Tuesday, December 18, 2018

தேவதாசியின் சொத்து வழக்கு


தேவதாசி சர்வீஸ் இனாம் சொத்து வழக்கு (1959-ல்):
ஆந்திராவில் குண்டூர் மாவட்டத்தில் போலூர் கிராமத்தில் “ஶ்ரீ சென்ன கேசவ சுவாமி” கோயில் உள்ளது. இதை 1959 காலக் கட்டத்தில், அதன் டிரஸ்டிகள் நிர்வகித்து வந்தார்கள். அந்த கோயிலுக்காக நிறைய நிலங்கள் உள்ளன.
அதில், ஒரு 13 ஏக்கர் நிலத்தை, தேவதாசி சர்வீஸ் இனாமாக கொடுத்து இருந்தார்கள். (தேவதாசி என்பவர், கடவுளுக்கு திருமணம் செய்து கொடுத்த பெண் என்பர். அந்தக் காலத்தில், அப்படி கடவுளின் சேவைக்காக அர்பணிக்கப்பட்ட பெண்ணை மிகவும் மரியாதையுடன் சமுதாயம் பார்க்கும்).
1959 காலக் கட்டத்தில், இந்த தேவதாசி முறை ஒழிக்கப்பட்டு விட்டது. எனவே அந்த நிலம் அந்த தேவதாசி பெண்ணுக்கு, கோயில் சேவை செய்வதற்காக கொடுத்தது. இப்போது தேவதாசி முறை ஒழிக்கப் பட்டதால், அந்த சேவையை அவள் கோயிலுக்கு இனி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என்பதால், அதற்காக அவளுக்குக் கொடுத்த நிலத்தை திரும்பவும் கோயிலுக்கே ஒப்படைக்க வேண்டும் என்று டிரஸ்டிகள் வழக்கு போட்டார்கள்.
கீழ்கோர்ட் அந்த வழக்கை ஏற்றுக் கொண்டு டிகிரி கொடுத்தது. அதை எதிர்த்து அந்த தேவதாசிப் பெண் அப்பீல் போனார். அங்கும் அவள் வழக்கை ஏற்றுக் கொள்ளவில்லை. அதை எதிர்த்து அவள் மதராஸ் ஐகோர்ட்டுக்கு அப்பீல் சென்றாள். ஐகோர்ட் அவள் வழக்கை ஏற்றுக் கொண்டது. இது சர்வீஸ் இனம் அல்ல; அவளுக்கே இனாமாக கொடுத்த நிலம் என்றும் எனவே அதை திரும்ப பெற முடியாது என்றும் தீர்ப்பு கொடுத்து, டிரஸ்டிகள் போட்ட வழக்கை தள்ளுபடி செய்தது.
இந்த வழக்குகள் 1946 முதல் 1951 வரை நடந்தது. இடைப்பட்ட காலத்தில் கீழ்கோர்ட் தீர்ப்புப்படி, கோயில் டிரஸ்டிகள், அந்த நிலத்தை தேவதாசிப் பெண்ணிடமிருந்து சுவாதீனம் எடுத்துக் கொண்டனர். எனவே அந்தப் பெண், இப்போது வழக்கு அவளுக்குச் சாதகமாக வந்து விட்டால், நிலத்தை திரும்ப ஒப்படைக்கும்படியும், அதில் வழக்கு காலத்தில் வந்த வருமானத்தையும் அவளுக்கு கொடுக்க வேண்டும் என்றும் மனு போடுகிறாள்.
கோயில் டிரஸ்டிகள் வசம் நிலம் போன பின்னர், அவர்கள் அந்த நிலத்தை குத்தகைக்கு விடுவதற்காக ஏலம் போட்டு, அதில் ஏலம் எடுத்தவர் வசம் நிலத்தை ஒப்படைத்து விட்டார்கள். பசவச்சாரி என்பவர் இந்த நிலத்தை ஏலம் எடுத்து இருந்தார். பின்னர் அவர் இன்சால்வன்ட் என்னும் கடன் கொடுத்தவர்களுக்கு பணம் கொடுக்க முடியாத நிலைக்கு வந்து விட்டார். எனவே கோயில் நிர்வாகமும் அவரிடம் எந்த பணமும் நிலத்துக்காக வாங்கவில்லை என்று சொல்கிறார்கள். நிலத்தில் பணம் வாங்கி இருந்தால் மட்டுமே நாங்கள், தேவதாசிக்கு கொடுக்க கடமைப் பட்டவர்கள். நாங்கள் எந்த பணமும் வாங்கவில்லை. ஏலம் எடுத்தவரும் Insolvent ஆகி விட்டார். அப்படி இருக்கும்போது, நாங்கள் எப்படி தேவதாசி பெண்ணுக்கு நிலத்தின் வருமானமாக பணம் கொடுக்க முடியும் என்று வாதம் செய்கிறார்கள்.
Mesne profit மீன்-புராபிட் என்பது ஒருவர் ஒரு சொத்தை கைவசம் வைத்திருக்கும் காலத்தில், அதில் வரும் வருமானங்களை அடைந்து கொண்டிருந்தால், அந்த வருமானத்தை மீன்-புராபிட் என்று சட்டம் சொல்கிறது. இது சிவில் நடைமுறை சட்டம் பிரிவு 2(12)-ல் விளக்கி உள்ளது.
எனவே இந்த சொத்தில் வருமானம் வந்தால் மட்டுமே அது மீன்-புராபிட் ஆகும். வருமானம் வரவில்லை என்றால், அதை கேட்க முடியாது என்பதால், தேவதாசி கேட்ட வருமானத்தைக் கொடுக்க முடியாது என்று வழக்கு தள்ளுபடி ஆகி விட்டது.
**

No comments:

Post a Comment