Thursday, October 3, 2019

வைப்பாட்டி மகனுக்கு சொத்துரிமை



வீரப்பா  கவுண்டனும், சுந்தர கவுண்டனும் சகோதர்கள். இந்து கூட்டுக் குடும்பமாக வாழ்கிறார்கள். வீரப்ப கவுண்டன் 1866-ல் இறக்கிறார். அவருக்கு அம்மாச்சி என்று ஒரு வைப்பாட்டி உண்டு. அவளுக்கு மருதமுத்தா, பெரியண்ணன் என்று இரண்டு மகன்கள் வீரப்ப கவுண்டர் மூலம் பிறந்தவர்கள். வீரப்ப கவுண்டன் தம்பியான சுந்தர கவுண்டன் 1867-ல் இறக்கிறார். சுந்தர கவுண்டனுக்கு வீரம்மாள், மீனாட்சி என இரண்டு மனைவிகள்.
சுந்தர கவுண்டன் இறந்தபின்னர், அவரின் இரு மனைவிகளும், அவரின் சொத்துக்கள் சிலவற்றை அடமானம் வைத்து விடுகிறார்கள். ஆனால் வீரப்ப கவுண்டனின் வைப்பாட்டி மகன்களான மருதமுத்தா, பெரியண்ணன் இருவரும், இது பொதுக் குடும்பச் சொத்து என்றும், அதில் அவர்களுக்கும் பங்கு உண்டு என்றும் வாதம் செய்கிறார்கள்.
இந்தச் சொத்துக்கள் சுந்தர கவுண்டனின் சுய சம்பாத்திய சொத்தாக இருந்தால், அவர் இறப்புக்குப் பின்னர் அவரின் இரண்டு மனைவிகளுக்கும் அந்தச் சொத்துக்கள் போய்ச் சேரும் என்பதே அப்போதைய இந்து சாஸ்திரச் சட்டம்.
The only question, therefore, which it is and what interest, Virappa’s illegitimate sons have in the property in suit. வீரப்ப கவுண்டனின் வைப்பாட்டி மகனுக்கு இந்தச் சொத்தில் பங்கு உள்ளதா அல்லது இல்லையா என்பதே வழக்கின் கேள்வி.
இந்து மித்தாச்சரா சட்டப்படி, வைப்பாட்டி மகனுக்கு, தந்தையின் தனிச் சொத்தில் பங்கு உண்டு. இந்த வழக்கில் வீரப்ப கவுண்டன், கவுண்டர் ஜாதியைச் சேர்ந்தவர். இந்த ஜாதியில், வைப்பாட்டி மகனுக்கு, தந்தையின் தனிச் சொத்தில் பங்கு உண்டு என்பதே மித்தாச்சரா சட்டம் சொல்கிறது.
மித்தாக்சரா அத்தியாயம் 1, பிரிவு 12-ல் சமஸ்கிருத வார்த்தைகளில் இப்படிச் சொல்லப்பட்டுள்ளது. “தாசி & தாசி புத்திரன்” என்ற இரு வார்த்தைகளில் சொல்லபட்டுள்ளது. இதையே சரஸ்வதி விலாசா என்ற இந்து சட்டத்திலும் சொல்லப்பட்டுள்ளது.
தென் இந்தியாவில், பெண் அடிமைகள், பெண் அடிமைகளின் மகன்கள், இவர்களைப் பற்றி மித்தாச்சரா சட்டம் சொல்கிறது. வங்காளப் பகுதியில் நடைமுறையில் இருக்கும் இந்து தயாபாக சட்டத்திலும், “திருமணம் ஆகாத சூத்திரப் பெண்கள்” என்று சொல்லப்பட்டுள்ளது.
இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்து மித்தாக்சரா சட்டப்படி “வைப்பாட்டி” என்பவள் “தாசியா” என்ற கேள்வி எழுகிறது.
இந்து தயாபாக சட்டம் நடைமுறையில் உள்ள வங்காளப் பகுதியில், ஒரு வழக்கான கல்கத்தா ஐகோர்ட் வழக்கில் (Narain Dhara v. Rakhal Gain, ILR Cal. 1) தாசி என்பது அடிமை பெண் என்றும், தொடர்ந்து ஒருவனிடம் வைப்பாட்டியாக இருப்பவள் இல்லை என்றும் சொல்லி உள்ளது.
சமஸ்கிருத வார்த்தையில் வைப்பாட்டி என்பவளை “அவருதா” Avaraudda என்றே குறிப்பிடுகிறது. தாசி என்பவள், ஒரு பெண், அடிமையாக இருப்பவள் என்று சொல்கிறது. இப்படிப்பட்ட பெண் அடிமைகளை சட்டம் 5/1843 சட்டத்தின்படி பழைய இந்து சாஸ்திரச் சட்டத்திலிருந்து நீக்கி விட்டது.
அடிமைப் பெண் அல்லது தாசி என்ற வார்த்தைகளை இந்து நாரதா சாஸ்திரத்தில் எப்படி குறிப்பிடுகிறார்கள்? நாரதா குறிப்பிடுவது என்னவென்றால்:  ஆண், பெண், அடிமைகளை 15 வகையாகச் சொல்கிறார்கள்.
