தேவரதா Devavrata
மன்னன் சாந்தனு, கங்கை நதிக்கு போகும்போது, கங்காதேவி என்ற
தேவதைப் பெண்ணை (தேவரதா) பார்த்து மயங்கி, ‘நீ யாராக இருந்தாலும், நீதான் என்
மனைவியாக வேண்டும் என்றும் உனக்கு என் நாட்டையும் எல்லா சொத்துக்களையும்
கொடுக்கிறேன்’ என கேட்கிறார்.
ஆனால், அவரை திருமணம் செய்ய ஒப்புக் கொண்ட அந்த
தேவதை சில நிபந்தனைகளையும் விதிக்கிறார். ‘நான் யார் என்றும் எங்கிருந்து வந்தேன்
என்றும் கேட்கக்கூடாது; நான் செய்யும் நல்லது கெட்டதை ஏன் செய்கிறாய் எனவும்
கேட்கக்கூடாது; அப்படி ஏதாவது எனது மனத்துக்கு பிடிக்காமல் நடந்தால், நான் உங்களை
விட்டு சென்றுவிடுவேன்’ என நிபந்தனை விதிக்கிறார்.
அதற்கு ஒப்புக்கொண்டு, சாந்தனு
மன்னன் அவளை திருமணம் செய்கிறார். அவளுக்கு பிறக்கும் குழந்தைகளை ஒவ்வொன்றாக கங்கை
நதியில் தூக்கி எறிந்து விடுவாள். மன்னனும் நிபந்தனையை மீறமுடியாமல், அவளை எதுவும்
கேட்க முடியாமல் இருந்தார். அதுபோல 7 குழந்தைகளை கங்கை நதியில் தூக்கி எறிந்து
விட்டாள்.
8-வது குழந்தையை தூக்கி கொண்டு போகும்போது, மன்னன் சாந்தனு கோபமாக
தடுக்கிறான். ஏன் உன் குழந்தையையே கொடூரமாக கொலை செய்கிறாய் என கேட்கிறார்.
அதற்கு
அவள், ‘நீங்கள் எனது நிபந்தனையை மீறி நடந்து விட்டதால், நான் போகிறேன். இந்த 8-வது
குழந்தையை நான் கொல்ல போவதில்லை. உங்களிடமே விட்டுவிடுகிறேன். வசிஷ்ட முனிவரின் சாபத்தால்தான்
நான், 8 குழந்தைகளுக்கு தாயாகி விட்டேன். அதனால்தான் இந்த கொடுமையான செயலை
செய்தேன்’ என்று சொல்லி மறைந்து விட்டார். அந்த 8-வது குழந்தைதான் ‘பீஷ்மர்’. இவர்
சாந்தனு மன்னனுக்கும் கங்காதேவி என்ற தேவதைக்கும் பிறந்தவர்.
கங்காதேவி தன் குழந்தைகளை ஆற்றில்
போட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட வசிஷ்டரின் சாபம் தான் என்ன?
வசிஷ்ட முனிவர் காட்டில் தவத்தில் இருக்கிறார். அவருடைய
தேவைக்காக ஒரு பசுமாடு இருக்கிறது. அந்த பசுவின் பெயர் ‘நந்தினி’. இந்த பசு மிக
தெய்வீக அழகை கொண்டது. அப்போது, வசுதேவர்கள் அவர்களின் மனைவிகளுடன் அந்த காட்டில்
உள்ள மலைக்கு வருகிறார்கள்.
அதில், ஒரு வசுதேவரின் மனைவி இந்த நந்தினி பசுமீது ஆசை கொண்டு, அது
தனக்கே சொந்தமாக்கி கொள்ள வேண்டும் என்று அவளின் கணவனை கேட்கிறாள். அந்த பசுவின்
பாலை குடித்தால் தேவர்கள் ஆவார்கள். ஆனால் வசுதேவர்கள் ஏற்கனவே தேவர்களாக
இருப்பதால், அந்த பசு தேவையில்லை என்று அவள் கணவர் கூறினார். ஆனாலும் அதை கேட்காத
அந்த தேவதை அது தனக்கு வேண்டும் என அடம்பிடிக்கிறாள். வேறு வழியில்லாமல், வசிஷ்டர்
இல்லாத நேரத்தில் அந்த பசுவை பிடித்துக் கொண்டு தேவலோகம் சென்று விடுகின்றனர்.
வசிஷ்டர் பசுவை காணமல் தேடி, அவரின் ஞானதிருஷ்டியால் அந்த பசு தேவலோக
வசுதேவர்களிடம் இருப்பதை அறிந்து, கோபம் கொண்டு சாபமிடுகிறார். ‘இந்த வசுதேவர்கள்
எல்லோரும் மனிதர்களாக பிறக்க வேண்டும்’ என்று சாபம். இதை கேள்விப்பட்ட வசுதேவர்கள்,
வசிஷ்ட முனிவரை வணங்கி தவறுக்கு மன்னிப்பு கேட்டு, சாப விமோஷனம் கேட்டனர்.
அதன்படி, ‘என் பசுவை கடத்தி சென்ற வசுதேவர் மட்டும் மனிதனாக பிறந்து, வெகுகாலம்
இந்த மண்ணில் இருக்க வேண்டும். மற்ற வசுதேவர்கள், அவரவர் மனிதனாக பிறந்தவுடன்,
சாபம் நீக்கிவிடுவதால், அப்போதே இறந்து, பின்னர் தேவர்கள் ஆகிவிடலாம்’ என்று
சாபத்துக்கு பரிகாரம் வழங்கினார்.
அந்த சாபத்தை நிறைவேற்றவே அவர்கள் கங்காதேவி
என்ற தேவதையை கெஞ்சி கேட்டுக் கொண்டனர். அவளும் அதற்கு ஒப்புக் கொண்டார். அதன்படி
சாந்தனு மன்னனை கணவனாக்கி அவனுக்கு 8 குழந்தைகளை பெற்றாள். அதில் 7 குழந்தைகளை
கங்கையில் மூழ்கடித்தாள். 8-வது குழந்தையான ‘பீஷ்மரை’ மட்டும் மன்னனிடமே
விட்டுவிட்டு சென்றாள். வசிஷ்டர் சாபத்தின்படி பீஷ்மர் கடைசிவரை மனிதனாக உயிர்
வாழ்வார். (மனிதனாக பிறப்பதே சாபத்தின் வெளிப்பாடுதான் போல!).
No comments:
Post a Comment