Sunday, May 26, 2019

தத்துக் குழந்தை

Adoption by Christian

குழந்தை இல்லாத ஒரு கிறிஸ்தவ தம்பதி, ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்கிறார்கள். அந்தக் குழந்தை, ஒரு மைனர் பெண்ணுக்குப் பிறந்த குழந்தையாம். யாரோ ஒருவன் அந்த மைனர் பெண்ணைக் கற்பழித்து அதனால் அவளுக்கு குழந்தை உண்டானதாம். எனவே இந்த கிறிஸ்தவ தம்பதி, அவளுடன் பேசி, அவளின் குழந்தையை அது பிறந்தவுடனேயே தத்து எடுத்துக் கொண்டுள்ளனர்.

ஆனால், ஜர்கண்ட் மாநில போலீஸார், குழந்தை கடத்தல்கள் பற்றி விசாரித்து வருகின்றனர். ராண்சியில் உள்ள ஒரு மிஷனரி இப்படி குழந்தைகளை விற்றுக் கொண்டிருப்பதாக குற்றச் சாட்டு உள்ளதாம். எனவே போலீஸ் விசாரனையில், இந்த கிறிஸ்தவ தம்பதிகளின் தத்து குழந்தையையும் விசாரனைக்கு உட்படுத்துகின்றனர். ஆனால் இந்த கிறிஸ்தவ தம்பதி, தாங்கள் நேரடியாகவே, அந்த மைனர் பெண்ணிடம் கேட்டு வாங்கி வளர்க்கும் குழந்தை என்றும், விலைக்கு வாங்கவில்லை என்றும், அந்த குழந்தைக்கு Baptism என்னும் ஞானஸ்தானமும் செய்து விட்டோம் என்றும் போலீஸில் கூறுகின்றனர்.

குழந்தையை தத்து எடுத்து வளர்க்க வேண்டும் என்றால், Juvenile Justice (Care and Protection of Children) Act, 2015 (called as JJ Act) என்ற சட்டப்படிதான் ஒரு குழந்தையை தத்து எடுக்க முடியும் என்றும், இப்படி தானாகவே பெற்றவர்களிடமிருந்து ஒரு குழந்தையை தத்து எடுக்க முடியாது என்றும் அந்தச் சட்டம் சொல்கிறது.  

இந்துக்களில் இப்படி  ஒரு குழந்தையை தத்து எடுக்க வேண்டும் என்றால், Hindu Adoption and Maintenance Act, 1956 சட்டத்தின்படி, அந்த குழந்தையைப் பெற்றவர்களிடமே நேரடியாக, தத்து எடுக்கும் பெற்றோர் பெற்று வளர்த்துக் கொள்ளலாம் என்று உள்ளது. அப்படி இந்துக்கள் மட்டும் குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளும் போது, இந்த JJ Act சட்டத்தின் படி நடந்து கொள்ளத் தேவையில்லை என்றும் அந்த ஜேஜே சட்டத்தில் சொல்லப் பட்டுள்ளது.

எனவே, இந்த கிறிஸ்தவ தம்பதிகள், தங்களுக்கும், இந்துக்களைப் போல அந்த உரிமை வேண்டும் என்றும், நாங்கள் எடுத்து வளர்க்கும் இந்த குழந்தை எங்களின் தத்துக் குழந்தைதான் என்று சட்டபூர்வ அங்கீகாரம் வேண்டும் என்றும், மதங்களை வைத்து இப்படி பிரித்துப் பார்க்க கூடாது என்றும், அது அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரான செயல் என்றும் கூறி, ஜர்கண்ட் மாநில ஐகோர்ட்டில் வழக்குப் போடுகிறார்கள்.

மேலும், அந்த ஜே ஜே சட்டப்படி, இது ஒன்றும் அனாதை குழந்தை இல்லை என்றும், எனவே அந்தச் சட்டம் இதற்கு செல்லாது என்றும் வாதம் செய்தனர். எனவே எங்களின் தத்துக் குழந்தையை Child Welfare Committee எடுத்துக் கொண்டு போன செயல் சட்டபூர்மானது அல்ல என்றும் வாதம் செய்கிறார்கள்.

பொதுவாக, ஒரு குழந்தையை யார் பராமரிக்க வேண்டும் என்ற பிரச்சனை வரும்போது, அந்த குழந்தையின் நன்மையை கருதியே கோர்ட் முடிவு எடுக்க வேண்டும் என்றும் இதுவரை உள்ள கோர்ட்டு தீர்ப்புகளும், சட்டங்களும் சொல்லி வருகின்றன. இந்த வழக்கில், அந்தக் குழந்தையானது வளர்ப்புப் பெற்றோரிடம் மிகுந்த பாதுகாப்பிலேயே இருந்து வருகிறது. இதை எடுத்துக் கொண்டு போய் வேறு ஒரு சூழலில் வளர விடுவது என்பது அந்தக் குழந்தையின் நலனுக்கு உகந்தது இல்லை. மேலும் ஜே ஜே சட்டம் பிரிவு 3-ல் குழந்தைகளின் பாதுகாப்பும் அரவணைப்பும் என்ற சட்டப் பிரிவுக்கு எதிரானதாகவே உள்ளது.

மேலும், குழந்தைகளை தத்து எடுப்பதற்கே என்றே ஒரு வரைமுறை சட்டமும் உள்ளது. அதன்படி அந்த குழந்தையை தத்து எடுப்பதாக மாவட்ட கோர்ட்டில் மனுச் செய்து, பெற வேண்டும். அதற்கு அவர்கள், இது போன்ற ஏஜெண்சி நிறுவனத்திடம் முன் பதிவு செய்து கொள்ள வேண்டும். சீனியாரிட்டி முறையில் குழந்தையை தத்து எடுக்கலாம். இந்த முறைப்படி, நாம் விரும்பும் குழந்தையை தத்து எடுக்க முடியாமல் போய்விடும். இந்த சட்டம் பிரிவு 38-ன்படி, அப்படி ஒரு குழந்தையை தத்து கொடுக்கும் நிலையில் உள்ளதாக அந்த ஏஜெண்சி பதிவு செய்து அறிவிக்கும். அதன்பின், அதை வளர்க்க நினைக்கும் வளர்ப்பு பெற்றோர், அந்த ஏஜெண்சியை அணுக வேண்டும். அதுவும் சீனியாரிட்டி முறைப்படியே வரும். அவர்கள் தகுதி உடைய பெற்றோர்கள் தானா என்று பலநாள் விசாரனைக்குப் பின்னரே அதை தத்து எடுக்க கோர்ட்டுக்கு மனு போட முடியும்.

எனவே இந்த வழக்கில் இப்போதைக்கு அந்த குழந்தையை அவர்கள் பொறுப்பில் வைத்து வளர்த்து வரலாம் என்றும், பின்னர் முறைப்படி தத்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் இடைக்காலத் தீர்ப்பு கூறியுள்ளது.

**

No comments:

Post a Comment