1)      கிரகதாசன் (அதாவது தாசி பெற்ற பிள்ளை),
2)      பணத்துக்குப் பெற்றவன்
3)      தானத்துக்கு கொடுத்தவன்.
4)      தாசன் வழிமுறையில் வந்தவன்.
5)      பஞ்ச காலத்தில் உணவு கொடுத்து அவனைப் பாதுகாத்ததால் பின்னர் தாசன் ஆனவன்.
6)      அடமானமாகப் பெற்றதால், தாசன் ஆனவன்.
7)      கடன் கொடுக்க முடியாமல் போனதால், தாசன் ஆனவன்.
8)      போரில் அடிமைப் படுத்தப்பட்டவன்.
9)      போட்டியில் வெல்லப்பட்டு அடிமைப்படுத்தப் பட்டவன்.
10)   தானே வலிய வந்து தாசன் ஆனவன்.
11)   முற்றும் துறந்து தாசன் ஆனவன்.
12)   ஒரு குறிப்பிட்ட காலம் வரை தாசனாக இருக்கு ஒப்புக் கொண்டவன்.
13)   பக்தியினால், தாசன் ஆனவன்.
14)   தன் மனைவிக்காக, மற்றொருவருக்கு தாசன் ஆனவன்.
15)   தானே தன்னை விற்றுக் கொண்டு தாசன் ஆனவன்.
இந்து மித்தாக்சரா சாஸ்திர சட்டமும் இந்த 15 வகையான அடிமைகளை ஒப்புக்கொள்கிறது. தத்த மீமாம்சா சாஸ்திரம் பிரிவு 4, 16-ல் இவ்வாறு சொல்லப்படுகிறது. “ஒரு பெண்ணை, அவளுக்கான விலையைக் கொடுத்து வாங்கி விட்டால், அவளுடன் உடலுறவு கொண்டு வாழ்ந்து வந்தால்,  அவளை அடிமை என்று சொல்லலாம். அவளுக்குப் பிறக்கும் குழந்தையை தாசி புத்திரன் என்றும் சொல்லலாம்.”
மேலும், ஒருனை அல்லது ஒருத்தியை, தலையை மொட்டை அடித்து ஏற்றுக் கொண்டால், அவன் அல்லது அவள் அடிமை என்று தத்த மீமாம்ச சாஸ்திரம் பிரிவு 4, 40-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல்ஜாதிப் பிரிவினரைப் பற்றிச் சொல்லும்போது பிகஸ்பதி பண்டிதர் குறிப்பிடுவது என்னவெ்ன்றால், திருமணம் ஆகாத சூத்திரப் பெண்ணுக்கு, ஒரு ஆண் மூலம் மகன் பிறந்தால், அந்த ஆணுக்கு வேறு வாரிசுகள் இல்லையென்றால், அவனின் சொத்துக்களை அந்த மகன் அடையலாம் என்று சொல்லியுள்ளது. மற்றொரு சாஸ்திர பண்டிதரான கௌதம பண்டிதரும் இதையே சொல்லி உள்ளார்.
காட்டாயனா பண்டிதரின் கூற்றுப்படி – “ஒரு அடிமைப் பெண்ணுடன் அவளின் எஜமான் உடலுறவு வைத்துக் கொண்டால், அதன் மூலம் அவளுக்குப் பிறக்கும் மகன், அந்த எஜமானின் சட்டபூர்வ மகன்கள். வளர்ப்பு மகன்கள் இவர்களுடன் சொத்துக்கு போட்டியிட முடியாது. ஆனால், ஒரு பெண்ணைத் தனித்து பல வருடங்களாக வைப்பாட்டியைப் போல வைத்துக் கொண்டிருந்து,  அவள் மூலம் மகன் பிறந்தால், அவன் தந்தையின் சொத்தில் பங்கு பெறலாம் என்று சொல்கிறது.
ஆக, அடிமையாக இருக்கும் பெண்ணுடன் உடலுறவு கொண்டு பிள்ளை பிறந்தால், அவனுக்கு தகப்பன் சொத்தில் பங்கு இல்லை. ஆனால், தனியே ஒருத்தியுடன், இவன் மட்டுமே உடலுறவு கொண்டு, அவள் மூலம் பெற்ற மகன் (அதாவது வைப்பாட்டியாக வைத்துக் கொண்டு அதன் மூலம் பெற்ற மகன்), தந்தையின் சொத்தில் பங்கு பெறுவான்.
மேலும், இந்து மித்தாச்சரா சாஸ்திர சட்டத்தில் சுலோகம் 288-ல் விவாகர காண்டத்தில், “அவருதா” & “பஞ்சியா” (Avarudda & Bunjya) என்று இருபிரிவு தாசிகளைப் பற்றிச் சொல்கிறது.
