி. மத்திய இந்து கல்லூரியில் பிரின்சிபலாக இருக்கிறார்.
எனவே கீழ்கோர்ட் கொடுத்த தீர்ப்பின் படியே, சிறுவர்கள் இருவரையும் தந்தையின் பொறுப்பிலேயே இருக்கும்படி பிரைவி கவுன்சில் உத்தரவு இட்டது.
**
இப்போது நாம் சுப்பையா ஆசாரியின் வழக்குக்கு வருவோம்.
மதுரையி்ல் உள்ள இராமநாதபுரம் மாவட்ட கோர்ட் தீர்ப்பு சரியே. தந்தையிடமே சிறுமி இருக்க வேண்டும். எனவே தாய் மாமன்கள் போட்ட அப்பீல் வழக்கு தள்ளுபடி ஆகிறது.
**



No comments:

Post a Comment