ஆஸ்திரேலியாவின் தாஜ்மஹால்!
ஆஸ்திரேலியா நாட்டிலுள்ள விக்டோரியா மாநிலத்தின் தலைநகரம் மெல்பர்ன்
நகரம்-MELBOURNE; ஆஸ்திரேலியாவிலேயே இந்த
நகரம்தான் இரண்டாவது பெரிய நகரமும் கூட; சுமார் 10 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவு
கொண்டது; நம்ம சென்னை வெளி ஏரியாவுடன் சேர்த்தே சுமார் ஆயிரம் கி.மீ.
பரப்பளவுதான்! அப்படியென்றால், சென்னையைக் காட்டிலும் இந்த மெல்பர்ன் நகரம் பத்து
மடங்கு பெரியது;
அதுபோல, ஆஸ்திரேலிய நாட்டிலுள்ள மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்துக்கு
தலைநகர் பெர்த்-PERTH. இது ஆஸ்திரேலிய நாட்டிலேயே நான்காவதாக உள்ள பெரிய நகரம்; இது சுமார்
6,500 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது; சென்னையைக் காட்டிலும் ஆறு மடங்கு பெரிய
நகரம்; ஆஸ்திரேலிய வரைபடத்தைப் பார்த்தால், அதில் மேற்கு கரையோரம் இருக்கும் பெரிய
நகரம்தான் இந்த பெர்த் நகரம்;
இந்த பெர்த் நகரத்தில், இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு பணக்காரரும்
அவர் மனைவியும் வசிக்கிறார்கள்; இவர்களை ஓஸ்வால் குடும்பம் என்பார்கள்; இவர்கள்
பெரிய உரத் தொழிற்சாலை நடத்தி வருகிறார்கள்; உரத்துக்குத் தேவையான அமோனியாவை திரவ
நிலையில் தயாரிக்கும் பெரிய கம்பெனி; பணக்காரர் என்றால், “உங்க வீட்டுப்பணம், எங்க
வீட்டுப்பணம் எல்லாம் கிட்ட நிற்காது”, அவ்வளவு பெரிய செல்வந்தர்; ஆஸ்திரேலியாவிலேயே
ஒருசில பெரும் பணக்காரர்களில் இவர் முன்னனியில் இருப்பவர்; இரண்டு பில்லியன் ஆஸ்திரேலியா
டாலர் சொத்து இருந்ததாம் (கணக்கை நீங்கள் போட்டுக் கொள்ளுங்கள்);
இவருக்கு என்ன ஆசையோ தெரியவில்லை, ஒரு பிரமாண்டமான கட்டிடத்தை, அதாவது
தாஜ்மஹால் என்று சொல்லும் அளவுக்கு கட்டிவிட வேண்டும் என்று ஆசை! அதை அவர்
வசிக்கும் வீடாகவே வைத்து வசித்துக் கொள்ள நினைத்தாராம்; பெர்த் நகரில் உள்ள
முக்கியமான பணக்காரர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பெரிய நிலத்தை சுமார் 165
கோடிக்கு வாங்கினாராம்; (நிலத்துக்கு மட்டுமே அவ்வளவு விலை); அதில் தன் தாஜ்மஹால்
என்னும் அரண்மனையை கட்டத் துவங்கி இருக்கிறார்; இவருக்கு, நம்ம ஊர் பழமொழியான “சிறுக
கட்டி பெருக வாழ்” என்ற பொன்மொழியை சொல்லிக் கொடுக்க ஆள் இல்லைபோலும்! கட்டிடம்
என்றால் பிரமாண்டம்; உள்ளேயே சாமி கும்பிட கோயில்; 17 கார்கள் தானாகவே போய்
நிற்கும் இடங்கள்; உடற்பயிற்சிகூடும்; இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்! இதுவரை
265 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறாராம்;
சுமார் பத்து வருடங்களுக்குமுன், 20 வயதுள்ள பங்கஜ்-ராதிகா ஓஸ்வால்
தம்பதிகள் கொஞ்சம் பணத்துடன் ஆஸ்திரேலியா பெர்த் நகருக்கு வந்தவர்கள்; அப்போது
இவர்களை யாருக்கும் தெரியாது; வந்த வேகத்தில் பணம் கொட்ட ஆரம்பித்தது; அடுக்கிக்
கொண்டே போகலாம்...
ஆனால், அதிஷ்டம் பத்து வருடத்தில் பறந்துவிட்டது; 2010ல் தொழிலில்
நஷ்டம்; எல்லாப்பக்கமும் அடி; மரண அடி; அரசாங்கத்துக்கு வரிகட்டக் கூட
முடியவில்லையாம்;
பெர்த் நகரில் கட்டிக்கொண்டிருந்த “தாஜ்மஹாலை” கட்ட முடியவில்லை; நம்ம
ஊரில், சிமெண்ட் பூச்சுவேலை இல்லாமல் இருக்கும் கட்டிடத்தைப் போல அப்படியே
போட்டுவிட்டார்; வாழ்ந்தவன் கெட்டால், அதே ஊரில் வாழ முடியாது; ஓஸ்வால்,
துபாய்க்கு மூட்டை முடிச்சுகளுடன் கிளம்பி விட்டார்; ஏதாவது புரோக்கர் வேலை செய்து
பிழைத்துக் கொள்ளலாம் என நினைத்திருப்பார்போலும்!
பெர்த் நகரில் பாதி கட்டிய நிலையில் உள்ள “தாஜ்மஹாலை” போய் பார்க்க
கூட முடியவில்லை; கட்டிடம் நாளாக நாளாக பாழடைந்து வருகிறது; சீட்டு விளையாடுபவர்களுக்கு
கொண்டாடம்; ரௌடிகள் ஒளிந்து கொள்ள ஒரு வசதியான கட்டிடமாக இருந்திருக்கிறது;
பணக்காரர்கள் வசிக்கும் ஏரியாவில் இந்தக் கட்டிடம்; அங்கு வசிப்பவர்கள் இந்த
கட்டிடத்தை இடிக்கும்படி அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறார்கள்; ஆனால் ஓஸ்வாலுக்கு
மனசே ஆறுதல் அடைய மாட்டேன் என்கிறது; மறுத்துப் பார்க்கிறார்; நான் வந்து மீண்டும்
கட்டிவிடுவேன் என கனவு; முடியவில்லை; வேறு வழியில்லாமல் கட்டிடத்தை இடிப்பதற்கு
ஒப்புக் கொள்கிறார்;
ஒரு பாங்க் மட்டும் இவருக்கு 900 மில்லியன் ஆஸ்திரேலிய டாலரைக் கடனாக
கொடுத்திருந்ததாம்; அந்த பேங்க் இப்போது ஓஸ்வால் மீது கோர்ட்டில் வழக்குப்
போட்டிருக்கிறது; சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறது;
பணம் என்ற இறக்கை இருந்தால் குதிரை தரையில் ஓடாது, பறக்கத்தான்
செய்யும் போல!
**
No comments:
Post a Comment