மேலும், ஸ்மிருதி சந்திரிகா சாஸ்திரத்தின் பண்டிதர், “இந்த கலியுகத்தில், எந்தத் திருமணம் செல்லாது என்று சொல்லும்போது, திருமணம் ஆகாத ஒரு சூத்திரப் பெண், ஒரு மேல்ஜாதி ஆணுடன் உடலுறவு கொண்டு, அதில் பெற்ற மகனுக்கு, தந்தையின் சொத்தில் பங்கு கேட்கும் உரிமை இல்லை என்று சொல்கிறது. மேல் ஜாதி என்பது இங்கு, பிராமணர், சத்திரியர், வைசியர், என்ற மூன்று பிரிவைச் சொல்வதாக மனு சாஸ்திரம் சொல்கிறது.
இது இவ்வாறு இருக்க –
இங்கு, தாசி என்பது அடிமை என்பது விளங்குகிறது. ஆனால் தொடர்ந்து தனியே ஒருவனுக்கு வைப்பாட்டியாக இருப்பவளைத் தாசி என்று சொல்லலாமா என்ற கேள்வி முன் வைக்கப்படுகிறது. Whether there is reason to hold upon the texts that an unmarried Sudra woman kept as a continuous concubine came within its scope of Dasi?
ஒருத்தியை அடிமையாக வைத்திருந்தால், அவளுக்குப் பிறக்கும் குழந்தை, தந்தையின் சொத்தில் பங்கு பெற முடியாது. ஆனால் ஒருத்தியை தொடர்ந்து தன் மனைவி போலவே நடத்தி வந்து, திருமணம் மட்டும் செய்து கொள்ளாமல், அவள் மூலம் குழந்தை பெற்றிருந்தால், அந்த குழந்தை, தன் தந்தையின் சொத்தில் பங்கு பெறலாம்.
இந்து மித்தாச்சரா சட்டம் என்ன தெளிவுபடுத்திகிறது என்றால், வைப்பாட்டியின் மகன், பூர்வீகச் சொத்தில், மற்ற சட்டபூர்வ மகன்களுடன் சரிசமமாகப் போட்டி போட்டு பங்கு பெற முடியாது. தந்தையின் பாகத்தில் மட்டுமே அவன் வைப்பாட்டி மகன் என்ற முறையில் (அதாவது அவரின் மகளின் மகன் பங்கு பெறுவதைப் போல) பங்கு பெற முடியும், அதுவும் அவன் சூத்திரப் பெண்ணுக்கும், சூத்திர ஆணுக்கும் பிறந்தவனாக இருக்க வேண்டும்.
இந்து கோபார்சனரி கூட்டுச் சொத்து என்பது சபிண்டா உறவுகளுக்கு மட்டுமே, அதுவும், சட்டபூர்வ திருமணம் மூலம் பிறந்த மகன்களில் மட்டுமே.
இந்த வழக்கில் உள்ள சொத்து வீரப்ப கவுண்டன் தம்பி சுந்தர கவுண்டன் சொத்து என்று சொல்லப்படுகிறது. அப்படி இருக்கும் போது, வீரப்ப கவுண்டனின் வைப்பாட்டியின் இரண்டு பிள்ளைகளும், சித்தப்பன் சொத்தில் பங்கு பெற இந்து கோபார்சனரி உரிமை உண்டா என்பதும் கேள்வியாகிறது.
தத்த சந்திரிகா சாஸ்திரம் பிரிவு 5, 22-ல் பழைய இந்து சாஸ்திரப்படி, மகன்கள் எத்தனை வகை என்று சொல்கிறது. அதாவது, சொத்து உரிமை பெறும் மகன்களின் வகைகள் சொல்லப் பட்டுள்ளது. அதில் சட்டபூர்வமற்ற மகன் ஒரு வகை. அவன் நேரடி வாரிசாக முடியாது என்றும், மகளின் மகனுடன் சேர்ந்தும் பங்கு பெறும் தகுதியும் இல்லை என்றும் சொல்கிறது. ஏனென்றால், சட்டபூர்வமற்ற மகன் என்பவன் சட்டபூர் திருமணத்தில் பிறந்தவர்களுடன் சேர்ந்து பங்கு பெற தகுதி உடையவன் அல்லன்.
எனவே வைப்பாட்டி மகன், அவனின் தந்தை சொத்தில் பங்கு பெறலாம். ஆனால், அவன் சித்தப்பா சொத்தில் பங்கு பெற உரிமை கிடையாது, ஏனென்றால், அவன் கோபார்சனர் இல்லை. சட்டபூர்வ திருமணத்தில் பிறந்தவர்களே கோபார்சர்கள் ஆவர் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறி, வைப்பாட்டி மகன்களுக்கு சித்தப்பன் சொத்தில் பங்கு இல்லை என்று சொல்லி விட்டது.
இந்த வழக்கு Krishnaayyan and others v. Muttusami, (1883) ILR 7 Mad 407 என்ற வழக்காகும். இதன் தீர்ப்பு Justice C.A.Turner Kt. & M.Muthusamy Ayyar ஆகிய ஐகோர்ட் நீதிபதிகள் 26 ஏப்ரல் 1883-ல் வழங்கி உள்ளனர்.
**

