Tuesday, December 8, 2015

கேன் குடிநீர்

கேன் குடிநீர் காலச்சாரம்

கேன் குடிநீர் குடிக்கும் பழக்கம் நமக்கு எப்போது வந்தது என்று நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது; நினைவு தெரிந்த நாளிலிருந்தே “கேன் வாட்டர்தான்” என்ற பெருமையும் நமக்கு உண்டு;

இந்த கேன் கொடுத்து கேன் வாங்கிக் கொள்வது அன்றாட எல்லா வீடுகளிலும் நடக்கும் சென்னை கலாச்சாரம்; பழைய காலங்களில், ரயில்வரும்போது ஒரு சாவி வளையத்தை டிரைவரிடம் கொடுத்துவிட்டு இன்னொரு சாவி வளையத்தை டிரைவரிடமிருந்து வாங்கிக் கொள்வது பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் த்ரிலிங்காகவும் இருக்கும்; இப்போது நான் கேன் கொடுத்து கேன் வாங்குவது இந்த முறைதான்; பாட்டிலில் பால் வாங்கும்போது கூட இதே கொடுக்கல்-வாங்கல் கலாச்சாரம்தான்;

கேன் தண்ணீர் வெள்ளையாக இருக்கும்; சில கம்பெனி தண்ணீ சற்று இனிப்பாகவும் இருக்கும்; இதில் பழகிவிட்டால், வேறு தண்ணீர் குடிக்கவே பிடிக்காது; நீரைக் காய்ச்சி குடிக்க வேண்டும் என்று அறிவுரை கூறும் டாக்டரும் இந்த வெள்ளையாக உள்ள கேன் தண்ணீர்தான் குடிக்கிறார்; இப்படியாக சென்னையே இந்த கேன் தண்ணீருக்கு அடிமை;

இப்போதுதான், வெள்ளம் பெருக்கெடுத்த ஓடியதே; இனி எதற்கு கேன் தண்ணீர்? பேசாமல், அரசாங்கமே, ஏரித் தண்ணீரை சுத்தப்படுத்தி பைப்புகளில் குடிதண்ணீராகவே (நிஜமான குடிநீராக) விட்டால் இந்த பிளாஸ்டிக் கேனை விட்டொழித்து விடலாம்; இதனால் ஒரு லட்சம் குடும்பங்கள் பிழைத்துக் கொண்டிருக்கிறது என்று அல்ஜீப்ரா சொல்லாமல், அவர்களை வேண்டுமானால், ஏரித் தண்ணீரை சுத்தப்படுத்தும் வேலைக்கு வைத்துக் கொள்ளலாம்!

சென்னையில் குடிநீர் குழாயில் தானாக தண்ணீர் கொட்டும் நாள் எந்தநாளோ? வருண பகவான் கொடுத்தார்; ஆனால் அதை நாம் ஓட்டைக் கையில் வாங்கி ஒழுக விடுகிறோம்; இந்த பாவம் நம்மை சும்மா விடாது;

ஒரு பழைய பழமொழி; "ஆற்றோடு தண்ணீர் வழிந்து ஓடினாலும், நாய் நக்கித்தான் குடிக்கும்."

 ___________

No comments:

Post a Comment