Thursday, December 20, 2018

ரயில்வே சீசன் டிக்கெட் வழக்கு 1956-ல்


In Re: B.Matameswara Rao v. Unknown (Judgment on 16 January 1956)
Citation: 1957 Crl.LJ 44
1954ம் வருடம். விஜயவாடா ரயில் நிலையம். அங்கு ரயில் பிரயாணியாக வந்து கொண்டிருந்த ஒரு பயணியிடம், ரயில்வே டிக்கெட் பரிசோதகர் பயண சீட்டைக் கேட்கிறார். அவர் தன்னிடம் இருந்த ஒரு சீசன் டிக்கெட்டை எடுத்துக் கொடுக்கிறார். அது அவர் பெயரில் வாங்கப்பட்ட சீட்டு இல்லை என்று தெரிகிறது. அந்த சீசன் டிக்கெட்டில் உள்ள பெயரே தன்னுடைய பெயர் என்று அந்தப் பயணி கூறுகிறார். உண்மையில் அந்த நபர் அவர் அல்ல என்று தெரிய வருகிறது. எனவே விஜயவாடாவில் உள்ள ரயில்வே 1-ம் வகுப்பு மாஜிஸ்டிரேட் முன்னர் நிறுத்தப் படுகிறார். அவர் மீது, “ஆள் மாறாட்டம் செய்து ரயில்வேயை ஏமாற்றி குற்றத்துக்காக” வழக்குப் போடப் படுகிறது. அந்த நபர் குற்றத்தை ஏற்க மறுத்து வழக்கு நடத்துகிறார். வழக்கில் அவரே (வக்கீல் வைக்காமல்) வாதம் செய்கிறார்.
வழக்கு விஜயவாடவின் சப்-மாஜிஸ்டிரேட் கோர்ட்டுக்கு மாற்றி விசாரிக்கப் படுகிறது. இந்த பயணி மீது ரயில்வே சட்டம் பிரிவு 112 (பி) மற்றும் 114-ல் குற்றம் சுமத்தப்படுகிறது. பின்னர் இந்த வழக்கை, இந்தியன் பீனல் கோடு சட்டம் பிரிவு 419-ஆக திருத்தி குற்றம் சுமத்தப்படுகிறது. ஏற்கனவே அவருக்கு இந்தியன் ரயில்வே சட்டப்படியே சம்மன் அனுப்பப் பட்டது என்றும், ஐபிசி படி சம்மன் அனுப்பவில்லை என்றும், எனவே இந்த மாஜிஸ்டிரேட் கோர்ட் விசாரனை செய்யும் அதிகாரம் இல்லை என்றும் வாதம் செய்கிறார்.
ஐபிசி சட்டப்படி தன்னை விசாரிக்க முடியாது என்று அதை எதிர்த்து ஐகோர்ட்டில் அவரே ஆஜராகி அப்பீல் வழக்கை நடத்துகிறார்.
மேலும், ரயில்வே சட்டம் பிரிவு 137 மற்றும் ஐபிசி பிரிவு 21-ன்படி டிக்கெட் பரிசோதகர் ஒரு அரசு அதிகாரி இல்லை எனவும், எனவே அவர் ஐபிசி சட்டப்படி தன் மீது வழக்குத் தொடர முடியாது என்றும் வாதம் செய்கிறார்.
முதலில் சம்மன் அனுப்பும் போது ரயில்வே சட்டத்தை மட்டும் சொல்லி அனுப்பி இருந்தாலும், பின்னர் ஐபிசி சட்டப்படி வழக்கு தொடர்ந்தாலும், இதில் ஏதும் நடைமுறைத் தவறு இருப்பதாகத் தெரியவில்லை என்று ஐகோர்ட் அவரது வாதத்தை ஏற்க மறுக்கிறது.
ரயில்வே டிக்கெட் பரிசோதகர் ஒரு அரசு அதிகாரியா என்ற கேள்வியை எழுப்புகிறார். அவர் அரசு அதிகாரி இல்லை என்றால், அவரே புகார் கொடுத்திருப்பதால், அவரை விசாரிக்காமல்  தீர்ப்பு வழங்கியது தவறு என்றும் வாதம் செய்கிறார்.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 21-ன்படி அவர் அரசு அதிகாரி இல்லை என்பதை ஏற்க முடியாது என்று ஐகோர்ட் சொல்கிறது. ரயில்வே சட்டம் பிரிவு 137-ன்படி ஒரு ரயில்வே ஊழியர் அரசு அதிகாரி இல்லை என்ற போதிலும், ஐபிசி சட்டம் அத்தியாயம் 9-ஐப் பொருத்தவரை அவர் ஒரு அரசு அதிகாரி தான். கிரிமினல் நடைமுறைச் சட்டத்தில் அரசு அதிகாரி யார் என்பதைப் பற்றி எந்த விளக்கமும் சொல்லவில்லை. இருந்தாலும், அந்த சட்டம் பிரிவு 4(2)-ல், ஐபிசியில் சொல்லப்பட்டுள்ள விளக்கங்களையே ரயில்வே சட்டங்களுக்கும் எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லப்பட்டுள்ளது என்று ஐகோர்ட் சொல்லி விட்டது. எனவே ஐபிசி சட்டப்படி ரயில்வே ஊழியர் அரசு அதிகாரிதான். ரயில்வே என்பது மத்திய அரசின் சொத்து. எனவே அதன் ஊழியர்கள் அரசு சம்பளம் பெறுபவர்கள்தான். எனவே ரயில்வே சட்டத்தில் குறிப்பிட்ட சொல்லா விட்டாலும், ஐபிசி-ல் சொல்லி உள்ளபடியே, ரயில்வே ஊழியர் அரசு ஊழியர் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே அவர் ஐபிசி சட்டப்படி வழக்குத் தொடுத்து இருப்பது சட்டப்படி சரியே என்று ஐகோர்ட் தீர்ப்பு கொடுத்து விட்டது.
மேலும், ஐபிசி சட்டப்படி வழக்கு தொடுத்தால், புகார் கொடுத்தவரை விசாரிக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. அந்த வழக்கில் அவ்வாறு புகார் கொடுத்தவரை விசாரிக்கவில்லை. இருந்தாலும், இது ஒரு நடைமுறை குறையே தவிர, சட்டக்குறை என்று எடுத்துக் கொள்ள முடியாது என்றும் ஐகோர்ட் சொல்லி விட்டது.
சீசன் டிக்கெட் வைத்திருப்பவரேதான் பயணம் செய்ய வேண்டும், மற்றவர் அதை உபயோகப்படுத்தி ரயில் பயணம் செய்யக் கூடாது என்று ரயில்வே சட்டத்தில் எங்கும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்பது உண்மைதான். ஆனால் இவரின் வழக்கோ, மற்றவரின் பயணச் சீட்டை உபயோகித்தார் என்பதையும் தாண்டி, அவரே நான் என்று ஆள்மாறாட்டம் செய்து உள்ளார் என்பதே வழக்கு. ஆள்மாறாட்டம் செய்வது இந்திய தண்டனைச் சட்டப்படி குற்றமே. எனவே ஐபிசி சட்டப்படி அவரைத் தண்டிப்பது சரியே என்று ஆந்திரா ஐகோர்ட் தீர்ப்பு கூறியது.
**

No comments:

Post a Comment