Saturday, November 21, 2015

சாம்பெட்ரி Champetry

சாம்பெட்ரி Champetry

சாம்பெட்ரி Champetry  என்ற வார்த்தை கோர்ட்டுகளில் மட்டுமே பயன்படுத்தப்படும் வார்த்தை; ஒரு வழக்கை நானே முடித்து தருகிறேன்; அதற்கான செலவையும் நானே பார்த்துக் கொள்கிறேன்; கேஸ் ஜெயித்தவுடன் அந்த சொத்தில் எனக்கு இவ்வளவு பங்கு கொடுத்துவிட வேண்டும்; அல்லது இவ்வளவு பணம் கொடுத்துவிட வேண்டும் என்று சட்டத்துக்கு புறம்பாக ஒரு ஒப்பந்தத்தை செய்து கொள்வதை சாம்பெட்ரி என்கிறார்கள்; அமெரிக்காவில் இப்படி ஒரு அக்ரிமெண்டை போட்டுக் கொள்ளலாம்; ஆனால் பிரிட்டனிலும், இந்தியாவிலும் இது தவறு;

நாம், இந்தியாவில், ஆங்கிலேய கோர்ட் முறையையே பின்பற்றி வருகிறோம்; இதில் வக்கீல் தொழில் என்பது ஒரு புனிதமானது என்றே கூறப்பட்டுள்ளது; பணம் சம்பாதிக்க இங்கு வரக்கூடாது என்பதே அதன் உண்மையான அர்த்தம்; அப்படியென்றால்? உண்மையிலேயே இந்த சமுதாயத்துக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டுமே இந்த வக்கீல் தொழிலைச் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது; எனவே ஒரு வழக்குக்கு எவ்வளவு பீஸ் கொடுக்க வேண்டும் என்று எங்கும் வரையறை செய்யவில்லை;

பழைய காலத்தில், (பிரிட்டீஸ் ஆட்சியில்), கோர்ட்டில் ஆஜராகும் வக்கீல்களுக்கு ஒரு கறுப்பு அங்கி கொடுத்திருப்பார்கள்; ஓவர் கோட்டுடன், இந்த வக்கீல் அங்கியையும் அணிந்து கொண்டுதான் கோர்ட்டுக்குச் செல்ல வேண்டும்; இதை இப்போது கவுன் என்று சாதாரணமாகச் சொல்கிறார்கள்; உண்மையில் அதன் பெயர் ரோப்ஸ் Robes; இந்த ரோப்ஸ்க்கு, முன்பக்கம் பட்டன் இருக்காது, பெரிய கைகள் இருக்கும்; இதன் முன்பக்கம் இரண்டு ரிப்பன்கள் தொங்கும்; பட்டனுக்குப் பதிலாக அதை இழுத்து கட்டிக் கொள்ள வேண்டும்; அது ஒரு நிரந்தர உடை இல்லை என்பதால் இப்படி செய்திருப்பார்கள் என நினைக்கிறேன்; இது இல்லாமல், மேலும் ஒரு சிறப்பு உண்டு; அந்த ரோப்ஸ்க்கு பின் பக்கத்தில் வரிவரியாக துணியை மடக்கி வைத்து ஒரு அடுக்குபோல தைத்திருப்பார்கள்; சாதாரண வக்கீல் இத்தகைய அடுக்க வைத்த ரோப்ஸ் கவுனைத்தான் போட வேண்டும்; சீனியர் வக்கீல் அல்லது பாரிஸ்டர் பட்டம் பெற்ற வக்கீல்கள் அணியும் ரோப்ஸ்-ல் இந்த அடுக்குக்குப்பதிலாக ஒரு மேலே ஒரு ப்ளாப் துணியும் இருக்கும்;

இவைகள் எல்லாம் இல்லாமல், இந்த ரோப்ஸ்க்கு பின் பக்கத்தில் ஒரு சிறிய பையை தைத்து அதை தொங்க விட்டிருப்பார்கள்; பார்ப்பதற்கு பழங்கால பாட்டிகள் வைத்திருக்கும் சுருக்குப்பை போலவே இது இருக்கும்; இந்த பையில்தான் வழக்குக்கு வருபவர்கள் தான் கொடுக்க நினைக்கும் பணத்தை போட்டுவிட்டு செல்வார்களாம்; அது எவ்வளவு என்று அந்த வக்கீலுக்குத் தெரியாது; ஏனென்றால் அந்த பை, அவரின் கவுனுக்கு பின்பக்கம் இருக்கும்; அவர் சாம்பருக்கு (அறைக்கு) சென்றபின்னரே அந்த கவுனைக் கழற்றி அதிலுள்ள பணத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமாம்; இதன் சிறப்பு என்னவென்றால் – யார் எவ்வளவு பணம் கொடுக்கிறார்கள் என்று தெரியாமலேயே எல்லோருக்கும் ஒரே மாதிரியான தன் சட்ட வாதத்தை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த, உன்னத நீதி இங்கு பின்பற்றப்படுகிறது; ஏழையாக இருந்தாலும், பணக்காரனாக இருந்தாலும், வக்கீல் ஒரே கண்ணோட்டத்துடன் வழக்கை நடத்த வேண்டும் என்ற உயரிய கோட்பாடு எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது;

ஆனால், இப்போது இந்த பையை காணவில்லை; கவுன் இருக்கிறது; கோட்பாடும் இல்லாமல் போய்விட்டது; வக்கீலுக்கு பீஸ் கொடுக்க பயந்து கொண்டே கோர்ட்டுக்கு போகமுடியாமல் தவிப்பவர்கள் ஏராளம்;

வக்கீலுக்கு எவ்வளவு பீஸ் கொடுக்க வேண்டும் என சில விதிமுறைகள் இருந்தாலும் அவை நடைமுறையில் சாத்தியமில்லாமல் போய்விடுகின்றன;

அமெரிக்காவில், இதற்கு ஒரு புதிய வழிமுறையை கண்டுபிடித்து உள்ளார்கள்; வக்கீலுக்கு மார்க் போடுவது; அவர் எவ்வளவு பீஸ் வாங்குவார்; எப்படி சட்டம் தெரிந்துள்ளார்; கோர்ட்டில் அவரின் வாதம் எப்படி இருக்கும்; கேஸ் கொடுத்தவரிடம் எப்படி அன்பாக நடந்து கொள்வார் என்று பல விஷயங்களை வைத்து அவருக்கு மார்க் உண்டு; அதை அவரிடம் கேஸ் நடத்திய பார்ட்டிகளே சொல்ல வேண்டும்; இந்த வக்கீலிடம் என் அனுபவம் எப்படி இருந்தது என்று; அதை வெப் சைட்டில் போட்டு விடுவார்கள்; எந்த வக்கீல் நல்ல வக்கீல் என்றும், எந்த வக்கீல் அநியாய பீஸ் வாங்கும் வக்கீல் என்றும் ஊருக்கே வெளிச்சம் போட்டு காட்டிவிடும்;

இங்கும் வக்கீல்களை மதிப்பீடு செய்யும் முறை இதேபோல வந்தால், அதன் புனித தன்மை காப்பாற்றப்பட்டுவிடும் என்றே நம்புகிறேன்.
                   _________________


No comments:

Post a Comment