Thursday, April 7, 2016

13 மாதங்கள்!

வருடத்திற்கு 365 நாட்கள்; மாதத்துக்கு 30 நாட்கள், 31 நாட்கள், 28, 29 நாட்கள் என பல வகைகளில் பிரிந்து அதை 12 மாதங்களாக ஏற்படுத்தி உள்ளனர்; எப்படி கணக்குப் போட்டு பிரித்தாலும், ஒரு வருடத்திற்கு ஒரு கால்-நாள் மீதி வருகிறது; அதாவது பூமி, சூரியனின் வட்டத்தைச் சுற்றி முடித்து, அது தொடங்கிய இடத்துக்கு வர 365-1/4 நாட்கள் ஆகி விடுகின்றது; இந்தக் குழப்பத்தை சரி செய்வதற்கு கண்டுபிடிக்கப்பட்டது தான் “லீப் ஆண்டு” அதாவது நீண்ட ஆண்டு அல்லது நீட்டிக் கொண்டிருக்கும் ஆண்டு; இது இந்த பூமியில் உள்ள மக்கள், தங்கள் வசதிக்காக ஏற்படுத்திக் கொண்டது;
இதை இப்போது ஒருவர் வேறு மாதிரி யோசித்து வைத்துள்ளார்; ஒவ்வொரு மாதமும் 28 நாட்கள்தான்; ஒவ்வொரு வாரமும் ஏழு நாட்கள் தான்; 1ம் தேதி ஞாயிற்றுக் கிழமையில் ஆரம்பிக்கும்; எல்லா மாதத்தின் கடைசி தேதியான 28ம் தேதி சனிக்கிழமையில் முடியும்; எல்லா மாதமுமே இப்படித்தான்; எந்த மாதத்தின் 28-ம் தேதியும் சனிக்கிழமை தான்; அதில் மாற்றமே இருக்காது;
இப்படிக் கணக்குப் போட்டால், வருடத்திற்கு 13 மாதம் வருகிறது; அந்த 13-வது மாதத்துக்கு ஒரு புதுப் பெயர் வைத்துவிடலாம்; இந்தக் கணக்கு நன்றாகவே இருந்தாலும், இதிலும் ஒரு சிறு குழப்பம் வருகிறது; அதாவது 28 X 13 = 364 நாட்கள் தான் வருகிறது; மீதி அந்த ஒரு நாளை என்ன செய்வது? அதற்கும் அவரே வழி சொல்லி உள்ளார்; அந்த ஒரு நாளை கணக்கிலேயே எடுத்துக் கொள்ளாமல் ஜீரோ நாளாக வைத்துக் கொண்டு, அதை புதுவருடப் பிறப்பாக கொண்டாடி விடுவது; அதற்கு அடுத்த நாளை புதுவருடத்தின் 1-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை என்று எடுத்துக் கொள்வது; இது நல்ல யோசனையாகத்தான் தெரிகிறது;
அப்படி என்றால் அந்த ஒரு நாளை எந்தக் கணக்கில் சேர்க்க முடியும்? அது ஒரு கிழமை இல்லாத நாள்! ஒரு தேதி இல்லாத நாள்! அதாவது பெயர் வைக்காத நாள்! ஒரு அடையாளமும் இல்லாத நாள்!
ஒவ்வொரு நாளுக்கும் ஒரு பெயர் இருக்கிறது; அந்த ஏழு நாட்களுக்கும் ஒரு குணம் இருக்கிறது; அதாவது, ஞாயிறு என்றால் சூரியனின் நாள்; திங்கள் என்றால் சந்திரனின் நாள்; அதே போல் மற்ற கிரகங்களின் பெயரான செவ்வாய், புதன், குரு (வியாழன்), சுக்கிரன் (வெள்ளி), சனி;  
அப்படியென்றால், இன்று திங்கட்கிழமை என்று இருந்தால், இது சந்திரனின் நாள்; இன்று சந்திரனின் நாள்தான் என்று எதைக் கொண்டு கணிப்பது; காலண்டர் மட்டுமே திங்கள் என்று சொல்கிறது; திங்கள் கிழமையும், அடுத்து வரும் எல்லா நாட்களும் ஒரே மாதிரியான குணங்களைக் கொண்டுதான் வருகிறது; அதன் இயல்பிலோ, செயல்பாட்டிலோ ஒரு நாளுக்கும் மற்றொரு நாளுக்கும் எந்த வேறுபாடும் கண்டுபிடிக்க முடியவில்லை; ஆனால் உலகம் முழுவதும் இதில் ஒற்றுமையுடன் இருந்திருக்கிறது; வாரத்துக்கு ஏழ நாட்கள்தான் என்று வகுத்து விட்டார்கள்; எப்படி இந்த ஒற்றுமை வந்திருக்கும்? நாட்கள் ஏழு குணம் கொண்டது என்பதை எப்படி, எதை வைத்து அடையாளம் காண்பது என்று தெரியவில்லை! காலண்டரை விட்டுவிட்டால், இன்று என்ன கிழமை என்று எவராலும் சொல்ல முடியாது;
ஆனாலும் புதுக் காலண்டர் நன்றாகவே இருக்கிறது; ஆனால் அதிலும் ஒரு குழப்பம் வருகிறது; ஒரு வருடத்தில் மீதி உள்ள “கால் நாள்” கணக்கு மீதியாகியே வந்து, ஒரு நான்கு வருடங்களில் ஒரு முழு நாளாக மாறிவிடும்; அந்த கொசுறு நாளை என்ன செய்யலாம்? அதையும் வருடப்பிறப்பு நாளுடன் சேர்த்து ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை “இரண்டு நாட்கள் புதுவருடம்” கொண்டாடலாம்! ஆனால், அந்த நாட்களை அடையாளப்படுத்த என்ன செய்யலாம்? புதுவருட ஒரு நாளை ஜீரோ என்று சொல்லி விடலாம்; ஐந்து வருட கொசுறு நாளை பதுவருட “டபுள் ஜீரோ நாள்” என்று கம்யூட்டர் முதலியவை அடையாளம் காட்டும்;
இந்தமாதிரி மண்டையைப் பிய்த்துக் கொள்வதற்காகவே கடவுள் இவ்வளவு குழப்பமாக நாட்களை வைத்திருக்கிறார்; அல்லது பூமி சுற்றுவதை ஒரு சரியான கணக்குக்குள் அடங்காமல் வைத்திருக்கிறார்;
_______



No comments:

Post a Comment