Wednesday, December 19, 2018

நதி நீர் அரசுக்குச் சொந்தமா?


நதி நீர் அரசுக்குச் சொந்தமா?
சின்னப்பன் செட்டி v. செக்ரட்டரி ஆப் ஸ்டேட் ஆப் இந்தியா
Chinnappan Chetty v. The Secretary of State for India. (1919) 36 MLJ 124
மதராஸ் ஐகோர்ட்டின் முன்பு ஒரு வழக்கு வருகிறது. மருதார் நதி என்பது அரசுக்குச் சொந்தமான மலையில் உருவாகி நிலப்பரப்புக்கு வந்து ரயத் நிலங்களின் வழியாக ஓடுகிறது. அது கன்னிவாடி ஜமின்தாரின் நிலங்கள் வழியாகச் செல்கிறது.
கன்னிவாடி ஜமின்தார் இந்த நதியின் நீரை தன் நிலங்களுக்கு எந்த வரியும் இல்லாமல் இலவசமாக உபயோகித்துக் கொள்ளலாமா என்பதே கேள்வி. ஜமின்தாரின் நிலங்களில் வழியாக நதி ஓடுவதால், அந்த பகுதியில் உள்ள மருதார் நதி நீரை அவர் உபயோகப் படுத்த அவருக்கு உரிமை உண்டு என்று ஜமின்தார் சொல்கிறார். அதற்கு அரசு வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்கிறார்.
The Madras Irrigation Cess Act, VII of 1865 as amended by Act V of 1900. இந்த சட்டத்தின் படி, அரசுக்கு சொந்தமான நதி நீரை பாசனத்துக்கு உபயோகிக்கும் நிலத்தின் உரிமையாளர் நீர் வரி செலுத்த வேண்டும் என்று அரசு கேட்கிறது.  ஜமின்தார் மறுக்கிறார். “என் நிலத்திற்குள் ஓடும் நதியின் நீரை என் நிலத்துக்கு பாசனத்துக்கு பயன்படுத்த, நான் ஏன் அரசுக்கு நீர் வரி செலுத்த வேண்டும்?” என்பது அவரின் வாதம்.
மேற்படி சட்டப்படி, நதிகள், ஓடைகள், வாய்க்கால்கள், குளங்கள், இவைகளை அரசு ஏற்படுத்தி இருந்தால், அதன் நீரை பாசனத்துக்கு பயன்படுத்தும் நில உரிமையாளர் நீர் வரி செலுத்த வேண்டும் என்பது சட்ட விதி.
எல்லா பொது ரோடுகளும், தெருக்களும், சந்துகளும், பாதை வழிகளும், பாலங்களும், மதகுகளும், கடலின் படுகைகளும், துறைமுக முகத்துவாரங்களும், நதிகளும், நீர் ஓடைகளும், நலா, ஏரி, குளம், குட்டை, இவைகளில் ஓடும் நீரும், கிடக்கும் நீரும்  - இவைகளை உபயோகப்படுத்தும் நில உரிமையாளர்  வரி செலுத்த வேண்டும் என்பது சட்டம்.
ஆனால் ஜமின்தாரின் ஆட்சேபனையைப் பொறுத்து இதுவரை சரியான சட்டம் ஏதும் இருப்பதாக தெரிவில்லை. ஜமின் சொத்துக்கு நடுவில் ஓடும் ஆறுகள் ஜமினுக்கு சொந்தம் என Kandukuri Mahalakshmamma Garu v. The Secretary of State for India, (1910) ILR 34 Mad. 295 என்ற வழக்கில் தீர்ப்பாகச் சொல்லப் பட்டுள்ளது. ஆனால் மற்றொரு வழக்கான The Secretary of State for India v. Ambalavana Pandara Sannadhi (1917) ILR 40 Mad 886 என்ற வழக்கில் இந்த கருத்துக்கு மாறாக தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.