TRANSGENDER WOMAN LOST HER JOB


TRANSGENDER WOMAN LOST HER JOB
இன்றிலிருந்து சுமார் 58 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. அவன் பெயர் ஸ்டீபன்சன்ஸ். அவனுக்கு ஐந்து வயது ஆகும்போது, அவன் உடலில் ஏதோ மாற்றம் தெரிவதை உணர்கிறான். அவன் பெண்ணின் இயல்பை அடைகிறான். ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் ஆண் உடையில் ஆணாகவே வாழ்கிறான். படிக்கிறான். வயது வந்தவுடன் ஒரு பெண்ணையும் திருமணம் செய்து கொள்கிறான். அவனுக்கு அரசாங்க வேலையும் கிடைக்கிறது. இடுகாட்டின் நிர்வாக அதிகாரி வேலையைப் பார்க்கிறான்.
வாழ்க்கை இப்படியே ஒடுகிறது. ஆனால் அவனின் பெண்மைத் தன்மை தலைதூக்கி நிற்கிறது. வேலையில் ஆண் உடையில் வேலை பார்ப்பான். வீட்டுக்கு வந்ததும் பெண் உடைக்கு மாறிக் கொள்வான். கடைகளுக்குச் செல்லும் போதும் பெண் உடைதான். அதுவே அவனுக்கு மனதுக்குப் பிடித்து விட்டது.
ஆக அவன் வாழ்வில் இரண்டு வேடங்களில் வலம் வரவேண்டிய கட்டாயமாகிறது. வெளி உலகத்துக்கு ஆணாகவும், அவன் உள் உலக வீட்டில் பெண்ணாகவும் வாழ்கிறான். இது அவனுக்கு மனச் சோர்வைக் கொடுக்கிறது. ஒருநாள், முழுவதும் மனம் உடைந்த நிலையில் தற்கொலைக்கும் முயன்று, துப்பாக்கியை தன் நெஞ்சில் வைக்கிறான். ஆனாலும், அவன் அவன் என்ற அவளை விரும்புவதால், தன்னைத்தானே சுட்டுக் கொள்ளவில்லை.
2013-ல் அவன் மனம் ஒரு தெளிவு பெறுகிறது. ஏன், நான் இதை வெளி உலகுக்கும் தெரிவிக்கக் கூடாது என்று நினைக்கிறான். நண்பர்களை கலந்து ஆலோசிக்கிறான். சரி என்ற முடிவுக்கு வருகிறான். தன் மேலதிகாரிக்கு கடிதம் எழுதுகிறான். நான் ஒரு ட்ரான்ஸ்ஜென்டர் Transgender என்று. ஆணாக இருந்தாலும் நான் ஒரு பெண் தன்மை கொண்டவன். எனவே நான் என்னைப் பெண்ணாகவே கருதுகிறேன். எனவே இனி நான் அலுவலகம் வரும்போது, பெண் உடையில் வரவே விரும்புகிறேன். எனக்கு பெண் அலுவலகச் சீருடை வழங்க வேண்டும் என்று கேட்கிறான்.
மேலதிகாரி, இதற்குப் பதிலாக, “இது சாத்தியப்படாது. எனவே நீங்கள் வேலையை விட்டு நின்று விடுங்கள். மூன்று மாதச் சம்பளம் வாங்கிக் கொள்ளுங்கள்” என்று பதில். அவன் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அதனால், மேலதிகாரி, அவனை வேலையை விட்டுத் தூக்கி விடுகிறார்.
அவனும் விடுவதாக இல்லை. மாவட்ட கோர்ட்டில் வழக்குப் போடுகிறான். அரசாங்க வேலையில் ஆண், பெண் என்ற வித்தியாசம் பார்க்கக் கூடாது என்பதே அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டம். அப்படி இருக்கும்போது, என்னை ஆண்-பெண் வித்தியாசம் பார்த்து வேலையில் இருந்து நீக்கியது செல்லாது என்று வழக்குப் போடுகிறான். ஆனால் மாவட்ட கோர்ட்டின் தீர்ப்பு அவனுக்குச் சாதகமாக இல்லை. “ஆண்-பெண் வித்தியாசம் பார்க்கக் கூடாதுதான். ஆனால் அது பிறப்பால் ஆண்-பெண் வித்தியாசம் பார்க்கக் கூடாது என்றே எடுத்துக் கொள்ளவேண்டும். டிரான்ஸ்ஜென்டர் என்னும் ஆண், பெண்ணாக மாறியவருக்கு பொருந்தாது” என்று தீர்ப்புச் சொல்லிவிட்டது.
இந்த மாவட்ட கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து 2018-ல் பெடரல் கோர்ட்டுக்கு அப்பீல் செய்கிறார். பெடரல் கோர்ட், இவரின் அப்பீல் வழக்கை ஏற்றுக் கொள்கிறது. “அமெரிக்க அரசியலைப்புச் சட்டத்தின் படி, ஆண்-பெண் வித்தியாசம் என்பதை உத்தியோகத்தில் பார்க்க முடியாது” என்று தீர்ப்பு வழங்கி விட்டது.
ஆனாலும், இந்த தீர்ப்பை எதிர்த்து மேலதிகாரி, அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு அப்பீல் செய்திருக்கிறார். அந்த அப்பீல் வழக்கு இன்னும் சில வாரங்களில் விசாரனைக்கு வரும் என எதிர்பார்க்கிறார்.
அமெரிக்க அரசின் தற்போதைய நிலைப்பாடு என்னவென்றால், பிறப்பால் ஆண்-பெண் என்ற வித்தியாசத்தை வேலையில் பார்க்கக் கூடாது. ஆனால், டிரான்ஸ்ஜென்டர் என்னும் ஆண்-பெண்ணாக மாறுவதை இதில் சேர்க்க முடியாது என்று கூறுகிறது.
Federal law barring discrimination on the basis of sex only applies to biological sex, not sexual identity or orientation.
ஆனால், இந்த ஸ்டீபன்ஸ் நிலைப்பாடு என்னவென்றால், உலகின் எல்லா மனித இனமும் ஒரே உரிமையைப் பெற வேண்டும் என்பதே. அமெரிக்க சுதந்திரம் அடைந்தபோது, அதன் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ எல்லாவித பாதுகாப்பையும் வழங்கும் என்றே கூறியுள்ளது என்று சொல்கிறார்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா அவர்கள், டிரான்ஸ்ஜென்டர் வீரர்களை அமெரிக்க படைகளுக்கு சேர்த்துக் கொண்டது.
இப்போது வழக்கு அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மொத்தம் ஒன்பது நீதிபதிகள் இருப்பர். அதில் தற்போது ஐந்து நீதிபதிகள் பழைமைவாதம் கொண்டவர்கள் என்று கருதுகிறார்கள். எனவே தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை.
“நான் நானாக இருப்பதில் அவர்களுக்கு என்ன இடைஞ்சல்” என்று புலம்புகிறார்.
**

