கடைச்சங்கப் புலவர் நக்கீரர்; இவர் ஒருநாள் தீர்த்த யாத்திரைக்குப்
புறப்பட்டார்; ஒரு குளத்தில் நீராடிவிட்டு அதன் கரையோரத்தில்
உள்ள அரச மரத்தில் தங்கி இளைப்பாறினார்; பின்னர் சிவ வழிபாடு
செய்யத் தொடங்கினார்; அந்த நேரத்தில் அந்த மரத்திலிருந்து ஒரு
அரச இலை கீழே விழுந்தது;
அந்த இலை அவ்வாறு விழுந்தவுடன், குளத்து நீரில் இருந்து
மீன் ஒன்று அந்த இலையின் ஒரு முனையைப் பிடித்து இழுத்தது; தரையில்
நின்று கொண்டிருந்த ஒரு பறவை, அந்த இலையின் மறுபகுதியைப் பிடித்து
இழுத்தது; மீன் அந்த இலையை நீருக்குள் இழுக்கிறது, பறவை அதே
இலையை தரைக்கு இழுக்கிறது; இது தொடர்கிறது;
இதைப் பார்த்த நக்கீரருக்கு வியப்பாக இருந்தது; இதனால் அவரின் சிவ வழிபாட்டுக்குத்
தடை ஏற்பட்டது:
இந்த அரச மரத்தின் அடியில்தான், சிவ வழிபாட்டில் தவறு செய்தவர்களை
ஒரு பூதம் பிடித்துச் சென்று அங்குள்ள குகையில் சிறை வைத்துவிடும்;
இப்போது,
நக்கீரரின் சிவ வழிபாடும் தடைபட்டு விட்டதால், அந்த பூதம் வந்து, நக்கீரரையும் பிடித்துக் கொண்டுபோய்
அந்த குகைக்குள் சிறை வைத்துவிட்டது;
அந்த சிறையில் இதுவரை 999 பேர் உள்ளனர்; நக்கீரருடன் சேர்த்து ஆயிரம்
பேர் ஆகிவிட்டது; ஆயிரம் பேர்கள் சேர்ந்தவுடன் அந்த கரிய பேய்
அவர்களை விழுங்கி விடுமாம்! எனவே இப்போது ஆயிரம் பேர் சேர்ந்து விட்டனர்; எனவே இவர்களை குகைக்குள் அடைத்துவிட்டு, நீராடப் போய்விட்டது
அந்தப் பேய்;
உள்ளே இருந்த மற்றவர்கள், நக்கீரரைப் பார்த்து, "உங்களால்தான், நாங்கள் அந்தப் பேய்க்கு இன்று இரையாகப்
போகிறோம்; நீங்கள் வராவிட்டால், அந்த ஆயிரமாவது
ஆளுக்காக, அந்தப் பேய் தேடிக் கொண்டிருக்கும்; எங்கள் உயிரும் தாமதப் பட்டிருக்கும்" என்று கோபப்பட்டார்கள்;
சிவனின் அடியார்கள் இப்படிச் சிறையில் இருப்பது தகுமா? சிவ அடியார்களைக் காக்க
நக்கீரர் முடிவெடுத்து, "முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்போன்
அல்லவா நம் குருநாதன்" என்று நெஞ்சுருகப் பாடினார் திருமுருகாற்றுப்படையை;
பாமாலைக்கு வசப்படுவான் நம் பச்சை மயில் ஏறிவரும் பாலன் என்று
பரவசமடைந்தார்;
நக்கீரரின்,
திருமுருகாற்றுப்படையின் பாமாலையைக் கேட்ட முருகன் தன் வேலாயுத்தை எடுத்து
அந்த கரிய பூதத்தைக் கொன்று, நக்கீரர் உட்பட ஆயிரம் பேரையும்
பூதத்தின் சிறையிலிருந்து விடுவித்தான்;
இந்த நிகழ்வை "திருச்செந்தூர் பிள்ளைத் தமிழில்"
பகழிக் கூத்தர் இவ்வாறு சொல்கிறார்;
"ஏர் கொண்ட பொய்கைதனில் நிற்கு மொரு பேரரிசின்
இலை கீழ் விழில் பறவையாம்
இது நிற்க நீர் விழில் கயலாம் இதன்றியோர்
இலையங்கு மிங்குமாய்ப்
பார் கொண்ட பாதியும் பறவைதா னாகஅப்
பாதியுஞ் சேல தாகப்
பார் கொண்டி ழுக்கது நீர் கொண்டி ழுக்கஇப்
படிகண்ட ததிசய மென
நீர் கொண்ட வாவிதனில் நிற்கு மொரு பேழ்வாய்
நெடும்பூதம் அதுகொண்டு போய்
நீர் கொண்ட வாவிதனில் நிற்கு மொரு பேழ்வாய்
நெடும்பூதம் அதுகொண்டு போய்
நீள் வரை யெடுத்ததன் கீழ்வைக்கும் அதுகண்டு
நீதிநூல் மங்கா மலே
சீர் கொண்ட நக்கீர னைச்சிறை விடுத்தவா
செங்கீரை ஆடிஅரு ளே
திரையெறியும் அலைவாய் உகந்தவடி வேலனே
செங்கீரை ஆடிஅருளே!"
______
No comments:
Post a Comment