ஆறுகளும், நீரோடைகளும் அரசுக்கு சொந்தம் என Act VII of 1865 சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இயற்கையாக உள்ள நதிகளின் நீரை மக்களின் சமுதாய பணிகளுக்கு ஏற்ப பகிர்ந்து அளிக்க வேண்டியது அரசின் கடமை.
ஆங்கிலேயர் நாட்டில் உள்ள நதிகளின் நிலைமை வேறு. இந்தியாவில் உள்ள நதிகளின் நிலைமே வேறு. அங்குள்ள சட்டத்தை இங்கு அமல் படுத்த முடியாது. எனவே நதிகள் அரசுக்குச் சொந்தம் என ஏற்கமுடியாது. பாசனம் செய்பவர்களின் உரிமை மேலானதே.
ஒரு நதியை அரசு செலவில் உருவாக்காமல் இருந்தாலும், அதன் நீரை பயன்படுத்த நீர் வரி விதிக்க அரசுக்கு உரிமை உண்டு என்பதில் சந்தேகம் இல்லை. ஆனாலும் வேறு ஒரு வழக்கில், அரசு செலவு செய்து கட்டிய ஏரிகள் குளங்கள் இவைகளின் நீருக்கு மட்டுமே நீர் வரி விதிக்க முடியும் என்றும் சொல்லி உள்ளது. அரசு எந்தச் செலவும் செய்யாமல் தானே உருவாகி ஓடி வரும் நதியின் நீருக்கு அரசு நீர் வரி விதிக்க முடியாது என்று பொருள்.
நதியின் "நிலம்" வேண்டுமானால் அரசுக்கு சொந்தமாக இருக்கலாம். அதில் ஓடி வரும் நீர், அந்த அந்த நிலத்தின் பகுதியில் உள்ள நில உரிமையாளர்களுக்கு சொந்தம். அதாவது நதி ஓடும் "நிலம்" அரசுக்குச் சொந்தம். நதியில் "ஓடும் நீர்" அங்கு உள்ள நிலத்தின் உரிமையாளருக்குச் சொந்தம்.
நதியில் ஓடும் நீர், ஒரு மாதத்தில் ஒரு நேரத்தில் அதன் கரையில் மேல் எழும். மறு நேரத்தில் கரைக்கு உள் அடங்கிப் போகும். எப்போதெல்லாம் நீர் பெருக்கு இருக்கிறதோ அந்த நிலப்பகுதிவரை நதியின் நிலம் என்று கணக்கில் கொள்ள வேண்டும்.
நதிக்கரை வரை அதை ஒட்டி உள்ள நிலத்தின் உரிமையாளருக்குச் சொந்தம் என்பதே நியதி. அது நதியை ஒட்டி உள்ள நிலத்தின் உரிமையாளருக்கு உள்ள ஈஸ்மெண்டரி உரிமையும் ஆகும்.
ஆனாலும், நதியின் நீரை மட்டுமே அதை ஒட்டி உள்ள நிலத்தின் உரிமையாளர்கள் பாசனத்துக்கு பயன்படுத்திக் கொள்ள ஈஸ்மெண்டரி உரிமை உள்ளது. அந்த நதியின் நீர் அவருக்கு உரிமை இல்லை. அந்த நீர் "ஒரு சொத்து" என்று அவர் உரிமை கொண்டாட முடியாது.
எனவே ஓடும் நதி நீர் அரசுக்குச் சொந்தம் என்பதில் 1865 சட்டத்தின் படி சரியே. ஆனாலும் அந்த நதியின் படுகை என்னும் கரை பகுதி அதை ஒட்டி உள்ள நிலத்தின் உரிமையாளருக்கு உள்ள ஈஸ்மெண்டரி உரிமை ஆகும். அவரின் நிலத்தில் இருந்து நதிக்கு போக வரவும், நீர் இறைத்துக் கொள்ளவும் உள்ள ஈஸ்மெண்டரி உரிமை ஆகும்.
**

No comments:

Post a Comment