Friday, September 6, 2019

சந்திராயன்-2


Chandrayaan 2
சந்திராயன்-2-ன் சிறப்பு
நிலவில் வாழ முடியுமா என்பதே கேள்வி. ஆம் முடியும் என்று முயற்சித்துள்ளனர். முதன்முதலில் நிலவில் இறங்கியது “சர்வேயர் 7”. இது அமெரிக்காவின் நாசாவின் தயாரிப்பு. இது 1968 ஜனவரி 10-ம் தேதி இறங்கியது.
பொதுவாக எல்லா விண்கலங்களுமே நிலவின் மத்தியப் பகுதியிலேயே இறங்கி உள்ளது. ஏனென்றால் அதுவே பாதுகாப்பானது என்பதால். நிலவின் வட கோள் அல்லது தென்கோள் எனச் சொல்லப்படும் பகுதியில் விண்கலங்களை இதுவரை இறக்கிப் பார்க்கவில்லை. இந்தப் பகுதி மிகவும் குளிர் நிறைந்த பகுதி என்பதால. இங்கு சுமார் மைனஸ் 230 டிகிரி செல்சியஸ்க்கும் கீழே குளிர் இருக்குமாம். இங்கு ஒரு பொருளைப் போட்டால், போட்ட வினாடியே விரைத்துவிடும். சூரியனின் வெப்பமோ வெளிச்சமோ இங்கு பார்க்கவே முடியாதாம். மேலும் பெரிய பள்ளத்தாக்குகள் நிறைந்த பகுதியாம். எனவே இங்கு விண்கலங்களை இறக்குவது என்பது சிம்ம சொப்பனம். அதற்குறிய சூரிய வெளிச்சம் கிடைக்காமல் மின்கலங்கள் வேலை செய்யாது. தொலைத் தொடர்பும் துண்டிக்கபடும் அபாயமும் உள்ளது.
ஆனாலும் துணிந்து இந்தியாவின் சந்திராயன் நிலவின் தென்பகுதியில் இறங்கி உள்ளது. நிலவின் மத்தியில் இருக்கும் நடுக்கோட்டிலிருந்து தெற்கே 70 டிகிரி தள்ளி இறங்கி உள்ளது. இதுவரை எந்த நாடும் இவ்வளவு தென்பகுதியில் இறக்கிதில்லையாம். இதுவே ஒரு ஆச்சரியமான வெற்றி தானாம்.
இதுவரை மொத்தம் 28 முறை விண்கலங்கள் நிலவில் இறங்கி உள்ளன. 29-வது விண்கலமாக இந்தியாவின் சந்திராயன்-2 என்ற விண்கலம் நிலவில் இறங்கி இருப்பது, அதுவும் தென்கோடியில் குளிர் நிறைந்த, வெளிச்சமே இல்லாத பகுதியில் இறங்கி இருப்பது அல்லது இறக்கி இருப்பது ஒரு சவாலான செயல்தானாம்.
சைனா நாடு சேன்ஸ்-4 என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. அது நிலவின் மத்தியக் கோட்டிலிருந்து தெற்கே 45 டிகிரியில் இறக்கியது. ஆனால் இந்தியாவின் சந்திராயன்-2 தெற்கே 70 டிகிரியில் இறங்கி சாதனை படைத்துள்ளதாம்.
இங்கிருந்து அதாவது பூமியில் இருந்து சுமார் 100,000 (நூறாயிரம்) மைல்கள் தொலைவில் நிலவு உள்ளது. செவ்வாய் கிரகமோ, இங்கிருந்து 100 மில்லியன் மைல்களுக்கு அப்பால் உள்ளது. புளுட்டோ கிரகமோ ஒரு பில்லியன் மைல்களுக்கு அப்பால் உள்ளது.
அமெரிக்காவின் நாசா மையம், 1997-ல் பாத்பைன்டர் என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது. அதைத் தொடர்ந்து அது, இரட்டை விண்கலங்களையும் பின்னர் 2004-ல் அனுப்பியது. ஸ்பிரிட், ஆப்பர்சுனிட்டி. அதைத் தொடர்ந்து 2007-ல் போனிக்ஸ் என்ற விண்கலத்தை அனுப்பியது. அதைத் தொடர்ந்து 2012-ல் க்யூரியாசிட்டி என்ற விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்பியது.
