தென்நாட்டில் சுவர்ணவதி என்னும் நகரில் பெரும் செல்வந்தரான
வர்த்தமானன் என்ற வணிகன் இருந்தான்;
அவனின் சுற்றத்தார், அவனைக் காட்டிலும்
செல்வம் அதிகம் உடையவராய் இருந்தனர்; அதைப் பார்த்து,
இவனும் அவர்களைவிட அதிகச் செல்வம் ஈட்ட வேண்டும் என்று ஆசை கொண்டான்;
"செல்வம் உடையவன் பிராமணனைக் கொன்றானாயினும்
பெருமதிப்பு பெறுகின்றான்;
செல்வம் இல்லாதவன் உயர்ந்த குலமுடையவனாயினும்
இகழப்படுகின்றான்".
தான் வைத்திருக்கும் சொற்ப திரவியத்தைப் பெருந்திரவியம்
என்று மதித்துத் தேடாமல் இருப்பனுக்கு விதியும் விரோதியே!
அற்பம் அற்பமாகத் தேடித் திரவியத்தை வளர்த்தல் வேண்டும்; சிறிது சிறிதாக வீழும்
மழைத்துளியினால் ஒரு குடம் நிறையவில்லையா?
பிறந்த இடத்திலேயே வசித்தல், விதிவசம் என்று இருத்தல், தன்னைக் குறைவில்லாதவனாக எண்ணுதல், முயற்சி இன்மை
என்பன திரவியத்தை தேடுவதற்கு இடையூறு ஆகும்;
திரவியத்தை தேடவேண்டும்; தேடியதைக் காத்தல் வேண்டும்; காத்ததை வளர்த்தல் வேண்டும்; வளர்த்ததைத்
தக்கார்க்குக் கொடுத்தல் வேண்டும்; இதுவே உலக நியதி;
இதை மனதில் கொண்ட அந்த வாணிகன், மேலும் வாணிகம் செய்ய
துணிந்து, ஒரு வண்டியில் பலவித பொருள்களை நிறைத்துக் கொண்டு
"சஞ்சீவகன், நந்தகன்" என்னும் இரண்டு மாடுகள்
பூட்டிய வண்டியில் காசுமீரக தேசம் செல்கிறான்:
அவ்வாறு போகும்போது,
காட்டுவழியில், சஞ்சீவகன் (வண்டியின் ஒரு
மாடு) முழங்கால் ஒடிந்து விடுகிறது; இந்த மாட்டால் நடக்க
முடியவில்லை; மூன்று கால்களில் நிற்கிறது;
"புத்திமான் எவ்வித முயற்சி செய்தாலும், விதியின் பயனே பயனாகி
முடிகின்றது; எந்தச் செயலுக்கும் இடையூறாக உள்ள சந்தேகத்தைக்
கைவிட்டு செயலுக்குறிய காரியங்களைச் செய்ய வேண்டும்" என்று அந்த வாணிகன்
சிந்தித்து, அந்த சஞ்சீவகன் என்னும் ஒரு மாட்டை அங்கேயே
காட்டிலேயே விட்டுவிட்டுப் போகிறான்;"
மூன்று கால்களுடன் சஞ்சீவகன் மாடு காட்டில் திரிகிறது:
"நூற்றுக்கணக்கான அம்புகள் தைத்தாலும் இறக்கும் காலத்திலன்றி
ஒரு பிராணியும் இறக்க மாட்டாது;
இறக்கும்காலம் சமீபித்ததாயின், தருப்பை நுனி தீண்டினும்
இறந்தே விடும்."
முழந்தாள் ஒடிந்தும் சஞ்சீவகன் இறவாமல் அந்தக் காடுகளிலே இட்டப்படி
திரிந்து, வேண்டும்
உணவுகளை உண்டு, சரீரம் கொழுத்து திரிந்தது; ஒரு நாள் அது நீர் அருந்த பக்கத்தில் உள்ள ஓடைக்கு சென்று நீரை அருந்தும் போது,
பெருத்த சத்தத்துடன் உங்காரம் செய்தது; அதை கேட்ட
அங்கிருந்த சிங்கம் (இந்த சிங்கத்தின் பெயர் பிங்களகன்) பயந்து அச்சம் கொண்டு நீர்
அருந்தாமல் தன் இடத்துக்கே திரும்ப ஓடிவந்துவிட்டது;
பிங்களகன் (சிங்கம்) இவ்வாறு பயந்து ஓடிவந்ததைக் கண்ட இரண்டு
நரிகள் (தமனகன், கரடகன்) பார்த்து விட்டன;
அதில் ஒரு நரியான தமனகன், மற்றொரு நரியான கரடகனைப் பார்த்து,
"ஏன் இந்த சிங்கம் திரும்ப ஓடிவந்து பயத்துடன் இருக்கிறது?"
என்று கேட்கிறது;
"இந்த சிங்கத்தின் செயலை விசாரிப்பதால் ஆவது என்ன? நாம் ஒரு குற்றமும் செய்யமலேயே,
இந்த சிங்கத்திடம் அவமானப்பட்டு துயரில் இருக்கிறோம்! அதற்கு சேவகம்
செய்யும் நமக்கு சுகம் எப்படி வரும்? பிறருக்கு தொண்டு செய்து
பொருள் பெற விரும்பும் மூடனுக்கு சரீர சுதந்திரம் ஏதும் இல்லை! அவன் குளிரையும்,
காற்றையும், வெயிலையும் அனுபவிக்கிறான்! அவர்களை
நோக்கி, நில் என்றும், செல் என்றும்,
சொல் என்றும், சொல்லாதே என்றும், இப்படியாக தலைவர்கள் அடிக்கடி கட்டளை இடுகிறார்கள்!
"சேவகர் மௌனமாய் இருப்பாராயின் மூடர் என்கின்றனர்;
சேவகர் பேசுவாராயின் பித்தர் என்கின்றனர்;
பயந்து நடப்பாராயின் பயந்தவர் என்கின்றனர்;
பக்கத்திலே நிற்பாராயின் வெட்கமில்லாதவர் என்கின்றனர்;
தூரத்தில் நிற்பாராயின் அகங்காரமுடையவர் என்கின்றனர்;
அவர்,
தாம் உயரும் பொருட்டு நம்மைத் தாழ்த்துவர்;
சீவனத்தின் பொருட்டு உயிரை விடுவர்;"
இதை கேட்ட மற்றொரு நரியோ,
"நம்முடைய சேவகம் இல்லாமல் அரசனுக்கு மகிமை எப்படி வரும்? என்றது;
"செய்யத்தகுந்த காரியங்களில் புகுதல் நல்லது;
செய்யத்தகாத காரியங்களில் பிரவேசிப்பவன் ஆப்பிழுத்த குரங்குபோல
மரணம் அடைவான்!" என்றது;
**