இந்த விண்கலங்கள், நம்மூர் விமானத்தை விட 10 மடங்கு வேகத்தில் செல்லக்கூடியதாம். அவை மீண்டும் திரும்பி பூமிக்கு வரும்போது, வந்த அதே வேகத்தில், தன்னை நிறுத்திக் கொண்டு, ஆடாமல் அசையாமல் பூமியில் பூப்போல இறங்க வேண்டுமாம். இவை அனைத்தும் மனிதனின் துணை இல்லாமல் கம்யூட்டர் உத்தரவுக்கு கீழ்படிந்து இயங்க வேண்டுமாம். கரணம் தப்பினால் மரணம் என்பது போன்ற விளையாட்டுத்தான் இது.
இவ்வளவும் ஏதற்காக என்ற கேள்வி எழத்தான் செய்யும். மனிதன் தன்னை மேம்படுத்திக் கொள்ள நினைக்கிறான். இருக்கும் இடத்திலேயே, யார் வம்பு தும்புக்கும் போகாமல் வாழ்ந்தும் விடலாம். வாழ்க்கையையே ஒரு போராட்டமாக வாழவும் செய்யலாம். நிலவில் குடித்தனம் போகப் போகிறானாம் மனிதன். தேவையே கண்டுபிடிப்புகளுக்கு தந்தை.
நிலவில் வாழ்வதற்கு நீர் வேண்டும். நிலவில் நீர் இருக்கிறதா இல்லையா, கிடைக்குமா, கிடைக்காதா? இந்த கேள்விக்குப் பதில் தெரிய வேண்டும். நீர் இருந்தால், ஆக்‌சிஜனை உருவாக்கிவிடலாம். உயிர் காத்தும் நீரும் இருந்தால் போதுமே! மனிதன் வாழ்ந்து விடலாமே.
இறைவன் பூமியில் மனிதனைப் பிறக்க வைக்கிறான். அவனோ, மற்றொரு கிரகத்தில் வாழ நினைக்கிறான்.
நிலவுக்குச் செல்லும் விண்கலத்தைக் கண்டுபிடித்தான். இது மூன்று நாட்களில் நிலவை அடையும். மூன்றுநாள் பயணம்தான். ஆனால் செவ்வாய் கிரகத்துக்குச் செல்ல வேண்டும் என்றால் சுற்றி சுற்றிச் செல்ல வேண்டுமாம். நிலவின் தூரத்தை விட 1000 மடங்கு தூரம் உடையது. செவ்வாய் கிரகத்துக்குச் செல்ல சுமார் ஒரு ஆண்டு தேவைப்படுமாம்.
எனவே நிலவில் வாழும் ஆசை அவனை விடவில்லை. சோதனையில் வெற்றியும் பெற்று விட்டான். இனி நிலவிலும் மனிதன் வாழ்வான்.
**

Monday, August 19, 2019

வேதத்தின் சுருக்கம்


வேதத்தின் சுருக்கம்:



மாதவன் பேர் சொன்னாலே அது வேதத்தின் சுருக்கம்தான் என்கிறார் பூதத்தாழ்வார்; ஒத்து என்றால் வேதம் என்று பொருள்.



“ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே, உத்தமன்பேர்

எத்தும் திறம் அறிமின் ஏழைகாள், ஒத்து அதனை

எல்லீரேல் நன்று, அதை மாட்டீரேல் மாதவன் பேர்

சொல்லுவதே ஒத்தின் சுருக்கு.”



(வேதத்தின் அர்த்தமும் முடிவும் இவ்வளவுதான். அது உத்தமமான திருமாலின் பெயரை ஏற்றமாகச் சொல்கிறது. ஏழைகளே, வேதத்தைப் படிக்க முடிந்தால் நல்லது. இல்லையென்றாலும் பரவாயில்லை. மாதவன் பேர் சொன்னால் போதும், அதுதான் வேதத்தின் சுருக்கம்.)

**

ஒருவனையே நோக்கும் உணர்வு


ஒருவனையே நோக்கும் உணர்வு

பொய்கையாழ்வாரின் பாடல்



“பெயரும் கருங்கடலே நோக்குமாறு, ஒண்பூ

உயரும் கதிரவனே நோக்கும், உயிரும்

தருமனையே நோக்கும், ஒண் தாமரையாள் கேள்வன்

ஒருவனையே நோக்கும் உணர்வு.”



நதியும் கடலையே நோக்கும்.

தாமரைப்பூவும் சூரியனையே நோக்கும்.

உயிரும் எமனை நோக்கியே செல்லும்.

உணர்வு மட்டும் தாமரையில் விற்றிருப்பவளின் கணவனான நாராயணன் ஒருவனையே சென்றடையும்.

சிவனும் விஷ்ணுவும் ஒன்றே!


சிவனும் விஷ்ணுவும் ஒன்றே!



பொய்கையாழ்வார், சிவனும் விஷ்ணுவும் ஒன்றே என்று ஒரு பாடல் பாடியுள்ளார்.


“அரன் நாரணன் நாமம், ஆன்விடை புள் ஊர்தி,

உரைநூல் மறை, உறையும் கோயில் வரை நீர்,

கருமம் அழிப்பு அளிப்பு, கையது வேல் நேமி,

உருவம் எரி கார், மேனி ஒன்று.”



பெயர் – பரமசிவன், நாராயணன்.

வாகனம் – எருது, கருடன்.

பெருமை சொல்லும் நூல்கள் – ஆகமம், வேதம்.

இருக்கும் இடம் – கையாலயமலை, பாற்கடல்.

தொழில் – அழித்தல், காத்தல்.

ஆயுதம் – வேல், சக்கரம்.

உருவம் – நெருப்பின் சிவப்பு, மேகத்தின் கருப்பு.

உடல் – ஒன்றே!

**


Sunday, May 26, 2019

தத்துக் குழந்தை

Adoption by Christian

குழந்தை இல்லாத ஒரு கிறிஸ்தவ தம்பதி, ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்கிறார்கள். அந்தக் குழந்தை, ஒரு மைனர் பெண்ணுக்குப் பிறந்த குழந்தையாம். யாரோ ஒருவன் அந்த மைனர் பெண்ணைக் கற்பழித்து அதனால் அவளுக்கு குழந்தை உண்டானதாம். எனவே இந்த கிறிஸ்தவ தம்பதி, அவளுடன் பேசி, அவளின் குழந்தையை அது பிறந்தவுடனேயே தத்து எடுத்துக் கொண்டுள்ளனர்.

ஆனால், ஜர்கண்ட் மாநில போலீஸார், குழந்தை கடத்தல்கள் பற்றி விசாரித்து வருகின்றனர். ராண்சியில் உள்ள ஒரு மிஷனரி இப்படி குழந்தைகளை விற்றுக் கொண்டிருப்பதாக குற்றச் சாட்டு உள்ளதாம். எனவே போலீஸ் விசாரனையில், இந்த கிறிஸ்தவ தம்பதிகளின் தத்து குழந்தையையும் விசாரனைக்கு உட்படுத்துகின்றனர். ஆனால் இந்த கிறிஸ்தவ தம்பதி, தாங்கள் நேரடியாகவே, அந்த மைனர் பெண்ணிடம் கேட்டு வாங்கி வளர்க்கும் குழந்தை என்றும், விலைக்கு வாங்கவில்லை என்றும், அந்த குழந்தைக்கு Baptism என்னும் ஞானஸ்தானமும் செய்து விட்டோம் என்றும் போலீஸில் கூறுகின்றனர்.

குழந்தையை தத்து எடுத்து வளர்க்க வேண்டும் என்றால், Juvenile Justice (Care and Protection of Children) Act, 2015 (called as JJ Act) என்ற சட்டப்படிதான் ஒரு குழந்தையை தத்து எடுக்க முடியும் என்றும், இப்படி தானாகவே பெற்றவர்களிடமிருந்து ஒரு குழந்தையை தத்து எடுக்க முடியாது என்றும் அந்தச் சட்டம் சொல்கிறது.  

இந்துக்களில் இப்படி  ஒரு குழந்தையை தத்து எடுக்க வேண்டும் என்றால், Hindu Adoption and Maintenance Act, 1956 சட்டத்தின்படி, அந்த குழந்தையைப் பெற்றவர்களிடமே நேரடியாக, தத்து எடுக்கும் பெற்றோர் பெற்று வளர்த்துக் கொள்ளலாம் என்று உள்ளது. அப்படி இந்துக்கள் மட்டும் குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளும் போது, இந்த JJ Act சட்டத்தின் படி நடந்து கொள்ளத் தேவையில்லை என்றும் அந்த ஜேஜே சட்டத்தில் சொல்லப் பட்டுள்ளது.

எனவே, இந்த கிறிஸ்தவ தம்பதிகள், தங்களுக்கும், இந்துக்களைப் போல அந்த உரிமை வேண்டும் என்றும், நாங்கள் எடுத்து வளர்க்கும் இந்த குழந்தை எங்களின் தத்துக் குழந்தைதான் என்று சட்டபூர்வ அங்கீகாரம் வேண்டும் என்றும், மதங்களை வைத்து இப்படி பிரித்துப் பார்க்க கூடாது என்றும், அது அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரான செயல் என்றும் கூறி, ஜர்கண்ட் மாநில ஐகோர்ட்டில் வழக்குப் போடுகிறார்கள்.

மேலும், அந்த ஜே ஜே சட்டப்படி, இது ஒன்றும் அனாதை குழந்தை இல்லை என்றும், எனவே அந்தச் சட்டம் இதற்கு செல்லாது என்றும் வாதம் செய்தனர். எனவே எங்களின் தத்துக் குழந்தையை Child Welfare Committee எடுத்துக் கொண்டு போன செயல் சட்டபூர்மானது அல்ல என்றும் வாதம் செய்கிறார்கள்.

பொதுவாக, ஒரு குழந்தையை யார் பராமரிக்க வேண்டும் என்ற பிரச்சனை வரும்போது, அந்த குழந்தையின் நன்மையை கருதியே கோர்ட் முடிவு எடுக்க வேண்டும் என்றும் இதுவரை உள்ள கோர்ட்டு தீர்ப்புகளும், சட்டங்களும் சொல்லி வருகின்றன. இந்த வழக்கில், அந்தக் குழந்தையானது வளர்ப்புப் பெற்றோரிடம் மிகுந்த பாதுகாப்பிலேயே இருந்து வருகிறது. இதை எடுத்துக் கொண்டு போய் வேறு ஒரு சூழலில் வளர விடுவது என்பது அந்தக் குழந்தையின் நலனுக்கு உகந்தது இல்லை. மேலும் ஜே ஜே சட்டம் பிரிவு 3-ல் குழந்தைகளின் பாதுகாப்பும் அரவணைப்பும் என்ற சட்டப் பிரிவுக்கு எதிரானதாகவே உள்ளது.

மேலும், குழந்தைகளை தத்து எடுப்பதற்கே என்றே ஒரு வரைமுறை சட்டமும் உள்ளது. அதன்படி அந்த குழந்தையை தத்து எடுப்பதாக மாவட்ட கோர்ட்டில் மனுச் செய்து, பெற வேண்டும். அதற்கு அவர்கள், இது போன்ற ஏஜெண்சி நிறுவனத்திடம் முன் பதிவு செய்து கொள்ள வேண்டும். சீனியாரிட்டி முறையில் குழந்தையை தத்து எடுக்கலாம். இந்த முறைப்படி, நாம் விரும்பும் குழந்தையை தத்து எடுக்க முடியாமல் போய்விடும். இந்த சட்டம் பிரிவு 38-ன்படி, அப்படி ஒரு குழந்தையை தத்து கொடுக்கும் நிலையில் உள்ளதாக அந்த ஏஜெண்சி பதிவு செய்து அறிவிக்கும். அதன்பின், அதை வளர்க்க நினைக்கும் வளர்ப்பு பெற்றோர், அந்த ஏஜெண்சியை அணுக வேண்டும். அதுவும் சீனியாரிட்டி முறைப்படியே வரும். அவர்கள் தகுதி உடைய பெற்றோர்கள் தானா என்று பலநாள் விசாரனைக்குப் பின்னரே அதை தத்து எடுக்க கோர்ட்டுக்கு மனு போட முடியும்.

எனவே இந்த வழக்கில் இப்போதைக்கு அந்த குழந்தையை அவர்கள் பொறுப்பில் வைத்து வளர்த்து வரலாம் என்றும், பின்னர் முறைப்படி தத்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் இடைக்காலத் தீர்ப்பு கூறியுள்ளது.

**

Thursday, January 10, 2019

Operation Success, but patient dead.


Operation Success, but patient is dead.

“ஆப்பரேஷன் வெற்றிகரமாக முடிந்தது, ஆனால் நோயாளி இறந்து விட்டார்.” இதை ஒரு பழமொழியாகவே இப்போது சொல்கிறார்கள். பலன் கிடைக்காத வேலையை இப்படி குறிப்பிடுகிறார்கள்.

இந்தப் பழமொழி எப்படி உலக மக்களிடையே பிரபலமானது என்பதும் ஒரு சுவாரசியமே!

1829-ம் வருடம் ஆகஸ்டு மாதம் அமெரிக்காவின் ஒரு மாநிலமான ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள ஒரு மாலை நேரப் பத்திரிக்கையில் “ஆப்பரேஷன் வெற்றிகரமாக முடிந்தது” என்று ஒரு செய்தி வருகிறது. Dr. Liston என்பவர் ஒரு நோயாளிக்கு இடுப்பு தொடை இணைப்பு எலும்பு கழற்று விட்டது என்று ஆப்பரேஷன் செய்கிறார்.  ஆப்பரேஷன் வெற்றிகரமாக முடிந்து விட்டது. செய்தித்தாளில் அதை “ஆப்பரேஷன் வெற்றிகரமாக முடிந்தது” என்று போடுகிறார்கள். ஆனால் அந்த நோயாளிக்கு வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு அன்றே இறந்து விடுகிறார்.

இந்த விபரம் வெளியில் தெரிந்தவுடன், எல்லோரும் கேலியாக “ஆப்பரேஷன் சக்சஸ், பேஷண்ட் டைட்டு” என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

அன்று முதல் இது உலக வழக்கமாகியும் விட்டதாம்.

**